356. காதலர் அழுத கண்ணீர்
பாடியவர்: கதையங் கண்ணனார் (356). இவர் இயற்பெயர் கண்ணன். இவர் கதையன் என்பவரின் மகனாகையால் கதையன் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் புறநானூற்றில் உள்ள 356-ஆம் பாடல் ஒன்றுதான். சிலர் புறநானூற்றில் உள்ள 356-ஆம் பாடலை இயற்றியவர் தாயங்கண்ணனார் என்று கூறுவர்.
பாடலின் பின்னணி:
உலகத்து
மக்களெல்லாம் முடிவில் அடையும் இடம் சுடுகாடுதான். அச்சுடுகாடு மக்களுக்கு எல்லாம் முடிவிடமாகி அவர்களை
வெற்றி காண்கிறது. ஆனால், சுடுகாட்டை வென்றவர்கள் யாருமில்லை என்று கூறி வாழ்க்கையின்
நிலையாமையைப் புலவர் கதையங் கண்ணனார் இப்பாடலில் நினைவு கூர்கிறார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப்
பாதுகாத்தல்.
துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.
களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் 5
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
அருஞ்சொற்பொருள்:
1.
களரி = கலர் நிலம்’ காடு. 2. கூகை = கோட்டான் (ஆந்தை); பேழ் = பெருமை; பேழ்வாய் = பெரியவாய்.
3. ஈமம் = பிணம் சுடுவதற்கு அடுக்கும் விறகடுக்கு; விளக்கு = ஒளி. 4. மஞ்சு = வெண்மேகம்
(இங்கு வெண்மேகம் போன்ற புகையைக் குறிக்கிறது); முதுகாடு = சுடுகாடு. 6. சுடலை = சுடுகாடு; நீறு = சாம்பல். 7. புறன் = புறம்
= முதுகு.
கொண்டு கூட்டு:
முதுகாடு
பரந்து, போகி, அஞ்சுவதன்று; கண்ணீர் அவிப்ப, உலகத்துத் தானாய்க் காண்போர்க் காண்பறியாது
எனக் கூட்டுக.
உரை: களர் நிலம்
பெருகிக் கள்ளி முளைத்தது. பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தாலும்
சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை வரவழைக்கிறது. இறந்தவர்களை மனத்தால் விரும்புபவர்கள்
அழுவதால் சொரிந்த கண்ணீர், எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டிலுள்ள சாம்பலை அவிப்ப, எல்லாரையும்
வெற்றிகண்டு உலகத்து மக்கட்கெல்லாம் தானே முடிவிடமாகிய சுடுகாடு, தன்னை வெற்றி காண வல்லவர்களைக் கண்டதில்லை.
சிறப்புக் குறிப்பு:
இப்பாடல் ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தது என்று
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர். இப்பாடலில், மகள்
கேட்டு வருவதோ, அவளைத் தர மறுப்பதோ கூறப்படாததால் இப்பாடல் ‘மகட்பாற் காஞ்சி’ என்னும்
துறையைச் சார்ந்தது அன்று என்பது இந்நூலாசிரியரின் கருத்து. இப்பாடலும் இதை அடுத்துவரும்
எட்டுப் பாடல்களும் நிலையாமையைக் கூறும் ‘பெருங்காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.
No comments:
Post a Comment