348. வருந்தின எம் பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர். இவரைப்
பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓரூரில் உள்ள பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்ள விரும்பி வந்தவர்களுக்கு அப்பெண்ணின் தந்தையும் தமையன்மாரும் அவளை மணம் செய்விக்க மறுத்ததால் போர் நிகழ்வது உறுதியாகியது. பெண்ணை விரும்பி வந்தவன் போருக்கு ஆயத்தமாக யானைகளைக் கொண்டுவந்து அவ்வூரில் உள்ள மரங்களில் கட்டினர். யானைகளைக் கட்டியதால் மரங்களின் வேர்கள் அசைந்தன. இதைக்கண்ட புலவர் பரணர், ’இப்பெண்ணை இவள் தாய் பெறாதிருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே!’ என்று இரங்குவதை இப்பாடலில் காணலாம்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி.
”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு
நிற்றல்.
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
கள்ளரிக்கும் குயம் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன 5
குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே. 10
அருஞ்சொற்பொருள்:
1.
அரிஞர் = அறுப்பவர்; தண்ணுமை = ஒருவகைப் பறை, உடுக்கை, முழவு; வெரு = அச்சம்; வெரீஇ
= அஞ்சி. 2. கண் = கணு; மடல் = பனை முதலியவற்றின் ஏடு; தீ = இனிமை; இரியல் = விட்டுப்
போதல். 3. கள் = தேன்; அரித்தல் = வடித்தல்; குயம் = குயவர் சேரி. 4. சீவும் = பிடிக்கும்;
சேரி = தெரு, ஊர். 5. வாய்மொழி = உண்மை மொழி. 6. உண்கண் = மை தீட்டிய கண். 7. ஆனாது = அமையாது; ஏற்படாது; 8.
வயின் = இடம். 10. மன் = மிகுதி.
கொண்டு கூட்டு:
வருந்தின
எம் பெருந்துறை மரனே; ஊணூர் அன்ன இவளைத் தாயே ஈனாள் ஆயினளாயின் ஆனாது எனக் கூட்டுக.
உரை: வெண்ணெல்லை
அறுப்பவர்கள் இசைக்கும் முழவின் ஒலியைக் கேட்டு அஞ்சி, மரங்களின் கணுக்களில் கட்டியிருந்த
தேன் கூட்டிலிருந்த தேனீக்கள் விலகியதால் தேனடையில் உள்ள தேனை எடுக்கும் குயவர் சேரியும்,
சில சிறுமீன்களைப் பிடித்து உண்ணும் பாணர்களின் சேரியுமுடைய ஊர் ஊணூர். அவ்வூரில் வாழும் தழும்பன் உண்மை பேசுபவன் (சொன்ன
சொல் தவறாதவன்). இப்பெண் அவ்வழகிய ஊரைப் போன்றவள். இவளை மணம் செய்துகொள்ள விரும்பிவேந்தர்
பலரும் வந்தனர். அவர்களுடைய நெடிய தேர்கள் மரங்களின் நிழலில் நிறுத்தப்பட்டிருக்கின்றன;
சிவந்த நெற்றியையுடைய யானைகள் அங்குள்ள இடங்களிலெல்லாம் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த யானைகள் கட்டப்பட்டிருப்பதால் எங்கள் ஊரில்
பெருந்துறையில் உள்ள மரங்களின் வேர்கள் அரிந்து மிகவும் கெட்டன. குவளை மலர் போன்ற, மைதீட்டிய கண்களையுடைய இம்மகளை இவள் தாய் பெறாமல் இருந்திருப்பாளாயின்
இந்த நிலை வந்திருக்காது.
சிறப்புக் குறிப்பு:
அறுவடைக்கு முன் வயலில் உள்ள பறவைகளை வெருட்டுவதற்காகத்
தண்ணுமையை முழக்குவது வழக்கிலிருந்து என்று இப்பாடலிலிலிருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment