Tuesday, October 23, 2012

354. நாரை உகைத்த வாளை


354. நாரை உகைத்த வாளை

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓரூரில் இருந்த அழகிய இளம்பெண் ஒருத்தியை மணம் செய்துகொள்ள விரும்பி மற்றொரு ஊரிலிருந்து ஒருதலைவன் வந்தான்.  அப்பெண்ணின் தந்தை அவளை அவனுக்குத் தர மறுத்துப் போருக்கு ஆயத்தமானான். போருக்குப் போகுமுன் வேலை நீராட்டுவது மரபு.  அம்மரபிற்கேற்ப, வேலை நீராட்டுவதற்கு வீரர்கள் பலரும் வந்தனர்,  போர் தொடங்கப் போவது உறுதியாயிற்று.  இந்த அழகிய பெண்ணின் இளமையும், மகிழ்ச்சி நிறைந்த பார்வையும் இவ்வூர் அழிவதற்குக் காரணமாகிவிடுமோ என்று புலவர் பரணர் வருந்தி இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
கயலார் நாரை உகைத்த வாளை                                                        5

புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே.                                             10


அருஞ்சொற்பொருள்: 1. அரைசு = அரசு (அரசன்); தலைவருதல் = தோன்றுதல்; ஆனா = அமையாத. 2. நிரைத்தல் = ஒழுங்காக நிறுத்தல்; காழ் = காம்பு; எஃகம் = வாள், வேல் போன்ற படைக் கருவிகள். 3. புரையோர் = பெரியோர் (போரில் சிறந்த பெரியோர்). 4. அமர்தல் = பொருந்துதல். 5. ஆர்தல் = உண்ணுதல்; உகைத்தல் = செலுத்துதல். 6. ஒய்தல் = விட்டு நீங்குதல். 7. கவின் = அழகு. 8. சுணங்கு = தேமல்; அணந்து = அண்ணாந்து, நிமிர்ந்து; ஏந்தல் = உயர்ச்சி. 9. இறை = சந்து  (உடல் உறுப்புகள் சேரும் இடம், மூட்டு); பணை = பருத்த. 10. பிணை = பெண்மான்.

கொண்டு கூட்டு: எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்; மடந்தை மடநோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல் எனக் கூட்டுக.

உரை: அரசர்கள் போரிடுவதற்கு வந்தாலும் அடங்காதவன் இப்பெண்ணின் தந்தை. நன்றாகக் காம்போடு பொருந்திய வேலை போருக்குமுன் நீராட்டுவதற்கு, போரில் சிறந்த பெரியோர்கள் வந்து கூடியவுடன் இப்பெண்ணின் தந்தையும் அவர்களுடன் சென்றான்.  வயல்கள் சூழ்ந்த கழனிகட்கு வாயிலாக அமைந்த நீர்நிலையில்,  கயல் மீனை உண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீன்களை நீரில் விளையாடும் பெண்கள் பிடித்துத் தம் வளமுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்வர்.  தேமல் பரந்து உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் இளமுலைகளும் பெரும் சந்துகள் பொருந்திய மூங்கில் போன்ற தோள்களுமுடைய இப்பெண்ணின் மான் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையால் இவ்வூர் தன் அழகை இழக்கும் நிலை வருமோ? 
சிறப்புக் குறிப்பு: நாரையால் துரத்தப்பட்ட வாளைமீன் நீராடும் பெண்களின் கையில் சிக்கிக் கொண்டதுபோல், இவ்வூர் அழகை இழந்தால் இப்பெண் அரசர்களுக்கு அல்லாமல் வேறு யாராவது ஒருவனை மணந்துகொள்ளும் நிலை வரலாம் என்ற பொருளும் இப்பாடலில் மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

‘நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்’ என்பதிலிருந்து போர் நடைபெறப்போவது உறுதி என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கிறது.

No comments: