Tuesday, October 23, 2012

352. உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளான் !


352. உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளான் !  

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓருரில் அழகிய இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளை மணந்துகொள்ள விரும்பிய வேந்தன் மிகுந்த செல்வத்தை அப்பெண்ணின் தந்தைக்குத் தருவதாகக் கூறினான். ஆனால், அவள் தந்தை அதை ஏற்க மறுத்துவிட்டான். அவள் தமையன்மார் போர்வெறி கொண்டவர்கள். இதைக் கண்ட பரணர் இப்பாடலைப் பாடியுள்ளார்.  இப்பாடல் மிகவும் சிதைந்துள்ளதால் தெளிவாகப் பொருள் காண்பது அரிதாக உள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


தேஎங்கொண்ட வெண்மண்டையான்
வீங்குமுலை . . . . . கறக்குந்து
அவல்வகுத்த பசுங்குடையால்
புதல்முல்லைப் பூப்பறிக்குந்து
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்                               5

குன்றுஏறிப் புனல்பாயின்
புறவாயால் புனல்வரையுந்து . . . .  .
. . . . . . . . . . . . . . . நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்                               10

கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை இவளே
விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையின்
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறுகோல் உளையும் புரவியொடு . . .  . . .                      15

. . . . . . . . . . . . . .யாரே.


அருஞ்சொற்பொருள்: 1. தேம் = கள்; மண்டை = கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம். 2. கறக்குந்து = கறக்கும். 3. அவல் = பள்ளம். 4. புதல் = புதர்; பறிக்குந்து = பறிக்கும். 5. வள்ளி = தண்டு. 7. புறவாய் = மதகு; வரைதல் = நீக்கல். 8. நொடை = விலை; நறவு = கள். 9. மா = பெரிய; வண் = வண்மை (வளம்). 10. உரை = புகழ். 12. சினை = கிளை; விரிசினை = விரிந்த கிளை; துணர் = பூங்கொத்து; நாகு = இளமை. 13. சுணங்கு = தேமல்; மா = கரிய. 15. உளைதல் = மிக வருந்துதல்.

உரை: இவ்வூரில் உள்ள பெண்கள், கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெண்ணிறமான பாத்திரத்தில், மாட்டின் பருத்த முலைகளிலிருந்து பாலைக் கறக்கிறார்கள்; புதரில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்து குழியுள்ள ஓலைக்குடையில் நிரப்புகிறார்கள்; அல்லித்தண்டை வளையலாக அணிகிறார்கள். அவர்கள் நீர்நிலையை அடுத்த மணற்குன்றுகளில் ஏறி, நீரில் பாய்வதால், மதகுகள் வழியே நீர் வெளியேறுகிறது.  கள்ளை விலைப் பொருளாகக்கொண்ட, மிகுந்த வளமுள்ள தித்தனின் வெண்ணெல் விளையும் வயல்களை வேலியாகக்கொண்ட உறந்தையைப் போன்ற புகழ் மிகுந்த அணிகலன்களைக் கொடுத்தாலும், இப்பெண்ணின் தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டான்.  இவள், விரிந்த கிளைகளையுடைய இளம் வேங்கை மரத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்து ஒளியுடன் திகழும் பூக்களைப் போன்ற நுண்ணிய பல தேமல்களையும் கரிய முலைக்காம்புகளையுமுடையவள்.  இவள் தமையன்மார், சிறிய கோலுக்கு மிகவும் வருந்தும் குதிரைகளையுடயவர்கள்… இவளை மணம் செய்துகொள்பவர் யாரோ?

சிறப்புக் குறிப்பு: தித்தனின் நாடு மிகுந்த வளமுடையதாக இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது. சோழர் ஆட்சிக்குள் வருமுன்,  உறையூர் தித்தன் முதலியோரின் பாதுகாப்பிலிருந்தது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

No comments: