Sunday, November 11, 2012

357. தொக்குயிர் வௌவும்!


357. தொக்குயிர் வௌவும்!

பாடியவர்: பிரமனார்.
பாடலின் பின்னணி: ’இவ்வுலகம் மற்ற வேந்தர்களுக்கும் பொதுவானது என்று கருதாமல், தானே உலகத்தை ஆண்டவர்களும் முடிவில் இறந்தார்கள். அவர்கள் சென்ற மறுவுலகுக்கு அவர்களுடைய செல்வம் அவர்களுக்குத் துணையாகச் செல்லவில்லை. இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்கள்தான் ஒருவனுக்கு மறுவுலகுக்குத் துணையாகும்.’ என்று பிரமனார் இப்பாடலில் கூறுகிறார்.
திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி, மறக் காஞ்சியும் ஆம்.

குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள்; துணையே
வைத்தது அன்றே வெறுக்கை; வித்தும்                                               5

அறவினை அன்றே விழுத்துணை; அத்துணைப்
புணைகை விட்டோர்க்கு அரிதே; துணையழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை
இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே.


அருஞ்சொற்பொருள்: 1. மணந்த = கூடிய (சேர்ந்த); யாத்தல் = பிணித்தல்; மண் = நாடு, நிலம். 2. சுட்டுதல் = குறித்தல்; மூவர் = சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்கள். 3. பொதுமை இன்றி = பொதுவாக இல்லாமல். 5. வெறுக்கை = செல்வம். 6. விழு = சிறந்த. 7. புணை = தெப்பம். 8. வௌவும் = கவரும். 9. இவர்தல் = உயர்தல், செல்லுதல்; உக்கரை = மறுவுலகம் (சுவர்க்க லோகம்).

கொண்டு கூட்டு: ஆண்டிசினோர்க்கும் ஆண்டுகள் மாண்ட; வெறுக்கை துணை வைத்ததன்று; விழுத்துணை அறவினையே; அத்துணைப் புணை கைவிட்டோர்க்கு உக்கரை கொளல் அரிது எனக் கூட்டுக.

உரை: குன்றுகளோடு கூடிய மலைகளைச் சேர்த்துக் கட்டியதுபோல் காட்சி அளிக்கும்   மண்ணுலகம் (தமிழகம்) மூவேந்தர்களுக்கும் (சேர சோழ பாண்டிய வேந்தர்களுக்கும்) பொதுவென்று கருதப்பட்டாலும் அதைப் பொதுவானதாகக் கருதாமல் தமதாக ஆண்டவர்களுக்கும் வாழ்நாட்கள் கழிந்தன.  அவர்கள் சேர்த்துவைத்த செல்வம் அவர்களுடைய உயிருக்குத் துணையாகச் செல்லவில்லை. இவ்வுலகில், அவரவர் செய்யும் அறவினைகள்தான் மறுவுலகில் (இறந்த பிறகு செல்லும் மேலுலகுக்கு) அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கான வித்தாகும்.  துணைவர்கள் கூடி அழ, உயிர் கூற்றுவனால் கவர்ந்து செல்லப்படும்பொழுது, இவ்வுலகில் ஒருவன் செய்யும் அறச்செயல்கள், ஒரு ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதற்குப் பயன்படும் தெப்பம் போல் மேலுலகத்திகுச் செல்வதற்கு ஏற்ற துணையாக உள்ளன.  அறச்செயல்களை செய்யாதவர்கள் மேலுலகம் செல்வது அரிது.

சிறப்புக் குறிப்பு: சிறுசிறு குன்றுகள் பெரிய மலையோடு இணைந்து இருப்பதை “குன்றுதலை மணந்த மலை பிணித்து யாத்த” என்று புலவர் பிரமனார் குறிப்பிடுகிறார்.  தமிழகம் மூவேந்தர்களுக்கும் பொது என்ற கருத்து நிலவி இருந்தாலும்,  மூவேந்தர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டுத் தமிழகம் முழுதையும் தமது ஆட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர் என்பதைத்தான் நமது வரலாறு காட்டுகிறது.

நல்வினைகள் செய்தவர்கள் இறந்த பிறகு துறக்கவுலகத்திற்குச் (சுவர்க்க லோகத்திற்குச்) செல்வார்கள் என்ற கொள்கை பல மதங்கங்களில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. சுவர்க்க லோகம் என்பது வேறு, வீடு என்பது வேறு. மனிதன் பற்றுக்களை முற்றிலும் அறுத்து, நல்வினையும் தீவினையும் அற்ற நிலையை அடைந்தால் அவன் வீடுபேறு (வீட்டுலகம் அல்லது மோட்சம்) அடைந்ததாகக் கருதப்படுகிறான். வீடுபேறு பெற்றவர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடைந்தவர்கள் என்று இந்து மதமும் அதன் முன்னோடியாகவிருந்த வைதீக மதமும் கூறுகின்றன. வீடுபேறு என்பது துறக்கவுலகத்திற்கும் அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக,

            யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
            உயர்ந்த உலகம் புகும்.                                                                    (குறள் – 346)

என்னும் குறளில், துறவறம் பூண்டு பற்றுக்களை முற்றிலும் விட்டவர்கள் அடையும் வீட்டுலகம், வானோர்களாகிய தேவர்கள் வாழ்கின்ற தேவலோகத்திற்கும் உயர்ந்ததாகக் கூறுகிறார்.

சங்க காலத்தில், ‘இது’ என்னும் சொல் அருகில் இருக்கும் பொருளையும், ’அது’ என்னும் சொல் தொலைவில் இருக்கும் பொருளையும், ’உது’ என்னும் சொல் அருகிலும் இல்லாமல் தொலிவிலும் இல்லாமல் இடையில் இருக்கும் பெருளையும் குறிப்பதற்க்கு ஏற்ற சொற்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஆகவே, இப்பாடலில் உக்கரை என்று குறிப்பிடப்பட்டது, மண்ணுலகுக்கும் வீட்டுலகுக்கும் இடைப்பட்டதாக உள்ள துறக்கவுலகத்தைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

இப்பாடலில், மறக்காஞ்சிக்கு ஏற்ற கருத்துகள் எதுவும் காணப்படவில்லை. நிலையாமையைப் பற்றிய கருத்துகள் மட்டுமே காணப்படுவதால், இப்பாடல் பெருங்காஞ்சி என்னும் துறையை மட்டுமே சார்த்தாகக் கருதுவதே சிறந்ததாகத் தோன்றுகிறது.

No comments: