347. வேர் துளங்கின நம்ஊருள் மரனே!
பாடியவர்: கபிலர். இவரைப்
பற்றிய குறிப்புக்களைப் பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி:
ஒரு தலைவனின் மகளை மணம் செய்துகொள்ள
விரும்பிப் பல வேந்தர்களும் அவளுடைய ஊருக்குத் தம் படையோடு வந்தனர். அவர்கள் தங்கள்
யானைகளை அங்குள்ள மரங்களில் கட்டினர். அந்த மரங்கள் பெரியவையாகவிருந்தாலும் யனைகளைக்
கட்டியதால் அவை வேருடன் அசையத் தொடங்கின. அப்பெண்ணின் தந்தைக்கும் அவளை மணம் செய்துகொள்ள
வந்தவர்களுக்கும் இடையே நடைபெறும் போரால் அந்த ஊர் என்ன ஆகுமோ என்று கபிலர் வருந்துகிறார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி.
”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு
நிற்றல்.
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பஃறேர்பு கோலச் சிவந்தாங்கு
ஒளிறுஒள் வாள் அடக்குழைந்த பைந்தும்பை
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்,
மணநாறு மார்பின் மறப்போர் அகுதை 5
குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை சேப்ப
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே; நன்றும்
விளங்குறு பராரைய ஆயினும் வேந்தர் 10
வினைநவில் யானை பிணிப்ப
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
அருஞ்சொற்பொருள்:
2.
பஃறேர்பு = பல்+தேர்பு; தேர்பு = தேர்ந்து, ஆராய்ந்து; கோலல் = சூழ்தல், வளைத்தல்.
3. குழைதல் = வாடல்; பை = பசிய. 4. கது = வடு. 5. அகுதை = ஒருமன்னன். 6. குண்டு = ஆழம்;
வரைப்பு = எல்லை; கூடல் = ஓரூர். 7. குவை = திரட்சி; இரு = கரிய; சேப்பு = சிவப்பு.
10. பராரை = பருத்த அடி. நவிலல் = கற்றல், பழகுதல். 12. துளங்குதல் = அசைதல்; மரன்
= மரம்.
கொண்டு கூட்டு:
மரன்
பராரையாயினும், வேந்தர் யானை பிணிப்ப, வேர் துளங்கின; ஆகலின், என்னாவது கொல் எனக் கூட்டுக.
உரை: மணமுள்ள கள்ளை
உண்பவன் அதற்குத் துணையாக சில தொடுகறிகளையும் தின்றதனால், பல்லின் இடுக்குகளில் சிக்கிக்
கொண்ட துணுக்குகளைத் துழாவி எடுத்ததால் சிவந்த நாவைப் போலச் சிவந்த, ஒளிபொருந்திய வாளால்
பகைவரை எதிர்த்து வெட்டியதால், வாடிய தும்பைப் பூமாலையும், பகைவரைத் தாக்கியதால் இலைன
முரிந்து ஒடிந்த வேலையும், சந்தனம் கமழும் மார்பையும் உடைய, வலிய போர்செய்யும் அகுதை
என்பவனின் ஆழமான, நீர்நிறைந்த கடலை எல்லையாகக்
கொண்ட கூடல் நகர் போன்றவள் இப்பெண். திரண்ட
கரிய கூந்தலை உடைய இந்தப் பெண்ணின் இளைய மார்பகங்கள் சிவக்குமாறு .. .. இவளை மணம் செய்துகொள்ள
விரும்பி வேந்தர் பலரும் வந்தனர். போர்த்தொழிலில் பயிற்சிபெற்ற யானைகளை அவர்கள் நம்
ஊரில் உள்ள மரங்களில் கட்டினார்கள். அந்த மரங்கள் பருத்த அடிமரங்களோடு விளங்குபவையாக
இருந்தாலும், யானைகளைக் கட்டியதால், அந்த மரங்களின் வேர்கள் அசைந்தன. அதனால் இவ்வூர் என்ன ஆகுமோ?
சிறப்புக் குறிப்பு:
இப்பாடலில்
குறிப்பிடப்பட்டிருக்கும் கூடல் என்னும் ஊர் தமிழ் நாட்டிலுள்ள கடலூர் என்னும் ஊராக
இருக்கலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களின் கருத்து.
No comments:
Post a Comment