350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்:
மதுரை
மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார். மேலைக்கடை என்பது தென்பாண்டி நாட்டில் உள்ள
ஓரூர். இப்புலவர் மேலைக்கடையைச் சார்ந்தவர்;
மதுரையில் தங்கியிருந்தவர். கண்ணீர் சொரிந்தவரை ‘கண்அம்பு உகுத்தார்’ என்று பாடியதால்
‘கண்ணம்புகுத்தார்’ என்ற அடைமொழி இவர் இயற்பெயராகிய ஆயத்தனார் என்பதோடு சேர்த்து, இவர்
மதுரை மேலைக்கடை கண்ணம்புகுத்தார் ஆயத்தனார் என்று அழைக்கப்பட்டார்.
பாடலின் பின்னணி:
ஓரூரில் அகழி, மதில் ஆகியவை ஏற்கனவே
அழிந்துள்ளது. அங்கு அழகிய இளம்பெண் ஒருத்தி
உள்ளாள். அவளை மணக்க விரும்பி வேந்தன் ஒருவன் ஆவலுடன் அங்கு வந்துள்ளாள். அவளை மணம் செய்விக்க மறுத்தால் போர் செய்யத் தயங்கமாட்டான்
போலிருக்கிறது. அப்பெண்ணின் தமையன்மார் அவளை மணம் செய்விக்க மறுத்துப் போரிடுவர் போல்
உள்ளது. ஏற்கனவே அழிந்துள்ள இவ்வூர் என்ன ஆகுமோ என்று மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார்
ஆயத்தனார் வருந்தி இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை:
மகட்பாற்
காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு
மாறுபட்டு நிற்றல்.
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே தாங்காது
படுமழை உருமின் இரங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்துஎம் 5
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போருழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடிபிறழ் முன்கை இளையோள் 10
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.
அருஞ்சொற்பொருள்:
1.
கிடங்கில் = அகழி; ஞாயில் = பகைவர்களை நோக்கி அம்பு எய்துவதற்காக மதில் சுவற்றில் உள்ள
துளைகள்; 2. இஞ்சி = மதில்; மூதூர் = பழைய ஊர்; கதுவாய் = வடுவாய். 4. படுதல் = ஒலித்தல்;
மழை = மேகம்; உரும் = இடி. 5. கடு = விரைவு; மான் = குதிரை. 6. கொட்குதல் = திரிதல்.
7. உழத்தல் = செய்தல். 8. அடுதல் = வெல்லுதல், கொல்லல்; முரண் = வலி, மாறுபாடு; முன்பு
= வலிமை; தன்னையர் = தமையன்மார். 9. உண்கண் = மைதீட்டிய கண். 11. அணி = அழகு; ஆகம்
= மார்பு; சுணங்கு = தேமல்.
கொண்டு கூட்டு:
சுணங்கு
அரும்பியவாகலின், வேந்தர் கொட்குவர்; அமைகுவரல்லர்; மூதூர் தாங்காதாகலின் யாங்காவது
கொல் என கூட்டுக.
உரை: இப்பெண்ணின்
அழகிய, நல்ல மார்பகத்தில் தேமல் தோன்றியது (இப்பெண் திருமணத்திற்கேற்ற பருவம் அடைந்தாள்.).
இவள், மிகுந்த வலிமையுடைய தன் தமையன்மாருக்குப் போரில் வெற்றியைத் தரும் வேலைப் போன்ற
சிவந்த, மை தீட்டிய கண்களையும், வளையல்கள் தவழும் கைகளையும் உடையவள். இவளை மணம் செய்துகொள்ள விரும்பி, ஒலிக்கும் மேகத்தினின்று
தோன்றும் இடிபோல் முழங்கும் முரசையும், விரைந்து செல்லும் குதிரைகளையுமுடைய வேந்தர்கள்
காலையிலிருந்து எங்கள் ஊரின் நெடிய வாயிலிடத்துச்
சுற்றித் திரிகிறார்கள். பெண் தர மறுத்தால் போர் செய்யாமல் போகமாட்டார்கள் போலிருக்கிறது.
தூர்ந்துபோன அகழியையும், தளர்ந்துபோன ஞாயில்களையும் (பகைவர்களை நோக்கி அம்பு எய்துவதற்காக
மதில் சுவற்றில் உள்ள துளைகளையும்), இடிந்த மதிலையுமுடைய இவ்வூர் ஏற்கெனவே அழிந்துள்ளது.
இப்பழைய ஊர் மேலும் போரைத் தாங்காதாகலின்,
என்ன ஆகுமோ?
சிறப்புக் குறிப்பு:
’கதுவாய்
மூதூர்’ என்பது ஏற்கெனவே பகைவர் செய்த செயல்களால் வடுப்பட்ட பழைய ஊர் என்பதைக் குறிக்கிறது.
இவ்வூர் வலிவிழந்திருப்பதால், மீண்டும் போர் வந்தால் இவ்வூரால் தாங்கிக்கொள்ள முடியாது
என்பதைக் குறித்து வருந்தி ‘யாங்காவது கொல்’ என்று புலவர் கண்ணம்புகுத்தார் கூறுகிறார்.
2 comments:
வணக்கம்,
தலைப்பை திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பதிவு முழுமையும் தலைப்பில் உள்ளது.
நன்றி
தேமொழி அவர்களே,
வணக்கம்.
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. நீங்கள் கூறியதுபோல் தலைப்பை மாற்றிவிட்டேன்.
தொடர்ந்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
பிரபாகரன்
Post a Comment