Wednesday, October 10, 2012

349. ஊர்க்கு அணங்காயினள்!


349. ஊர்க்கு அணங்காயினள்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 55-இல் காண்க.
பாடலின் பின்னணி:
சிக்கல் என்னும் ஊர் தமிழ் நாட்டில் திருவாரூர் அருகே உள்ளது.  சோழ நாட்டு உட்பிரிவுகளில் சிக்கல் நாடு என்று ஒருநாடு இருந்ததாகவும் அதன் தலைநகரம் சிக்கல் என்னும் ஊர் என்றும், சிக்கல் என்னும் ஊர் சிக்கல் நாட்டிற்குத் தலைநகரமாக இருந்ததால் அது பெருஞ்சிக்கல் என்று அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

சிக்கல் என்னும் ஊரில் இருந்த தலைவன் தன்மகளை, அவளை விரும்பிய வேந்தன் ஒருவனுக்குக் கொடுக்க மறுத்ததால் போர் மூண்டது.  அவ்வூரில் பிறந்த பெண்ணால் அவ்வூர்க்கே அழிவு வரும் நிலை வந்ததே என்பதை நினைத்து வருந்தி இப்பாடலை மதுரை மருதன் இளநாகனார் இயற்றியுள்ளார்.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்துமொழி யலனே;
இஃதுஇவர் படிவம் ஆயின், வையெயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை                              5

மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினள்தான் பிறந்த ஊர்க்கே.


அருஞ்சொற்பொருள்: 1. நுதி = நுனி; நுதல் = நெற்றி; வியர் = வியர்வை. 2. கடிய கூறுதல் = கடுஞ் சொற்களைக் கூறுதல். 3. நெடிய மொழி = வஞ்சினம். 4. படிவம் = கொள்கை; வை = கூர்மை; எயிறு = பல். 5. அரி = வரி; மதர்த்தல் = செழித்தல்; மழை = குளிர்ச்சி; அம் = அழகு; மா = மாமை (கரிய நிறம்); அரிவை = இளம்பெண். 6. அணங்கு = வருத்தம்.

கொண்டு கூட்டு: வேந்து, துடையாக் கூறும்; தந்தையும் பணிந்து மொழியலன்; இவர் படிவம் இஃது ஆயின், இவள் மரம்படு சிறுதீப்போல ஊர்க்கு அணங்காயினள் எனக் கூட்டுக.

உரை: தன் வேலின் இலையால் தன் நெற்றியில் உள்ள வியர்வையைத் துடைத்து, வேந்தன் கடுஞ்சொற்களைக் கூறுகிறான்.  இப்பெண்ணின் தந்தையும் வஞ்சினம் கூறுகிறானே ஒழியப் பணிந்து பேசவில்லை.  இதுதான் இவர்களின் கொள்கையானால், கூர்மையான பற்களையும், செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையுமுடைய, கரிய நிறமுள்ள இந்த அழகிய இளம்பெண், மரத்திலே தோன்றிய தீ மரத்தையே அழிப்பதுபோல் தான் பிறந்த ஊருக்கு வருத்தம் விளைவிப்பவளாயினாள் (என்பது உறுதி).

சிறப்புக் குறிப்பு: இளம்பூரணர் என்பவர் பதினொன்று அல்லது பன்னிரண்டாம்  நூற்றண்டில் வாழ்ந்த தமிழறிஞர். அவர் தொல்காப்பியம் முழுவதற்கும் ஒருசிறந்த உரை எழுதியுள்ளார். அவருடைய உரையில், மகட்பாற் காஞ்சி என்னும் துறைக்கும் விளக்கம் அளிக்குமிடத்தில் இப்பாடலை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.  மற்றும், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண், பெருஞ்சிக்கல் கிழான் என்பவனின் மகள் என்றும் கூறுகிறார்.

No comments: