Tuesday, October 23, 2012

353. ’யார் மகள்?’ என்போய், கூறக் கேள்!


353. ’யார் மகள்?’ என்போய், கூறக் கேள்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 57-இல் காண்க.
பாடலின் பின்னணி:  அழகிய அணிகலன்களை அணிந்து அழகுடன் நடந்து செல்லும் இளம்பெண் ஒருத்தியைக் கண்ட இளைஞன் ’இவள் யார்?’ என்று புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரைக் கேட்பது போலும் அதற்கு அவர் பதிலளிப்பது போலும் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த                        
பொலம்செய் பல்காசு அணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
தருமணல் இயல்வோள் சாயல் நோக்கித்
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை                                5

வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
யார்மகள் என்போய் கூறக் கேள்இனிக்
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்                    10

தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
. . . . . . . . . . . . . .
செருவாய் உழக்குக் குருதி ஓட்டிக்
கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு                           15

பஞ்சியும் களையாப் புண்ணர்
அஞ்சுதகவு உடையர்இவள் தன்னை மாரே.

அருஞ்சொற்பொருள்: 1. ஆசு = குற்றம்; கம்மியன் = பொற்கொல்லன்; மாசு = குற்றம்; புனைதல் = செய்தல். 2. பொலம் = பொன். 3. ஈகை = பொன்; கண்ணி = மாலை; இலங்குதல் = விளங்குதல்; தைஇ = அணிந்து, சூடி. 4. தருமணல் = புதிதாகக் கொண்டுவந்து பரப்பப்பட்ட மணல்; இயலல் = அசைதல் (நடத்தல்); சாயல் = அழகு. 5. விளர்த்தல் = வெளுத்த. 6. ஆனா = அமையாத. 8. போர்பு = நெற்போர். 9. நாள் = விடியற்காலை; கடா = எருது; நனந்தலை = அகன்ற இடம்; குப்பை = குவியல். 10. அல்குதல் = தங்குதல்; பதம் = உணவு; அல்கு பதம்= (சில நாட்களுக்கு ) வைத்திருந்துண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவு. 14. செரு = போர்; உழக்குதல் = வெல்லல். 15. கதுவாய் = வடுப்படுதல்; எஃகம் = வாள், வேல் போன்ற படைக் கருவிகள். 16. பஞ்சி = பஞ்சு (புண்ணில் கட்டிய கட்டு). 17. தகவு = தகுதி. 18. தன்னைமார் = தமையன்மார்.

உரை: குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பல பொற்காசுகளைக் கொண்ட மேகலையை அணிந்து, ஓளியுடன் விளங்கும் பொன்மாலையைத் தலையில் அணிந்து, புதுமணல் பரப்பப்பட்ட தரையில் நடந்து செல்பவளின் அழகைக் கண்டு, தேரை நிறுத்திவிட்டு, வெறித்த பார்வையுடையவனாய் ‘இவள் யார் மகள்?’ என்று கேட்கும் போரில் வெல்லும் தலைவ! இப்பொழுது நான் கூறுவதைக் கேள்! 

இவள், பழங்குடிகள் நிறைந்த ஊருக்குத் தலைவனின் மகள். அத்தலைவன், குன்று போன்ற பல நெற்போர்களை எருதுகளைக்கொண்டு விடியற்காலை போரடித்து, அகன்ற இடத்தில் குவித்த நெல்லை, சிலநாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாக வலிய வில் வீரர்களுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவன்.  முன்னாள், இவளை மணந்துகொள்ள விரும்பி வந்த வேந்தர்களை, இவள் தமையன்மார்  போரில் வென்று, குருதிப் பெருகி ஓடச் செய்து,  நுனி முரிந்த வேலோடு, தங்கள் புண்களில் கட்டிய கட்டுக்களை நீக்காமல், காண்பவர் அஞ்சும் தகுதியுடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: இச்சிறிய பாடலில், பெண்ணின்  அழகையும், அவள் செல்வத்தையும், அவளை விரும்பிவந்தவனின் வீரத்தையும், தொல்குடியின் தலைவனாகிய தந்தையின் வளத்தையும் வண்மையையும், தமையன்மாரின் போர்த்திறமையையும் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் நயம்படக் கூறியிருப்பது பாராட்டத் தக்கது.

No comments: