Wednesday, October 10, 2012

351. தாராது அமைகுவர் அல்லர்!

351. தாராது அமைகுவர் அல்லர்!

பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார் (351).  தானைத் தலைவன் ஒருவன் தன் படை முற்றும் அழிந்த பிறகும், பகைவரைப் போரில் வென்றதைப் பாடியதால் இப்புலவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.  சங்க இலக்கியத்தில் இப்புலவர் இயற்றியதாகக் காணப்படும் பாடல்  புறநானூற்றுப் பாடல் 351 ஒன்றுதான்.
பாடலின் பின்னணி:  தலைவன் ஒருவன் தன் மகளை மணம் செய்விக்க மறுத்ததால் அவளை மணந்துகொள்ள விரும்பிய மன்னர்களுக்கும் அவனுக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில் அவ்வூர் அழியுமோ என்று புலவர் மதுரைப் படைமங்க மன்னியார் வருந்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

படுமணி மருங்கின பணைத்தாள் யானையும்
கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் தானை
வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்                              5

வண்கை எயினன் வாகை அன்ன
இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என்ஆ வதுகொல் தானே; தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின்                     10

காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின்இப் பணைநல் லூரே?


அருஞ்சொற்பொருள்: 1. படுதல் =ஒலித்தல்; மருங்கு = பக்கம்; பணை = பருத்த; தாள் = கால். 2. நுடங்குதல் = அசைதல்; மிசை = மேல்; மா = குதிரை. 3. துவன்றல் = நெருங்குதல், குவிதல், நிறைதல். 4. தானை = படை. 6. வாகை =  ஓரூர். 10. மருது = மருதமரம்; சினை = கிளை; முனை = வெறுப்பு. 11. காமர் = அழகு; துஞ்சுதல் = உறங்குதல். 12. ஏமம் = பாதுகாவல்; சால் = நிறைவு; பணை = மருதநிலம்.

கொண்டு கூட்டு: கடல் கண்டன்ன தானை வேந்தர் அமைகுவர் அல்லர்; நல்லூர் என்னாவது கொல் எனக் கூட்டுக.

உரை: ஒலிக்கும் மணிகள் கட்டப்பட்ட பக்கங்களையும், பருத்த கால்களையும் உடைய யானைகளும், கொடிகட்டிப் பறக்கும் தேர்களும், குதிரைகளும், படைவீரர்களும் நிறைந்த  ஆரவாரமான ஒலியுடன் கடல் போன்ற பெரிய படையையுடைய, வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் இவளைத் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளனர்.  கொடையில் சிறந்த எயினன் என்பவனின் வாகை என்னும் ஊர் போன்றவள் இவள். இவளை விரும்பி வந்தவர் இவளை அடையாது  திரும்பார்.  தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை உண்ட சிவந்த வரிகளுடைய நாரை இனிய மருதமரத்தின் பூக்கள் உள்ள கிளையில் தங்குவதை வெறுத்து, காஞ்சி மரத்தின் கிளையில் உறங்கும் பாதுகாவல் அமைந்த சிறப்பான இவ்வூர் என்ன ஆகுமோ?

சிறப்புக் குறிப்பு: வாகை என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை கூறுகிறார்.

No comments: