346. பாழ் செய்யும் இவள் நலனே!
பாடியவர்: அண்டர் மகன்
குறுவழுதி. இவர் அண்டர் நடுங்கல்லினாரின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்களுக்குக் கீழ் பணியாற்றிய தானைத்
தலைவர்களும் மற்ற தலைவர்களும் பாண்டிய மன்னர்களின் பெயர்களுள் சிலவற்றைத் தாமும் கொண்டிருந்ததாக
ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். வழுதி என்பது பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களில்
ஒன்று. இப்புலவர், பாண்டிய மன்னன் ஒருவனிடம் பணியாற்றியதால் வழுதி என்ற பெயர் பெற்றிருக்கலாம்.
இவர் புறநானுற்றில் இயற்றிய ஒருபாடல் (346) மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு
(150, 228) பாடல்களும் குறுந்தொகையில் ஒருபாடலும் (345) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி:
மறக்குடியில்
பிறந்த பெண் ஒருத்தியை மணக்க விரும்பிப் பலரும் வந்தனர். அவளுடைய தந்தையும் உடன்பிறந்தோரும் அவளை அவர்களுக்கு
மணம் செய்விக்க விரும்பாததால் போர் நிகழ்ந்தது.
அதைக் கண்ட அண்டர் மகன் குறுவழுதியார் போரால் அவ்வூர் பாழாகும் என்பதை நினைத்து
இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப்
பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.
பிறங்கிலை இனியுள பாலென மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒள்வேல் நல்லன்; அதுவாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் 5
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும்இவள் நலனே.
அருஞ்சொற்பொருள்:
1.
பிறங்குதல் = நிறைதல்; மடுத்தல் = உண்ணச் செய்தல். 4. வாயாகுதல் = உண்மை ஆகுதல்.
5. ஒக்கல் = சுற்றம். 6. விளியும் = இறக்கும்.
கொண்டு கூட்டு:
தாய்
வேண்டாள் அல்லள்; சிறாஅன் நல்லன்; பெரும் பாழ் செய்யும் இவள் நலன்; அது ஆகுதல் வாய்
எனக் கூட்டுக.
உரை: உனக்கு இன்னும்
வயிறு நிறையவில்லை. இன்னும் கிண்ணத்தில் பால் எஞ்சியுள்ளது. அதையும் குடித்து முடி. என்று கூறும் அவள் தாய்
அவளை விரும்பாதவள் அல்லள். நான் கல்வி அறிவு உடையவன் என்று கூறும் சிறுவனாகிய அவள்
உடன்பிறந்தவன் ஒளி பொருந்திய வேலோடு போர் புரிவதில் திறமையுடையவன். இந்தப் பெண்ணை மணக்க விரும்பி வந்தோர் பலரும் போரில்
இறந்தனர். இறந்தவர்களின் சுற்றத்தாரைப் பாதுகாப்பவர்
யாரும் இல்லாமல் இவ்வூர் அழிய நேரும். இவள் அழகு இச்சிறிய ஊரைப் பெரும்பாழிடமாக ஆக்கப்
போவது உண்மை.
சிறப்புக் குறிப்பு:
இப்பாடலில்,
சிறான் யார் என்பது விளங்கவில்லை. இப்பெண்ணுக்கு இச்சிறுவன் தமையனா அல்லது தம்பியா
என்பது தெரியவில்லை. பெண்ணின் தந்தையைப் பற்றி
எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறான் அவளுடைய
உடன்பிறந்தவனாகக் கருதப் படுவதால், ஒள்வேல் நல்லன் என்பது அவள் தந்தையைக் குறிப்பதாகச்
சிலர் கருதுகின்றனர். இப்பெண்ணை அன்பிலும்,
அறிவிலும், வீரத்திலும் சிறந்த ஆண்மகனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று அவள் தந்தை
விரும்பி இருக்கலாம். இதுவரை இப்பெண்னை மணம் செய்துகொள்ள வந்த ஆடவர் எவரும் இக்குடும்பத்திற்கு
ஏற்றவர்களாக இல்லாததால் போர் நடைபெற்றிருக்கலாம். இவள் தந்தை அப்போரில் இறந்திருக்கலாம்.
இப்பாடலில் பல செய்திகள் தெளிவாக இல்லாததால்,
நம் கற்பனைக்கு ஏற்றவாறு பொருள்கொள்ள வேண்டியதாக உள்ளது.
No comments:
Post a Comment