Saturday, July 30, 2011

253. கூறு நின் உரையே!

பாடியவர்: குளம்பந்தாயனார். தாயனார் என்பது இப்பாடலை இயற்றியவரின் இயற்பெயர். குளம்பன் என்பது தாயனாரின் தந்தையாரின் பெயர் என்றும், குளம்பன் மகனார் தாயனார் என்பது மருவி, குளம்பந்தாயனார் ஆகியது என்றும் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: தலைமகன் ஒருவன் போருக்குச் சென்று போர்க்களத்தில் இறந்து கிடந்தான். அவன் மனைவி அங்குச் சென்று புலம்புவதை இப்பாடலில் குளம்பந்தாயனார் குறிப்பிடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல்என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
5 வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள் ஒய்வலோ? கூறுநின் உரையே.

அருஞ்சொற்பொருள்:
1. திறம் = பக்கம்; திறத்து= பக்கத்து; அவலம் = வருத்தம். 2. வல் = வலிமை; கண்ணி = மாலை; திளைத்தல் = பொருதல் (போரிடுதல்). 3. நகாஅல் = மகிழேன்; மாறு = இறப்பு. 4.கழை = மூங்கில்; பொதி = பட்டை; விளர்ப்பு = வெளுப்பு. 6. கிளை = சுற்றம்; ஒய்தல் = செலுத்துதல், கொடுத்தல்.

உரை: இனி, நீ எனக்காக வருத்தம் கொள்ள வேண்டா. வலிய வாரால் கட்டப்பட்ட மாலையணிந்த இளைஞர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு போரிடும்பொழுது நீ அவர்களுடன் சேர்ந்து மகிழாதவாறு உனக்கு இறப்பு வந்தது. நெல் முளைக்காத பசிய மூங்கிலின் பட்டையை நீக்கியதைப்போல், வெளுத்த வளையல் நீங்கிய வெறுங்கையை தலைமேல் தூக்கி, உன் சுற்றத்தாரிடம் நீ இறந்த செய்தியைச் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன்? நீயே சொல்வாயாக.

No comments: