Saturday, July 30, 2011

258. தொடுதல் ஓம்புமதி!

பாடியவர்: உலோச்சனார்( 258, 274, 377). இவர் சோழ நாட்டில் இருந்த கண்ப வாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த போது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு – 377). இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்கள் இயற்றியதோடு மட்டுமல்லாமல், நற்றிணையில் 20 பாடல்களும், அகநானூற்றில் 8 பாடல்களும் குறுந்தொகையில் 4 பாடல்களும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், உலோச்சனார் ஒரு தலைவனுடைய ஊருக்குச் சென்றார். அவன் பகைவருடைய நாட்டிற்குச் சென்று ஆநிரைகளை மீட்டு வந்ததைக் குறித்து அங்கு உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்காக வேறொரு ஊருக்குச் சென்றிருந்தான். உலோச்சனார், கள் வழங்குபவனை நோக்கி, “முன்பு தலைவன் கந்தார நாட்டிற்குள் சென்று ஆநிரைகளைக் கொண்டுவந்து அவற்றை கள்விலைக்கு ஈடாக வழங்கினான். இன்று, மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்குச் சென்றுள்ளான். அவன் வரும்பொழுது கள் குடிக்கும் விருப்பத்தோடு வருவான். முதிர்ந்த கள் உள்ள சாடிஒன்றை அவனுக்காகப் பாதுகாத்து வைப்பாயாக.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
5 எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,
புலம்புக் கனனே, புல்அணற் காளை;
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகள் சாடி;
10 ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டுஅக் கள்வெய் யோனே.

அருஞ்சொற்பொருள்:

1. காரை = முள்ளுடன் கூடிய ஒரு செடி; பழன் = பழம்; ஏய்ப்ப = ஒப்ப. 2. தெறித்தல் = முற்றுதல்; தேம் = தேன். பச்சூன் = பசுமையான (நல்ல) ஊன்; நிறுத்த ஆயம் = கொண்டுவந்து நிறுத்திய ஆநிரை; பைந்நிணம் = பசுமையான தசை. 3. தலைச் செல்லல் = எதிர்த்துச் செல்லுதல். 5. திமிர்தல் = பூசுதல். 6. புலம் = இடம்; அணல் = தாடி. 9. தொடுதல் = உண்ணுதல். 10. துகள் = தூசி. 11. காய்தல் = உலர்தல்

உரை: அடிபக்கத்தில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று நன்கு முதிர்ந்த கள்ளையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி, வளமான ஊனைத் தின்று தன் எச்சில் கையை வில்லின் நாணில் துடைத்துவிட்டு, சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் இப்பொழுது வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை கள் குடிப்பதற்குள், அவன் ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்துவிடுவான். அவன் கள்ளை விரும்புபவன்; வரும்பொழுது மிகுந்த தாகத்தோடு வருவான். அதனால், முதிர்ந்த கள் உள்ள சாடியிலிருந்து அனைவருக்கும் கள் கொடுப்பதைத் தவிர்த்து, அக்கள்ளை பாதுகாப்பாயாக.

No comments: