Saturday, July 30, 2011

259. புனை கழலோயே!



பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார். சங்க காலத்தில், கோடைக்கானல் மலை கோடை மலை என்று அழைக்கப்பட்டது. அந்த மலையைச் சிறப்பாகப் பாடியதால், இவர் கோடை பாடிய பெரும்பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஓரூரில், ஒரு தலைவனுடைய ஆநிரைகளை அவன் பகைவரின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகள் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்த வீரர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆநிரைகளை இழந்த தலைவன் அவற்றை மீட்பதற்கு ஆவலாக இருக்கிறான். அதைக் கண்ட புலவர் பெரும்பூதனார், “பகைவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆகவே, இப்பொழுது உன் ஆநிரைகளை மீட்கச் செல்ல வேண்டாம்.” என்று இப்பாடலில் அத்தலைவனுக்கு அறிவுறை கூறிகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: செருமலைதல். பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்.

துறை: பிள்ளைப்பெயர்ச்சி. பறவைகள் குறுக்கே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இருந்தும், அதற்கு அஞ்சாது சென்று போர் செய்த வீரனுக்கு அரசன் கொடை புரிதல்.

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
5 முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே.

அருஞ்சொற்பொருள்

1. பெயர்தல் = போதல் . 2. தலை கரந்து = தம்மை மறைத்துக்கொண்டு. 3. ஒடுக்கம் = மறைந்திருத்தல். 4. செல்லல் = செல்லாதே. 5. முருகு = தெய்வம், முருகன்; புலைத்தி புலையனின் மனைவி. 6. தாவுபு = தாவி; தெறித்தல் = பாய்தல்; ஆன் = பசு.

கொண்டு கூட்டு: புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம் சிறப்பதாக எனக் கூட்டுக.

உரை: இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

No comments: