Saturday, July 30, 2011

257. செருப்பிடைச் சிறு பரல்!

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடலின் பின்னணி: இரு தலைவர்களிடையே பகை இருந்தது. ஒருவன் பசுக்களை மற்றொருவன் கவர்ந்தான். பசுக்களை இழந்தவன் அவைகளை மீட்க வந்தான். பசுக்களை கவர்ந்தவன் மீட்க வந்தவனை வென்று வெருட்டினான். வெற்றிபெற்ற தலைவன் தனக்கு உதவி செய்தவர்களோடு சேர்ந்து கள்ளுண்டு மகிழ்ந்தான். இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் கூட்டத்தில் ஒருவன், “நம் தலைவன் செருப்பில் பரல் போன்றவன். அவன் திரண்ட காலும், அகன்ற மார்பும், நல்ல மீசையும், காதளவு உள்ள தலைமுடியும், உயர்ந்த வில்லும், உடையவன். அவன் மிகவும் இரங்கத் தக்கவன். அவன் ஊரைவிட்டு எங்கும் செல்வதில்லை. அவன் பகைவர்களுக்கு அஞ்சி காடுகளை அரணாகக் கொள்வதில்லை. இன்று பகைவர்களுடைய பசுக்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவற்றைக் கவர்வதற்கு ஏற்ற சூழ்ச்சியைச் செய்து, அவற்றைக் கவர்ந்தான்.” என்று வியந்து கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
5 யார்கொலோ அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே; காலைப்
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
10 சிலையின் மாற்றி யோனே; அவைதாம்
மிகப்பல ஆயினும் என்னாம்? எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு
நாள்உறை மத்தொலி கேளா தோனே.

அருஞ்சொற்பொருள்:
1. பரல் = கல்; அன்னன் = அத்தன்மையவன்; கணைக்கால் = திரண்ட கால். 2. அவ்வயிறு = திரண்ட கால். பைங்கண் = குளிர்ந்த கண். 3. குச்சி = குச்சிப் புல்; குரூஉ = நிறம் 2. மோவாய் = தாடி. 4. கவுள் = மயிர். 5. தேர்தல் = ஆராய்தல். 6. இகத்தல் = நீங்குதல். 8. புல்லார் = பகைவர்; நிரை = பசுக்கூட்டம். 10. சிலை = வில்; மாற்றுதல் = அழித்தல் (வெல்லுதல்).12. கோள் = பரிவேடம் (வட்டம்); குழிசி = பானை. 13. உறைதல் = இறுகுதல்.

உரை:
செருப்பிடையே நுழைந்த சிறியகல், அணிந்தோர்க்குத் துன்பம் தருவதைப்போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன். திரண்ட கால்களையும், அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும், குச்சுப்புல் திரண்டு நிறைந்தது போன்ற, நிறம் பொருந்திய தாடியும், காதளவு தாழ்ந்த முடியும் உடையவனாய் வில்லுடன் கூடிய நம் தலைவன் இரங்கத்தக்கவன். ஆராய்ந்து பார்த்தால், இவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காக காட்டுக்குள் இருப்பவனும் அல்லன். இன்றுகாலை, தன் கையாற் குறித்து மெல்ல எண்ணி, ஆநிரைகளை மீட்க வந்தவர்களை வில்லால் வென்றான். ஆயினும் என்ன பயன்? அவன் வீட்டில், பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை.

சிறப்புக் குறிப்பு:
”அவன் வீட்டில் பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை” என்பதிலிருந்து, அவன் பசுக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

No comments: