Saturday, July 30, 2011

261. கழிகலம் மகடூஉப் போல!



பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.
பாடப்பட்டோன்: இப்பாடல், காரியாதி என்ற தலைவனின் மரணத்தால் மனம் வருந்திய ஆவூர் மூலங் கிழார் பாடியது என்று அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். வேறு சிலர், இப்பாடல் கரந்தை என்பவனைப் பற்றியது என்று கூறுகின்றனர். ஆகவே, இப்பாட்டுக்குத் தலைவன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ஒருகால், ஆவூர் மூலங் கிழார், ஒரு தலைவனைக் கண்டு பரிசில் பெற்றார். அவர், சிலகாலம் கழித்து மீண்டும் அவனைக் காணச் சென்றார். அவர் சென்ற பொழுது அவன் இறந்துவிட்டான். அவன் இல்லம் பொலிவிழந்து காணப்படுவதைக் கண்டு மனம் வருந்தி இப்பாடலை ஆவூர் மூலங் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
துறை: பாண்பாட்டு. போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தல்.

அந்தோ! எந்தை அடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்றுஆகக்
5 கண்டனென் மன்ற சோர்கஎன் கண்ணே;
வையங் காவலர் வளம்கெழு திருநகர்
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10 பயந்தனை மன்னால் முன்னே; இனியே
பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
15 நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல
புல்என் றனையால் பல்அணி இழந்தே.

அருஞ்சொற்பொருள்

2. நறவு = மது; தண்டா = குறையாத; மண்டை = இரப்போர் பாத்திரம். 3. முரிவாய் = வளைவான இடம். 4. அம்பி = ஓடம்; எற்று = எத்தன்மைத்து; அற்று = அத்தன்மைத்து. 6. திருநகர் = அழகிய அரண்மனை. 7. மையல் = யானையின் மதம்; அயா உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல். 8. மை = ஆடு; ஓசை – ஓசையுடன் நெய்யில் வேகும் ஆட்டிறைச்சிக்கு அகுபெயராக வந்தது. 9. புதுக்கண் = புதுமை (கண் – அசை); செதுக்கு = வாடல்; செதுக்கண் = ஒளி மழுங்கிய கண்கள். 10. மன் – கழிவின்கண் வந்தது; ஆல் – அசை. 11. பல்லா = பல்+ஆ = பல பசுக்கள்; தழீஇய = உள் அடக்கிக் கொண்டு. 12. உழை = இடம்; கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை); ஆட்டி = அலைத்து. 13. நாகு = இளம் பசுங் கன்று. 14. விரகு = அறிவு. 16. விடலை = தலைவன், வீரன். 18. மகடூஉ = மனைவி.

கொண்டு கூட்டு: எந்தை பேரில்லே! செதுக்கணாரப் பயந்தனை முன்; இனி, மகடூஉப் போலப் பல அணியும் இழந்து புல்லென்றனையாய் அம்பியற்றாகக் கண்டேன்; கண்ட என் கண் சோர்க எனக் கூட்டுக.

உரை: ஐயோ! என் தலைவனின் பெரிய இல்லத்தின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாதவை. இரப்போரின் பாத்திரங்களில் வண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும். அங்குள்ள வளைந்த முற்றம், வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் அளவுக்கு மிகுந்த அளவில் சோறுடையதாக இருந்தது. எப்படி இருந்த அந்த இல்லம் இப்பொழுது நீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் போல் காட்சி அளிப்பதைக் கண்டேன். அதைக் கண்ட என் கண்கள் ஓளி இழக்கட்டும். முன்பு, உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில் யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற ஓசையுடன் நெய்யில் வேகவைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை ஓளிமழுங்கிய கண்களுடன் வந்தவர்கள் எல்லாம் நிரம்ப உண்ணத் தந்தாய்; இப்பொழுது, பல பசுக்களின் கூட்டத்தை, வில்லைப் பயன்படுத்துவதை கற்கத் தேவையில்லாமல், இயற்கையாகவே வில்லைப் பயன்படுத்துவதில் வல்லவர்களான உன் பகைவர் கைக்கொண்டனர். அவர்கள், இறக்கப்போவதை அறிவிக்கும் வகையில் கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைத்தன. அவர்களை அழிப்பதற்கு இளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை, அறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட, பசுக்களைக் கவர்ந்தவர்களை அழித்தாய். இவ்வாறு, பசுக்களை மீட்டுவந்த தலைவன் இப்பொழுது இறந்து நடுகல்லாகிவிட்டதால், அழுது, தலை மயிரைக் கொய்துகொண்டு, கைம்மை நோன்பை மேற்கொண்டு, வருத்தத்துடன், அணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல் அவன் அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.

சிறப்புக் குறிப்பு: ”கல்லா வல்வில்” என்பதில் ”வில்” என்பது வில்லேந்திய வீரரைக் குறிக்கிறது. ”கல்லா” என்பது, அவர்கள் வழிவழியாக வில்லைப் பயன்படுத்துவதில் திறமை மிகுந்தவர்களாகையால் அவர்கள் வில்லைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறத் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது.

No comments: