Saturday, July 30, 2011
255. முன்கை பற்றி நடத்தி!
பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 148-இல் காண்க.
பாடலின் பின்னணி: தலைமகன் ஒருவன் போர்க்களத்திலிருந்து திரும்பி வராததால், அவன் மனைவி போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு, அவன் இறந்து கிடப்பதைக் கண்டு அழுகிறாள். “ஐயோ! என்று ஓலமிட்டு ஒலியெழுப்பினால், புலி வருமோ என்று அஞ்சுகிறேன். உன்னைத் தூக்கிகொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்பு பெரிதாகையால் அது என்னால் இயலாது. ஒரு தீங்கும் செய்யாத என்னை இப்பெருந்துயரத்தில் ஆழ்த்தி நடுக்கமுறச் செய்யும் கூற்றுவன் என்னைப் போல் பெருந்துயரம் உறுவதாகுக. நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தால், மலையின் நிழலுக்குச் செல்லலாம்.“ என்று அப்பெண் கூறுவதைக் கண்ட புலவர் வன்பரணர் அவளுடைய அவல நிலையை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.
’ஐயோ!’ எனின்யான் புலிஅஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே;
5 நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே.
அருஞ்சொற்பொருள்:
2. அகன் = அகன்ற. 3. விதிர்ப்பு = நடுக்கம். நிரை = வரிசை. 4. இன்னாது = தீமை (சாக்காடு); கூற்ரு = கூற்றுவன் (இயமன்). 6. வரை = மலை; சேர்கம் = சேர்வோம்; சின் – முன்னிலை அசைச் சொல்.
உரை: ”ஐயோ!’ என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்கிருந்து உன்னை அணைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை. உன்னை இவ்வாறு அறமற்ற முறையில் கொன்ற கூற்றுவன் என்னைப்போல் பெரிய நடுக்கமுறுவானாகுக. என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு மெல்ல நடப்பாயானல் மலையின் நிழக்குச் சென்றுவிடலாம்.”
சிறப்புக் குறிப்பு: கூற்றுவன் செய்த “இன்னாது” என்பதால், ”இன்னாது” இங்கு சாக்காட்டைக் குறிக்கிறது.
இறந்தவனால் நடக்க இயலாது என்று தெரிந்திருந்தும், அவனைச் “சிறிது தூரம் நட.” என்று அவள் கூறுவது, அவள் தெளிவான சிந்தனையற்ற நிலையில் உள்ளாள் என்பதை உணர்த்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment