Saturday, July 30, 2011

260. கேண்மதி பாண!


பாடியவர்: வடமோதங்கிழார் (260). சங்க காலத்தில், மோதம் என்ற பெயருள்ள ஊர்கள், தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலும் தமிழ் நட்டில் உள்ள மதுரை மாவட்டத்திலும் இருந்தன. சித்தூர் மாவட்டத்தில் இருந்த மோதம் என்ற ஊர் வடமோதம் என்று அழைக்கப்பட்டது. இப்புலவர் அவ்வூரைச் சார்ந்தவராக இருந்ததால் வடமோதங்கிழார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் ஒருசெய்யுள் இயற்றியதோடு மட்டுமல்லாமல் இவர் இயற்றியதாக அகநானூற்றிலும் ஒரு செய்யுள் (317) உள்ளது.

பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்து சென்றனர். அத்தலைவன், பகைவர்களை வென்று ஆநிரைகளை மீட்டு வந்தான். ஆனால், மீட்டு வரும்பொழுது அவன் பகைவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டான். அவன் தன்னுடைய ஊருக்கு வந்தவுடன் இறந்தான். அத்தலைவனைக் காண ஒருபாணன் வந்தான். அவன் வரும் வழியில் பல தீய சகுனங்களைக் கண்டான். ஆகவே, அவன் தலைவனைக் காண முடியாதோ என்று வருந்தினான். அவன் வருத்தத்தைக் கண்ட மற்றோர் பாணன், தலைவனைக் காண வந்த பாணனை நோக்கி, “ தலைவன் இறந்துவிட்டான். உனக்குத் தலைவன் அளித்த பொருளை வைத்து நீ வாழ்க. அல்லது வேறு புரவலரிடம் சென்று பொருள் பெறும் வழியைக் காண்க. தலைவனின் பெயர் நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடுகல்லை வணங்கி வழிபட்டுச் செல்க.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: பாண்பாட்டு. போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கிக் களர
5 கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
10 எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
கையுள போலும் கடிதுஅண் மையவே
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
15 வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரைய னாகி
20 உரிகளை அரவ மானத் தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
25 உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

அருஞ்சொற்பொருள்

1. வௌவுதல் = பற்றிக்கொள்ளுதல். 2. விளரி = இரங்கற் பண்; தொடை = யாழின் நரம்பு. 3. தலைஇ = மேற்கொள்ளுதல். 4. உளர்தல் = தலைமயிர் ஆற்றுதல். 6. பசிபடு மருங்குல் = பசியுடைய வயிறு. கசிபு = இரங்கி. 8. யாணர் = புதிய வருவாய், வளமை, செல்வம். 9. புரவு = கொடை; தொடுத்தல் = வைத்தல். 10. எவ்வம் = வருத்தம். 11. கடி = மிகுதி. 13. தழீஇய = சூழ்ந்த; மீளி = வீரர். 14. நீத்தம் = வெள்ளம்; துடி = வலிமை; புணை = தெப்பம். 15. கோள் = கொள்ளப்பட்ட (பசு). 17. வை = கூர்மை; எயிறு = பல். 19. உரை = புகழ். 20. உரி = தோல்; ஆனது = அன்னது; ஆன = போல. 22. கால் = காற்று. 23. கம்பம் = அசைவு. 25. வெறுக்கை = மிகுதி. 28. படம் = திரைச் சீலை; மிசை = மேல்.

உரை: ஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், நரம்புகள் திரிந்து, இரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்தால் நெஞ்சம் வருத்தம் அடைகிறது. வரும் வழியில், பெண் ஒருத்தி கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு எதிரில் வந்தாள். இவை தீய சகுனம் என்று நினைத்துக் களர்நிலத்தில் விளைந்த கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி, பசியோடு கூடிய வயிற்றோடு வருந்தித் தொழுது, “நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்கும் பாண! இந்த நாட்டின் செல்வத்தின் நிலையை நான் கூறுகிறேன். கேள்! தலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து நாம் உண்ணலாம். அல்லது அவன் இல்லையே என்று எண்ணி வருந்தி, உயிர் வாழ்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்று இரக்கலாம். இவை இரண்டும் நீ செய்யக்கூடிய செயல்கள். மிக அருகில் உள்ள ஊரில் தோன்றிய பூசலால், தலைவனுடைய ஊரில் இருந்த ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்தனர். அவற்றை மீட்பதற்கு நம் தலைவன் சென்றான். ஆநிரைகளைக் கவர்ந்த மறவர், நம் தலைவன் மீது எய்த அம்பு வெள்ளத்தை தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு பகைவரைக் கொன்று, ஆநிரைகளை, உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய கூர்மையான பற்களையுடைய பாம்பின் வாயிலிருந்து திங்கள் மீண்டது போல் ஆநிரைகளை மீட்டுப் பெரும்புகழ் பெற்றான். ஆனால், தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல் அவன் மேலுலகம் சென்றான். அவன் உடல் காட்டாற்றின் அரிய கரையில், காற்றால் மோதி, அசைவோடு சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப்போல் அம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது. உயர்ந்த புகழ்பெற்ற நம் தலைவனின் பெயர், மென்மையான, அழகிய மயிலிறகு சூட்டப்பட்டு பிறருக்கு கிடைக்காத அரிய சிறிய இடத்தில் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.

No comments: