Saturday, July 30, 2011

262. தன்னினும் பெருஞ் சாயலரே!


பாடியவர்: மதுரைப் பேராலவாயர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 247-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், மதுரைப் பேராலவாயர் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அப்பொழுது, அத்தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். சிறிது நேரத்தில், தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது. அந்த உண்டாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இப்பாடலில் மதுரைப் பேராலவாயர் கூறுகிறார்.

திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.

துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.

துறை: தலைத் தோற்றம். ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்துது குறித்து உறவினர் தம் மகிழ்ச்சியைக் கூறுதல்.

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
5 நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

அருஞ்சொற்பொருள்

1. நறவு = மது; தொடுதல் = இழிதல்; விடை = ஆடு; வீழ்த்தல் = விழச் செய்தல் (வெட்டுதல்). 2. பாசுவல் = பாசு+உவல்; பாசு = பசிய, உவல் = இலை. 4. ஒன்னார் = பகைவர்; முருக்கி = முறித்து. 5. என்னை = என்+ஐ= என் தலைவன். 6. உழையோர் = பக்கத்தில் உள்ளவர்கள்; சாயல் = இளைப்பு (சோர்வு).

கொண்டு கூட்டு: என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மின் எனக் கூட்டுக.

உரை: மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.

No comments: