பாடியவர்: கயமனார். கயம் என்ற சொல்லுக்குப் பெருமை என்று ஒருபொருள். ஆகவே, கயமனார் என்பது பெரியவர் என்பதைக் குறிக்கும். இவர் புறநானூற்றில் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் அகநானூற்றில் 12 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், நற்றிணையில் 6 பாடல்களும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: போர் முடிந்ததால், போருக்குச் சென்ற பலரும் வேறுவேறு இடங்களுக்குச் சென்றனர். ஒருவீரனின் மனைவி தன் கணவன் திரும்பி வராததைக்கண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கே, அவள் கணவன், மார்பில் அம்புபட்டு இறந்து கிடப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் அவள் புலம்புகிறாள். தான் இல்லத்திற்குச் சென்று தன் கணவன் இறந்த செய்தியைத் தன் கணவனின் தாய்க்கு எங்ஙனம் தெரிவிப்பது என்று எண்ணிக் கலங்குகிறாள். அவளுடைய கையறுநிலையை இப்பாடலில் கயமனார் சித்திரிக்கிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.
இளையரும் முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப எழாஅய்; மார்பமண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
5 இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கென நாளும்
10 ஆனாது புகழும் அன்னை
யாங்கா குவள்கொல்? அளியள் தானே.
அருஞ்சொற்பொருள்:
1. புலம் = இடம். 2. எடுப்ப = எழுப்ப, தூக்க; புல்லுதல் = தழுவுதல். 3. சுரம் = வழி; இறுதல் = சாதல்; மள்ளன் = வீரன்; விளர்த்த = வெளுத்த. 4. ஓச்சி= உயர்த்தி; கிலை = சுற்றம். 5. இன்னன் = இத்தன்மையவன். 6. மற்று – அசை நிலை. 7. பழுனிய = பழுத்த; கோளி = ஆலமரம். 8. புள் = பறவை; ஆர் = நிறைவு; யாணர் = புதுவருவாய். 9. செம்மல் = பெருமை. 10. ஆனாது = அமையாது (குறையாது). 11. அளியள் = இரங்கத்தக்கவள்.
உரை: இளையவர்களும் முதியவர்களும் போர்க்களத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். நான் எழுப்பினால் நீ எழுந்திருக்கவில்லை. உனது மார்பு நிலத்தில் படுமாறு, நீ இடைவழியில் இறந்துவிட்டாய். வீரனே! வளையலை நீக்கியதால் வெளுத்த வெறுங்கையைத் தூக்கி, உன் சுற்றத்தாரிடம், நீ இறந்துவிட்டாய் என்று உன்னைப் பற்றிய செய்தியை நான் எடுத்துச் சென்றால், ” என் மகனின் செல்வமும் பெருமையும், ஊரின் முன்னே உள்ள, பழுத்த ஆலமரத்தில் பறவைகள் வருவதைப் போன்றது.” என்று நாள்தோறும் விடாமல் புகழ்ந்து பேசும் உன் தாய் என்ன ஆவாளோ? அவள் இரங்கத்தக்கவள்.
சிறப்புக் குறிப்பு: தன் கணவனை இழந்த பெண், தான் வருந்துவது மட்டுமல்லாமல், தன் கணவனின் தாயார் எப்படியெல்லாம் வருந்துவாளோ என்று எண்ணுவது, அவளின் பாராட்டத்தக்க உயர்ந்த நற்பண்பைக் காட்டுகிறது.
Saturday, July 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment