Saturday, July 30, 2011

256. அகலிதாக வனைமோ!

பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடலின் பின்னணி: ஒருபெண் தன் கணவனுடன் சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப்படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

திணை:
பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
5 வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!


அருஞ்சொற்பொருள்:

1. கோ = குயவன். 2. சாகாடு = வண்டி; ஆரம் = ஆர்க்கால். 4. சுரம் = வழி. 5. வியன் = பெரிய; மலர்தல் = விரிதல்; பொழில் = நிலம். 6. வனைதல் = செய்தல்.

உரை: மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! இப்பெரிய நிலத்தில், பெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல், என் கணவனுடன் பலவழிகளையும் கடந்து வந்த எனக்கும் சேர்த்து, அருள் கூர்ந்து பெரிய தாழி ஒன்றைச் செய்வாயோ!

No comments: