Tuesday, March 23, 2010

155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!

பாடியவர்: மோசி கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 154-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். இவனைப் பற்றிய செய்தைகளைப் பாடல் 154-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: கொண்கானம் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசி கீரனார் ஒரு பாணனை கொண்கானம் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்று படை. பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள்இனி நயத்தின்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
5 ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே.

அருஞ்சொற்பொருள்:
1.வணர் = வளைவு; கோடு = யாழ்த் தண்டு; புடை = பக்கம்; தழீஇ = தழுவிய. 3. கிளத்தல் = கூறுதல். 4. பசலை = பொன்னிறமாதல்; வான் = அழகு. 5. ஏர்தல் = எழுதல். 6. இலம் = வறுமை; மண்டை = இரப்போர் பாத்திரம். 8. அகலம் = மார்பு.

உரை: வளைந்த தண்டையுடைய சிறிய யாழைத் உனது வாடிய உடலின் ஒரு பக்கத்தில் தழுவிக்கொண்டு, உன்னுடைய துன்பத்தை உணர்ந்து அதைத் தீர்ப்பவர் யார் என்று கூறும் பாணனே! நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்பாயாக. பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறமான அழகிய பூ எழுகின்ற கதிரவனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் கலங்கள் (பாத்திரங்கள்) புகழ் விளங்கும் பெரும் கொண்கானம் கிழானது மார்பை நோக்கித் திறந்திருக்கும்.

3 comments:

naanjil said...

நெருஞ்சிப்பூ கதிரவனைப் பார்த்துத் திசைமாறும் என்பது புதிய தகவல்

ATOMYOGI said...

தங்களது பணி பாரட்டிற்குரியது, பெருமைக்குரியது...

சேற்றில் பூத்திருக்கும் செந்தாமரை உங்களின் பதிவு.

வாழ்க உம் பணி. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை அருள்வாராக...

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு நண்பரே.