Friday, March 5, 2010

149. வண்மையான் மறந்தனர்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம் வன்பரணர் கண்டீராக் கோப்பெரு நள்ளியுடன் இருந்தார். அப்பொழுது பாணர் சிலர் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணை காலையிலும் மாற்றிப் பாடினர். அவர்கள் ஏன் அவ்வாறு தவறாகப் பாடுகிறார்கள் என்று நள்ளி வன்பரணரைக் கேட்டான். அதற்கு, வன்பரணர், “ நள்ளி! காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்னும் பாடுவதுதான் முறை. நீ அவர்களுக்கு வறுமை தெரியாதவாறு வேண்டியவற்றை எல்லாம் நிரம்ப அளித்ததால் அவர்கள் அம்முறைமையை மறந்தனர்” என்று இப்பாடலில் விடை அளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நள்ளி வாழியோ; நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அதுநீ
5 புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

அருஞ்சொற்பொருள்:
1.நள் = இரவு, இருள்,செறிவு. 2. மருதம் = காலை நேரத்திற்குரிய பண். 3. கைவழி = பாணர்கள் எப்பொழுதும் கையில் வைத்துள்ள ஒரு வகை யாழ்; செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 4. எமர் = எம்மவர். 5. புரவு = கொடை.

கொண்டு கூட்டு: நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே வரவு எமர் மறந்தனர்.

உரை: நள்ளி! நீ வாழ்க! கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், பாணர்கள் இசைக்குரிய வழிமுறைகளை மறந்து இருண்டு வரும் மாலைப் பொழுதில் மருதப் பண்ணையும் காலையில் கையிலுள்ள யாழால் செவ்வழிப் பண்ணையும் வாசிக்கிறார்கள்.

No comments: