Tuesday, March 23, 2010

154. இரத்தல் அரிது! பாடல் எளிது!

பாடியவர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும் கீரர் குடியினராக இருந்ததாலும் மோசி கீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார். இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அதைக் கண்ட சேரமன்னன், இவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் இவருக்குக் கவரி வீசிய செய்தியை புறநானூற்றுப் பாடல் 50-இல் காணலாம். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.

இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும், அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84) நற்றிணையில் ஒரு செய்யுளும் ( 342) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான் (154, 155, 156). கொண்கான நாடு என்பது பிற்காலத்தில் கொங்கண நாடு என்று மருவியது. இது சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்நாட்டில், கொங்கு வேளாளர் குடியில் பிறந்து சிறந்த வள்ளலாக விளங்கியவன் கொண்கானம் கிழான். இந்நாடு பொன்வளம் மிகுந்து இருந்ததால், “ பொன்படு கொண்கானம்” என்று நற்றிணையில் (நற்றிணை - 391)
பாடப்பட்டுள்ளது
பாடலின் பின்னணி: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற பெருமன்னர்களைப் பாடி, புகழும் பரிசிலும் பெற்ற புலவர் மோசி கீரனார் தன்னிடம் வந்து தன் ஈகையைப் புகழ்வதைக் கண்டு கொண்கானம் கிழான் வியந்தான். மோசி கீரனார் தகுதிக்கேற்ப தான் அவருக்கு என்ன பரிசில் அளிக்க முடியும் என்று எண்ணினான். அவன் எண்ணியதை உணர்ந்த மோசி கீரனார், “பரந்த கடலருகே சென்றாலும் நீர் வேட்கை கொண்டவர்கள் சிறிய ஊற்றை நாடிச் செல்வர். அதுபோல், புலவர்களுக்கு வேந்தர்கள் பரிசுகள் அளித்தாலும், அவர்கள் வள்ளல்களை நாடிச் செல்வது இயல்பு. ஆகவேதான், நான் உன்னை நினைத்து வந்தேன்; எனக்கு ஈயென்று கேட்பது கடினமான செயல். ஆனால், உன் வீரத்தையும் உன் கொண்கான நாட்டையும் பாடுதல் எளிது. மற்றும், பெற்றது சிறிதே ஆயினும் அதை ஊதியமாகக் கருதுபவன் நான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
5 வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
10 எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே.

அருஞ்சொற்பொருள்:
4. உழை = பக்கம், இடம்; புரை = குற்றம்; தபுதல் = கெடுதல்; புரைதபு = குற்றமற்ற. 10. அறுவை = உடை, ஆடை. 11. தூ = தூய; துவன்றல் = பொலிவு; கடுப்ப = ஒப்ப; மீமிசை = மேலுக்குமேல் (உச்சி).

உரை: அலைகள் மோதும் கடற்கரை அருகில் சென்றாலும், தெரிந்தவர்களைக் கண்டால் தாகத்திற்கு நீர் வேண்டும் என்று கேட்பது உலக மக்களின் இயல்பு. அது போல், அரசரே பக்கத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளல்களை நினைத்துப் புலவர் செல்வர். அதனால், நானும் பெற்றதைப் பயனுள்ளாதாகக்கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், “இவன் அளித்தது என்ன?” என்று இகழ மாட்டேன். வறுமை உற்றதால் உன்னை நினைத்து வந்தேன். எனக்கு , “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். நீ பரிசில் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் உன்னை நோக்கி எறியப்பட்ட படைக்கலங்களுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத உன் ஆண்மையையும், தூய ஆடையை விரித்தது போன்ற பொலிவுடன் உச்சியிலிருந்து விழும் குளிர்ந்த அருவியையுடைய கொண்கான நாட்டையும் பாடுவது எனக்கு எளிது.

No comments: