பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவன் கடையேழு வள்ளல்களில் (அதியமான், ஆய் அண்டிரன், பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன்) ஒருவன். இவனைக் ”கொல்லியாண்ட வல்வில் ஓரி” என்றும் ”ஆதன் ஓரி” என்றும் கூறுவர். ஓரி வாழ்ந்த காலத்து சேர நாட்டை ஆட்சி செய்த சேரமன்னன் கொல்லி மலையைத் தான் அடைய வேண்டும் என்று திட்டமிட்டு, முள்ளூர் மன்னன் காரிக்கும் ஓரிக்கும் பகைமையை வளர்த்தான். காரி ஓரியோடு போரிட்டால் சேரன் அவனுக்கு உறுதுணையாகப் போர் புரிவதாகவும், காரி போரில் வென்றால் கொல்லிமலையைத் தனக்கு அளிக்க வேண்டுமென்றும் சேரன் காரியோடு ஒப்பந்தம் செய்துகொண்டான். பகைமை காரணமாக காரிக்கும் ஓரிக்கும் இடையே போர் மூண்டது. போரில், சேரன் காரிக்குத் துணையாக ஓரியை எதிர்த்துப் போர் புரிந்தான். போரில் ஓரி காரியிடம் தோல்வியுற்று இறந்தான். காரி, தான் சேரனோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கொல்லிமலையைச் சேரனுக்கு அளித்தான்.
பாடலின் பின்னணி: வன்பரணர் கொல்லிமலையைச் சார்ந்த காட்டில் தன் சுற்றத்தாரோடு சென்று கொண்டிருக்கையில், வேட்டுவன் ஒருவன் வேட்டையாடியதைக் கண்டார். அவ்வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவனின் ஆற்றலைக் கண்டு வன்பரணர் வியந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்தால் வேட்டுவன் போல் தோன்றவில்லை. அவன் ஓரு மன்னனைப் போல் இருந்தான். வன் பரணரும் அவர் சுற்றத்தாரும் பல இசைக்கருவிகளோடு பல பாடல்களைப் பாடி ஒரியைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உண்பதற்கு ஊனும் மதுவும் அளித்து கொல்லிமலையில் கிடைக்கும் பொன்னையும் கொடுத்து அவர்களை ஓரி சிறப்பித்தான். வன்பரணர் இச்செய்தியை இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.
வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
5 ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்:
10 ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல் விறலி ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
15 கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
20 மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி மற்றுயாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்குஓர்
வேட்டுவர் இல்லை நின்ஒப் போர்என
25 வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம்எனச்
30 சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச்சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!
அருஞ்சொற்பொருள்:
1.வேழம் = யானை; விழு = சிறந்த; தொடை = அம்பின் பின் தோகை, அம்பு; பகழி = அம்பு. 2. பேழ் = பெரிய; உழுவை = புலி; பெரும்பிறிது = இறப்பு; உறீஇ = உறுவித்து. 3, புழல் = துளையுள்ளது; புகர் = புள்ளி; கலை = ஆண்மான். 4. கேழற்பன்றி = ஆண்பன்றி. 5.ஆழல் = ஆழமுடைத்தாதல்; செற்றுதல் = அழுந்துதல். 6. வேட்டம் = வேட்டை; வலம் = வெற்றி. திளைத்தல் = அழுந்துதல், பொருதல், மகிழதல், விடாதுபயிலல். 9. வெறுக்கை = செல்வம். 10. ஆரம் = மாலை, சந்தனம். 13. வண்ணம் = இசையுடன் கூடிய பாட்டு. 14. மண் = முழவுக்குத் தடவப்ப்டும் மார்ச்சனை (ஒரு வகைக் கருஞ்சாந்து); நிறுத்துதல் = நிலைநாட்டுதல். 15. தூம்பு = ஒரு இசைக் கருவி. 16. எல்லரி, ஆகுளி = இசைக் கருவிகள். 17. பதலை = ஒரு இசைக் கருவி. பை = இளமை (மென்மை). 18. மதலை = பற்று; மா = கரிய; வலம் = இடம்; தமின் = தம்மின் = கொணர்மின். 26. புழுக்கல் = அவித்தல்; 27. ஆன் உருக்கு = நெய்; வேரி = கள். 28. தா = குற்றம். 29. குவை = கூட்டம், திரட்சி. 30. சுரம் = வழி; விடர் = குகை, மலைப் பிளப்பு. 32. வெய்யோய் = விரும்புபவன்.
உரை: சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் குத்தி நின்றது. வலிய வில்லோடு இவ்வாறு வேட்டையாடியவன் அம்பு எய்வதில் மிகவும் புகழுடையவனாகவும் வல்லவனாகவும் இருக்கின்றான். அவன் யாரோ? அவனைப் பார்த்தால் கொலைத்தொழில் புரிபவன் போல் தோன்றவில்லை. நல்ல செல்வந்தன் போல் உள்ளான்; முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ? அல்லது இவன் ஓரி அல்லனோ?
விறலியரே! நான் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடப் போகிறேன். நீங்கள், முரசுகளில் மார்ச்சனையைப் பூசுங்கள்; யாழை மீட்டுங்கள்; யானையின் தும்பிக்கை போன்ற துளையுள்ள பெருவங்கியத்தை இசையுங்கள்; எல்லரியை வாசியுங்கள்; சிறுபறையை அறையுங்கள்; ஒருதலைப் பதலையைக் கொட்டுங்கள்; இசைப்புலமையை உணர்த்தும் சிறிய கரிய கோலை என் கையில் கொடுங்கள் என்று சொல்லி வேட்டுவனை அணுகி, அவன் அரசன் போலிருப்பதால் இருபத்தொரு பாடல் துறையும் முறையுடன் பாடி முடித்து, ”கோ” என்று கூறினேன். ”கோ” என்று கூறியதைக் கேட்டவுடன் அது தன்னைக் குறிப்பதால் அவன் நாணினான். பின்னர், “நங்கள் நாடு நாடாகச் சென்று வருகிறோம். உன்னைப் போன்ற வேட்டுவன் யாரும் இல்லை” என்று நாங்கள் கூற விரும்பியதைக் கூறினோம். அவன் என்னை மேற்கொண்டு பேசவிடாமல், தான் வேட்டையாடிக் கொன்ற மானின் தசையை வேகவைத்து, அதோடு நெய் போன்ற மதுவையும் கொடுத்தான். தன் மலையாகிய கொல்லி மலையில் பிறந்த குற்றமற்ற நல்ல பொன்னையும் பல மணிகளையும் கலந்து “இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தான். குகைகளையும் சிகரங்களையும் உடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன் வரையாத ஈகையுடையவன்; வெற்றியை விரும்புபவன்.
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment