Tuesday, March 23, 2010

153. கூத்தச் சுற்றத்தினர்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவனை பற்றிய குறிப்புகளைப் பாடல் 152-இல் காணாலாம்
பாடலின் பின்னணி: வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம், தமக்குரிய ஆடலையும் பாடலையும் செய்யாது இருந்தனர். இதைக் கண்டவர்கள், “தங்கள் சுற்றத்தார் ஏன் ஆடலையும் பாடலையும் செய்யாது இருக்கின்றனர்?” என்று கேட்டனர். அதற்கு, வன்பரணர், “என் சுற்றத்தாரோடு நான் வல்வில் ஓரியைக் காணச் சென்றேன். எங்களுக்குப் பொன்னாலான மாலையையும் பிற அணிகலன்களையும் ஓரி அளித்தான். அவனிடமிருந்து நாங்கள் பெற்ற பெரு வளத்தால் என் சுற்றத்தார் பசி அறியாது இருக்கின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆடலையும் பாடலையும் மறந்தனர்.“ என்று இப்பாட்டில் குறிப்பிடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்புஅமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
5 மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
10 பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே?

அருஞ்சொற்பொருள்:
3. சூர்ப்பு = கடகம். 5. நன்று = பெருமை, சிறப்பு. 6. கண்ணுள் = கூத்து; கடும்பு = சுற்றம். 7. மிடைதல் = கலத்தல். 8. கண்ணி = தலையில் அணியும் மாலை. 10. ஆகன்மாறு = ஆகையால்; விசி = கட்டு. 11. இயம் = இசைக் கருவிகள்; கறங்கல் = ஒலித்தல். 12. ஒல்லல் = இயலல்.

உரை: மேகங்கள் சூழ்ந்த கொல்லி மலைக்குத் தலைவனாகிய ஓரி நாள்தோறும் நன்கு செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்கு அளிப்பவன். அவன் ஒளிவிடும் பசும்பொன்னாலான வளைந்த கடகம் அணிந்த முன்கயையுடையவன். கொல்லும் போர்த்திறமையில் குறையாத ஆதன் ஓரியின் வளமை மிகுந்த கொடையைக் காண்பதற்கு என் கூத்தர்களாகிய சுற்றத்தார் சென்றனர். அவர்கள் பொன்னாலாகிய (குளிர்ந்த நீரில் பூக்காத) குவளை மலர்களும் மணிகளும் கலந்து வெள்ளியால் ஆகிய நாரால் கட்டப்பட்ட மாலையையும் பிற அணிகலங்களையும் யானைகளையும் பரிசாகப் பெற்றனர். அவர்கள், தாம் பெற்ற கொடையால் தம் பசி நீங்கினார். ஆகையால், அவர்கள் வாரால் பிணித்துக் கட்டப்பட்ட பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க ஆடுவதை விட்டனர்; பாடுவதையும் மறந்தனர்.

No comments: