Tuesday, March 23, 2010

151. அடைத்த கதவினை!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் (151, 164, 165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர். பெருந்தலை என்ற பெயரில் தமிழ் நாட்டில் பல ஊர்கள் இருப்பதால் இவர் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் இவர் இயற்றிய செய்யுள் ஒன்றில் (224) இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மனகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்படுவதால் இவரது பெற்றோர்கள் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தலை பெரிதாக இருந்ததால் இவர் பெருந்தலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.

வறுமையில் வாடிய புலவர்களில் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர். கடையேழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒரு வள்ளல் இருந்தான். அவன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன், குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு , அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால், அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செசெய்தார்.

இவர் புறநானூற்றில் ஆறு செய்யுட்களும் அகநானூற்றில் இரண்டு செய்ய்ட்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) இயற்றியவர்.

பாடப்பட்டோன்: இளவிச்சிக் கோ (151). இவ்வேந்தனின் இயற்பெயர் தெரியவில்லை. விச்சி என்பது ஒரு மலை. அந்த மலையை சுற்றியிருந்த இடத்தை ஆண்ட அரசனை விச்சிக் கோ என்று கூறுவர். அந்நாட்டு இளவரசன் இளவிச்சிக் கோ என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கண்டீராக் கோப்பெரு நள்ளியின் இளவல் இளங்கண்டீராக் கோ என்று அழைக்கப்பட்டான். இளங்கண்டீராக் கோவும் இளவிச்சிக் கோவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு சமயம், அவர்கள் இருவரும் கூடியிருந்த இடத்திற்குப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீராக் கோவைக் காண வந்தார். இளங்கண்டீராக் கோவைக் கண்டவுடன் அவனைத் தழுவினார். ஆனால், அவர் இளவிச்சிக் கோவைத் தழுவவில்லை. அதைக் கண்டு கலக்கமுற்ற இளவிச்சிக்கோ, பெருந்தலைச் சாத்தனார் ஏன் தன்னைத் தழுவவில்லை என்று கேட்டான். அவனுடைய கேள்விக்குப் பெருந்தலைச் சாத்தனார், “அரசே, இளங்கண்டீராக் கோ வண்மை மிக்கவன். அவன் வீட்டில் இல்லாவிட்டாலும் அவன் வீட்டுப் பெண்டிர் தம் தகுதிக்கேற்ப இரவலர்க்குப் பரிசளிப்பர். அதனால், இளங்கண்டீராக் கோவைத் தழுவினேன். உன் முன்னோருள் முதல்வன் நன்னன் என்பவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தவன். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில் பாடி வருபவர்களுக்குப் பரிசளிக்காமல் வீட்டுக் கதவை அடைக்கும் வழக்கம் உள்ளது. அதனால் என் போன்ற புலவர்கள் விச்சி மலையைப் பாடுவதில்லை. அதனால் அம்மலைக்குரிய உன்னைத் தழுவவில்லை” என்று இப்பாடலில் விடையளிக்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப்
5 பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்குமொழிப்
10 பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.

அருஞ்சொற்பொருள்:
1. பண்டு = பழமை; உவத்தல் = மகிழ்தல். 2. சிமையம் = உச்சி; விறல் = சிறந்த; வரை = மலை; கவா = மலைப் பக்கம். 3. சேண்புலம் = நெடுந்தூரம்; படர்தல் = செல்லல். 4. பிடி = பெண் யானை. 5. தம்பதம் = தம் தகுதிக்கேற்ப. வண் = மிகுதி; 7. முயங்கல் = தழுவல்; பொலம் = பொன். 9. வியங்குதல் = விளங்குதல். ஆடுதல் = அசைதல். 11. அணங்கு = அச்சம்; சால் = மிகுதி, நிறைவு; அடுக்கம் = மலைப் பக்கம். 12. மால் = பெருமை; வரை = மலை; வரைதல் = நீக்கல்.

உரை: வானளவிய சிறந்த மலைச் சிகரங்களும், மலைப்பக்கங்களும் உடைய நாட்டிற்கு உரியவனாகிய இளங்கண்டீராக் கோ நெடுந்தூரம் சென்றிருந்தாலும், அவன் இல்லத்து மகளிர் தமக்குகந்த முறையில், பாடி வருபவர்கள் மகிழும் வகையில் நன்கு செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த சிறிய தலையையுடைய இளம்பெண் யானைகளைப் பரிசாக அளிக்கும் புகழ் மிகுந்ததாகப் பன்னெடுங்காலமாகவே அவன் நாடு உள்ளது. ஆகவே, நான் அவனை நன்றாகத் தழுவினேன். நீயும் தழுவுவதற்கு ஏற்றவன்தான். ஆனால், நீ பொன்னாலான தேரையுடைய (பெண் கொலை புரிந்த) நன்னனின் வழித்தோன்றல். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில், விளங்கும் மொழியில் பாடுவோர்க்கு வாயிற் கதவுகள் அடைக்கப் படுவதால், அச்சம் நிறைந்த மலைப் பக்கங்களில் தவழும் மேகம் பொழியும் மழையுடன் மணமும் உடைய பெருமைக்குரிய விச்சி மலையை எம் போன்றவர்கள் பாடுவதை நீக்கினார்கள். ஆகவே, நான் உன்னைத் தழுவவில்லை.

சிறப்புக் குறிப்பு: நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் நாட்டில் இருந்த மா மரம் ஒன்றிலிருந்து விழுந்த காய் நீரில் மிதந்து சென்றது. அந்நீரில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னான். அப்பெண் செய்த தவற்றிற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாக பொன்னால் செய்யப்பட்ட பாவை (பொம்மை) யையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்கு தண்டனையாக அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கபட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி குறுந்தொகைப் பாடல் 292 -இல் காணப்படுகிறது.

மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன்
(குறுந்தொகை - 292: 1-5)

No comments: