Friday, March 5, 2010

150. நளி மலை நாடன்!

பாடியவர்: வன்பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 148-இல் காணாலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், தான் முதல்முதலாக கண்டீரக் கோப்பெரு நள்ளியைச் சந்தித்த நிகழ்ச்சியைக் வன்பரணர் கூறுகிறார். வறுமையோடு இருந்த வன்பரணர் தன் சுற்றத்தாரோடு மலைகளையும் காடுகளையும் கடந்து நள்ளியின் கண்டீர நாட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரும் அவர் சுற்றத்தாரும் பசியோடு ஒரு பலா மரத்தடியில் வருந்தி இருந்தனர். அச்சமயம், மான்களை வேட்டையாடியதால் அவற்றின் குருதி படிந்த, கழல் அணிந்த கால்களோடு ஒருவன் அங்கே வந்தான். அவனைப் பார்த்தால் ஒரு செல்வந்தனைப் போல் இருந்தது. வன்பரணரும் அவர் சுற்றத்தாரும் பசியோடு இருந்ததை அவர்கள் முக குறிப்பால் அவன் உணர்ந்துகொண்டு, தான் கொன்ற விலங்குகளின் இறைச்சியைச் சமைத்து அவர்களுக்கு அளித்தான். உண்டு பசி தீர்ந்த வன்பரணரும் அவர் சுற்றத்தாரும் அருவி நீரைக் குடித்துக் களைப்பாறினார்கள். “ என்னிடத்தில் பெருமைக்குரிய அணிக்கலன்கள் வேறு யாதும் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சேர்ந்தவர்கள்” என்று கூறி தன் மார்பில் அணித்திருந்த முத்து மாலையையும் கையில் அணிந்திருந்த கடகத்தையும் வன்பரணரிடம் கொடுத்தான். வன்பரணர், அவன் வள்ளல் தன்மையை வியந்து, “உம்முடைய நாடு எது?; ஐயா, நீர் யார்?” என்று கேட்டார். அவன் வன்பரணரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். பின்னர், தனக்குப் பரிசளித்த வள்ளல், தோட்டி மலைக்குரிய கண்டீராக் கோப்பெரு நள்ளி என்பதை வழியில் இருந்தவர்களிடமிருந்து வன்பரணர் தெரிந்து கொண்டார். இப்பாடலில் இந்த நிகழ்ச்சியை வன்பரணர் சித்திரிக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
5 மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
10 கான்அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
15 நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என
20 மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்;
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்:
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
25 இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.கூதிர் = குளிர்; கூதிர் காலம் = ஐப்பசி, கார்த்திகை. 2. பாறுதல் = அழிதல், சிதறுதல் ; சிதார் = கந்தை. 3. புலம் = இடம்; படர்ந்த = சென்ற. 4. உயக்கம் = வருத்தம்; உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்; உலைவு = இளைப்பு, ஊக்கக் குறைவு. 5. கணம் = கூட்டம். 6. வான் = மழை, அழகு, சிறப்பு; சென்னி = தலை. 8. இரீஇ = இருத்தி. 9. இழுது = நெய்; கொழுங்குறை = ஊன் துண்டுகள். 10. கான் = காடு; அதர் = வழி; ஞெலிதல் = கடைதல், தீக் கடைதல். மிசைதல் = அனுபவித்தல், உண்டல், நுகர்தல். 14.காய் = வருந்தல், பசி. 15. நளிய = செறிந்த. 17. வல் = விரைவு. 18. வீறு = ஒளி, பெருமை. 20. வயங்குதல் = விளங்குதல்; காழ் = முத்து வடம், மணி வடம். 21.மடை = ஆபரணக் கடைப் பூட்டு. 28. நளி = பெரிய

உரை: குளிர் காலத்தில் மழையில் நனைந்த பருந்தின் கரிய சிறகைப் போன்ற கிழிந்த கந்தைத் துணியை உடுத்திய நான் பலாமரத்தடியில் என்னையே மறந்து இருந்தேன். வேற்று நாட்டிலிருந்து அங்கே வந்துள்ள என்னுடைய வருத்ததையும் தளர்ச்சியையும் கண்டு, மான் கூட்டத்தைக் (வேட்டையாடிக்) கொன்று குருதி தோய்ந்த, அழகிய வீரக்கழலணிந்த காலும், அழகிய நீலமணி ஒளிரும் தலையும் உடைய, செல்வச் செம்மல் போன்ற ஒரு வேட்டுவன் வலிய வில்லோடு அங்கே தோன்றினான். அவனைக் கண்டு நான் வணங்கி எழுந்திருப்பதைப் பார்த்த அவன், தன் கையை அசைத்து என்னை இருக்கச் செய்தான். காட்டு வழியில் சென்று வழிதவறிய இளைஞர்கள் விரைந்து வந்து சேர்வதற்கு முன், நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில் மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அவன் விரைந்து வந்து, “ தாங்கள் பெறுதற்கரிய பெருமைக்குரிய அணிகலன்கள் வேறு எதுவும் எங்களிடம் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறித் தனது மார்பில் அணிந்திருந்த ஒளிபொருந்திய முத்து மாலையையும் முன் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கொடுத்தான். ”தங்களது நாடு எது?” என்று கேட்டேன். அவன் தன் நாடு எது என்று கூறவில்லை. “தாங்கள் யார்?” என்று கேட்டேன். அவன் தன் பெயரையும் கூறவில்லை. அவன், பெருமைக்குரிய தோட்டி என்னும் அழகிய மலையையும், பக்கத்திலுள்ள அழகிய பெரிய மலையையும் காப்பவன் என்றும் பளிங்கு போன்ற நிறமுடைய இனிய நீருடைய பெரிய மலை நாட்டு நள்ளி என்றும் வழியில் வந்த பிறர் சொல்லக் கேட்டேன்.

சிறப்புக் குறிப்பு: தோட்டி என்னும் சொல்லுக்கு, யானைப்பாகன் யனையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தும், ”அங்குசம்” என்று ஒரு பொருள். அது இரும்பால் செய்யப்பட்டது. ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்படும் தோட்டி என்னும் சொல் தோட்டி மலையைக் குறிக்கிறது. இப்பாடலை இயற்றிய புலவர், “இரும்பு புனைந்து இயற்றா” என்ற அடைமொழியால் “இரும்பால் செய்யாப்படாத தோட்டி” என்று தோட்டி மலையைக் குறிப்பிடுகிறார்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோற் வித்து. (குறள் - 24)

என்ற குறளில் தோட்டி என்ற சொல் யனைப்பாகன் பயன்படுத்தும் கருவியைக் குறிப்பது காண்க. துறடு என்னும் சொல் துறட்டி என்றும் தோட்டி என்றும் மருவியதாக மொழி அறிஞர்கள் கருதுகின்றனர் ( தேவநேயப் பாவணர், திருக்குறள் தமிழ் மரபுரை, பக்கம் 67).