Friday, March 5, 2010

146. தேர் பூண்க மாவே!

பாடியவர்: அரிசில் கிழார் ( 146, 230, 281, 285, 300, 304, 342). இவர் அரிசில் என்னும் ஊரைச் சார்ந்தவர். அரிசில் என்னும் ஊர் கொள்ளிடத்தின் வடக்குப் பக்கம் உள்ள அரியிலூர் என்னும் ஊர் என்று பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். வேறு சிலர், குடந்தை அருகே ஓடும் அரசலாறு பண்டைக் காலத்தில் அரிசில் ஆறு என்று அழைக்கப்பட்டது என்றும் அரிசில் என்னும் ஊர் அரசலாற்றின் கரையே இருந்த ஊர் என்றும் கருதுவர். இவர் கிழார் என்று அழைக்கப்படுவதிலிருந்து இவர் வேளாண் மரபினர் என்பது தெரியவருகிறது, இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்து வாழ்ந்தவர். இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகத்தில் புகழந்து பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில் இவர் இயற்றிய செய்யுட்களால் பெரு மகிழ்ச்சி அடைந்த சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை இவருக்குத் தன் நாட்டையும் ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தான். ஆனால், இவர் சேர நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளாமல், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராகப் பணி புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இவர் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அமைச்சராக இருந்த பொழுது, அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று சேரனின் படைவலிமையை எடுத்துரைத்து, அதியமானுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் நடக்கவிருந்த போரைத் தடுக்க முயன்றார். இவர் முயற்சி வெற்றி பெறவில்லை. சேரமானுக்கும் அதியமானுக்கும் போர் மூண்டது. அப்போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தான். இவர் அதியமானிடமும் மிகுந்த அன்பு கொண்டவர். அதியமான் இறந்ததை, ”கூற்றுவன் செய்த தவறு” என்று புறநானூற்றுப் பாடல் 230 - இல் கூறுகிறார்.

இவர் பதிற்றுப்பத்தில் எட்டாம் பதிகமும், புறநானூற்றில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (193) இயற்றியுள்ளார்.

பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னனி: வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்ற அரிசில் கிழார் அவனைக் காணச் சென்றார். பேகன் இவருக்குப் பெருமளவில் பரிசில் அளித்தான். இவர், “என்னைப் பாராட்டி எனக்குப் பரிசில் அளிக்க விரும்பினால், நான் விரும்பும் பரிசில் பொன்னும் பொருளும் அல்ல; நீ உன் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும். அதுவே நான் வேண்டும் பரிசில்” என்று இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
5 பரிசில் நல்குவை யாயின் குரிசில்நீ
நல்கா மையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
10 தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

அருஞ்சொற்பொருள்:
1.வெறுக்கை = செல்வம். 3. செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண். 4. நயந்து = விரும்பி. 5. குரிசில் = அரசன், தலைவன். 6. நைவரல் = இரங்குதல்; சாய்தல் = தளர்தல். 7. உழத்தல் = வருந்துதல்; அரிவை = இருபத்து ஐந்து வயதுள்ள பெண் (பெண்).8. கலித்தல் = தழைத்தல்; கலாவம் = தோகை. 9. ஒலித்தல் = தழைத்தல். 10. கோதை = பூ மாலை; புனைதல் = சூடுதல். 11. வண் = மிகுதி; பரிதல் = ஓடுதல்; மா = குதிரை.

உரை: நீ எனக்கு அளிக்கும் அரிய அணிகலன்களும் செல்வமும் அப்படியே இருக்கட்டும். அவற்றை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. போர்களில் வெல்லும் பேகனே! சிறிய யாழை ஏந்தி, மலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணில் பாட்டிசைத்து உன் வலிய நிலமாகிய நல்ல நாட்டை நான் பாடுவதால் நீ என்னை விரும்பி எனக்குப் பரிசில் அளிப்பதாக இருந்தால், தலைவனே! நீ அருள் செய்யாததால் அரிய துயரத்தால் மனம் வருந்தி உடல் தளர்ந்து அழகிய அணிகலன்களோடு உள்ள உன் மனைவியின் மயில் தோகை போல் காலளவு தழைத்த மெல்லிய கூந்தலில் நறுமணமுள்ள புகையூட்டி, குளிர்ந்த மணமுள்ள மாலை அணியுமாறு விரைந்தோடும் குதிரைகளை உன் நெடிய தேரில் பூட்டுவாயாக!

No comments: