பாடியவர்: மோசிகீரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணாலாம்
பாடலின் பின்னணி: இப்பாடலில் மோசிகீரனார் கொண்கான மலையின் வளத்தையும் கொண்கானங் கிழானின் வெற்றிகளையும் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
ஒன்றுநன் குடைய பிறர்குன்றம் என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
5 நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.
அருஞ்சொற்பொருள்:
3.நச்சி = விரும்பி; சுட்டி = குறித்து. 4. தொடுத்து = சேர்த்து. 5. நிறை = திண்மை; 6. பெயர்தல் = திரும்பல்; செம்மல் = அரசன், தலைவன்.
உரை: மற்றவர்களின் மலைகள் ஒரே ஒரு சிறப்புடையதாக (நன்மை உடையதாக) இருக்கும். ஆனால், கொண்கானம் எந்நாளும் இரண்டு சிறப்புகளுடையது (நன்மைகளையுடையது). ஒன்று, பரிசில் பெற விரும்பிச் சென்ற இரவலர் தனது என்று குறிப்பிட்டுச் சேகரித்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களை உடையதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், நிறுத்தற்கரிய படையுடைய வேந்தர்களைத் திறை கொண்டுவந்து கொடுத்து திருப்பி அனுப்பும் தலைவனும்(கொண்கானங் கிழானும்) உடையது.
Wednesday, April 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment