Friday, March 5, 2010

148. என் சிறு செந்நா!

பாடியவர்: வன்பரணர்(148, 149, 150, 152, 153, 255). இவர் பரணர், நெடுங்கழுத்துப் பரணர் என்பவர்களிலிருந்து வேறானவர். இவர் கண்டீராக் கோப்பெரு நள்ளியையும் வல்வில் ஓரி என்னும் வள்ளலையும் பாடியுள்ளார்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி(148, 149, 150, 151, 158). இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். இவன் கண்டீராக் கோ என்றும் கண்டீராக் கோப்பெரு நள்ளி என்றும் அழைக்கப்பட்டான். தோட்டி மலைக்கும் அதனைச் சார்ந்த பகுதிகட்கும் தலைவனாக விளங்கினான். இவனைப் பாடியவர்கள் வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார், கபிலர், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், பரணர் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆவர்.

பாடலின் பின்னணி: வன்பரணர் நள்ளியிடம் சென்று அவன் அவன் வெற்றிச் சிறப்பையும் வண்மையையும் புகழ்ந்தார். அதனைக் கேட்ட நள்ளி, அப்புகழுரைகளுக்குத் தான் தகுதியுடையவனா என்பதில் தனக்கு ஐயம் உண்டு என்று கூறினான். அவன் கூற்றுக்கு மறுமொழியாக, “ உன் கொடையால் என் வறுமை மறைந்து விட்டது. ஆககவே, பெருமை இல்லாத மன்னர்களின் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய்யாகக் கூற வேண்டிய வறிய நிலை என்னிடம் இல்லை. அதனால், என் நாக்கு ஒருவரையும் அவர் செய்யாததைக் கூறிப் பாராட்டாது” என்று கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.


கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளிநின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்
5 பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே.

அருஞ்சொற்பொருள்:
1.கறங்குதல் = ஒலித்தல்; மிசை = மேல்; பிறங்குதல் = ஒளி செய்தல். 2. அசைவு = மடி, இளைப்பு; நோன்மை = வலிமை; நோன்தாள் = வலிய முயற்சி; நசை = விருப்பம்; ஏத்தி = வாழ்த்தி. 4. கூடு = நெற்கூடு. 5. பீடு = பெருமை. 6. கிளத்தல் = கூறுதல். 7. எய்யாது = அறியாதது.

கொண்டு கூட்டு: நீ பரிசில் முற்றளித்ததால், எம் சிறு செந்நா நசைவளன் ஏத்தி, மன்னரைப் பகழ்ச்சி வேண்டிக் கிளத்தல் எய்யாதாகின்று எனக் கூட்டுக.

உரை: மலை மேலிருந்து ஒலியுடன் விழுந்து விளங்கும் அருவிகள் உள்ள மலை நாட்டு நள்ளி! உன்னுடைய தளராத வலிய முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானைகளோடு கொண்டுவந்து, நெற்குதிர்கள் விளங்கும் பெரிய நகரங்களில் இருக்கும் பரிசிலர்களுக்கு அனைத்தையும் அளிக்கிறாய். ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைக் செய்தது போல் கூறுவதை எம் சிறிய, நடுவு நிலைமை தவறாத நாக்கு அறியாததாயிற்று.

No comments: