Monday, February 4, 2013

378. எஞ்சா மரபின் வஞ்சி!


378. எஞ்சா மரபின் வஞ்சி!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 370-இல் காண்க.
பாடலின் பின்னணி: பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். அதுபோன்ற அணிகலன்களை முன்னர்க் கண்டிராத பாணனின் சுற்றத்தார், விரலில் அணிபவற்றைக் காதிலும், காதில் அணிபவற்றை விரல்களிலும், இடையில் அணிபவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிபவற்றை இடையிலும் மாற்றி அணிந்து கொண்டனர். அந்தக் காட்சி, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தில் விழுந்தவுடன், அவறைக் குரங்குகள் தாறுமாறாக அணிந்து கொண்டதைக் கண்டவர்கள் நகைத்து மகிழ்ந்ததைப் பாணனுக்கு நினைவூட்டியது. அதுபோல், பாணனும் தன் சுற்றத்தாரின் செயல்களைக் கண்டு நகைத்து மகிழ்ந்தான்.   அந்தக் காட்சியைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடாலாக இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாள்ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்             5

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல                         10

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் 15

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்                  20

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு         
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

அருஞ்சொற்பொருள்: 1. பரதவர் = தெற்குத்திசையிலிருந்து வந்து குறும்பு செய்தவர்; மிடல் = வலிமை. 2. வடுகர் = வட நாட்டிலிருந்து வந்து குறும்பு செய்தவர். 4. கடு = விரைவு; கடைஇய = செலுத்திய; பரிவடிம்பு = குதிரையச் செலுத்துவோர் அணியும் காலணி. 5. கோயில் = அரண்மனை. 6. சுதை = சுண்ணாம்பு. 7. கயம் = நீர்நிலை; நகர் = மனை ( வீடு). 8. அரி = மென்மை; இரிதல் = கெடுதல் (கிழிதல்); ஒற்றி = கொட்டி. 9. எஞ்சா = குன்றாத ( குறையாத); வஞ்சி பாட= வஞ்சித்துறைப் பாடல்களைப் பாட 10. வெறுக்கை = பொன், செல்வம் (அணிகலன்கள்). 13. இலம்பாடு = வறுமை; உழந்த = வருந்திய; இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 14. தொடக்கு = கட்டு. 16. அரை = இடை; மிடறு = கழுத்து. 18. தெறல் = அழித்தல். 19. வெளவுதல் = பற்றிக் கொள்ளுதல், கவர்தல்; ஞான்று = காலம், நாள். 20 . மதர் = அழகிய. 22. அறாஅ = நீங்காத. 23. இரு = பெரிய; கிளை = சுற்றம். 24. படர்தல் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்.

கொண்டு கூட்டு: சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழிதந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமையெய்தி உழந்ததன்தலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டுக.

உரை: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, தெற்கிலிருந்து வந்து குறும்பு செய்த பரதவரின் வலிமையை ஒழித்தது மட்டுமல்லாமல் வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையையும் அழித்தவன். தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும், விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்காக பரிவடிம்பு என்னும் காலணியையும், நல்ல மாலையையும், கள்ளையும் உடைய இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில் புதிதாக எழுந்த பிறைபோன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடம் இருந்தது. அவனுடைய அரண்மனை பெரிய, குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்தியதாக இருந்தது. அந்த நெடுமனையின் முன்னே நின்று, நுண்ணிய ஓசையையுடைய பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி, பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை மரபு தவறாமல் பாடினேன். எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப்பல, மேன்மையான, அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும் பெருமளவில் இளஞ்சேட்சென்னி எனக்கும் என் சுற்றத்தாருக்கும் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர்.  மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்.        

No comments: