Sunday, February 17, 2013

382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!


382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ’அரசே, உன்னிடம் பரிசு பெற்ற பொருநர்கள் உன்னைப் புகழ்ந்து கூறியதைக் கேட்டு நான் இங்கு வந்தேன். பாம்பு தன் தோலை நீக்குவது போல் என் வறுமை நீங்கி மற்றவர்களுக்கு நான் உதவி செய்யும் அளவுக்கு எனக்குப் பரிசில் கொடுப்பாயாக. நான் உன் புகழைப் பிறவேந்தர்களின் அவைகளிலெல்லாம் சென்று பாடுவேன்.’ என்று பொருநன் ஒருவன் நலங்கிள்ளியிடம் கூறுவது போல் இப்பாடலை கோவூர் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.


கடற்படை அடல்கொண்டி
மண்டுற்ற மறநோன்றாள்
தண்சோழ நாட்டுப் பொருநன்
அலங்குஉளை அணிஇவுளி
நலங்கிள்ளி நசைப்பொருநரேம்                                                5

பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்
அவற்பாடுதும் அவன்தாள் வாழியஎன
நெய்குய்ய ஊன்நவின்ற
பல்சோற்றான் இன்சுவைய
நல்குவன்நின் பசித்துன்பற                                                                 10

முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
யானும், ஏழ்மணிஅம் கேழணி உத்திக்
கட்கேள்விக் கவைநாவின்
நிறன்உற்ற அராஅப் போலும்
வறன்ஒரீஇ வழங்குவாய்ப்ப                                                     15

விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
நினதே, முந்நீர் உடுத்தஇவ் வியன்உலகு அறிய
எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர்                                20

கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.


அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், வெற்றி; கொண்டி = கொள்ளை பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்). 2. மண்டுதல் = நெருங்குதல், செறிதல்; நோன்மை = வலி. 4. அலங்குதல் = அசைதல்; உளை = குதிரையின் பிடரி மயிர்; இவுளி = குதிரை. 8. குய் = தாளிப்பு; நவிலல் = செய்தல். 12. மூது = பழமை; ஈகை. 13. ஏழ் = எழுச்சி; கேழ் = நிறம்; உத்தி = பாம்பின் படத்தில் உள்ள புள்ளி. 14. கட்கேள்வி = கண்ணால் கேட்கும் (பாம்பு); கவை = பிளவு. 15. நிறன் = நிறம்; அரா = பாம்பு. 16. வறன் = வறுமை; 17. அத்தை – அசைநிலை; கடு = விரைவு; மான் = குதிரை. 18. முந்நீர் = கடல். 19. கிடை = நெட்டி; காழ் = காம்பு. 20. யாத்த = கட்டிய. 21. நுடங்கி = அசைந்து. 22. ஏத்துதல் = புகழ்தல். 23. வேத்தவை = வேந்தவை = அரசவை.    

கொண்டு கூட்டு: சோழநாட்டுப் பொருநன்; பொருநரேம்; வேண்டேம்; வாழிய எனப் பாடுதும்; நின் துன்பற நல்குவன் என்ப; பெரும, அதற்கொண்டு, சிறாரும் யானும், வறன் ஒரீஇ, வாய்ப்ப விடுமதி; உலகம் நினதே; வேத்தவையான் ஏத்துவென் எனக் கூட்டுக.

உரை: ‘கடற்படையைக் கொண்டு சென்று, பகைவரை அழித்து அவர்களிடமிருந்து பெற்ற பொருளும், மிகுந்த வீரமும் வலிமையும் முயற்சியும், அசைகின்ற தலயாட்டம் அணிந்த குதிரைகளையுமுடைய நலங்கிள்ளி குளிர்ச்சி பொருந்திய சோழநாட்டு வேந்தன். நாங்கள் அவனுடைய விருப்பத்துக்குரிய பொருநர். அவனைத் தவிர வேறு எவரையும் பாடிப் பரிசில் பெறுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அவன் திருவடிகள் வாழ்க என்று அவனையே வாழ்த்துவோம். நெய்யிட்டுத் தாளித்த, ஊன் கலந்த பல வகையான சோற்றுடன் இனிய சுவையுள்ள பொருள்களையும் என்னுடைய பசியின் கொடுமையை நீக்குவதற்காக அவன் தருவான்.’ என்று உன் பொருநர் கூறினர். பெரும!, அதனால், முன்பு நீ பரிசு கொடுத்து அனுப்பியதால் உன் ஈகையை அறிந்த சிறுவரும் நானும், எழுச்சி பொருந்திய மணியும், நல்ல நிறமும் புள்ளிகளும் கண்ணில் செவியையும் பிளவுற்ற நாவையும் உடைய பாம்பு, தன் தோலை உரிப்பது போல், எங்கள் வறுமையிலிருந்து நீங்கிப் பிறர்க்கு வழங்கும் வாய்ப்பு உள்ளவர்களாகுமாறு, எங்களுக்கு நீ பரிசில் கொடுத்து அனுப்புவாயாக.  விரைந்து செல்லும் குதிரைகளையுடைய அரசே! கடல் சூழ்ந்த இப்பரந்த உலகம் உன்னுடையது என்பதை அனைவரும் அறிவர். நெட்டியின் காம்பு போல் சுமையில்லாத, தெளிந்த கண்ணையுடைய கிணைப் பறை என்னுடையது. அந்தப் பறையின் கண்ணில் சிறிய கோலால் நான் அடிக்கும் பொழுது அது அதிர்வது போல் உன் பகைவர் நடுங்குமாறு பிற வேந்தர்களின் அவைகளில் உன்னால் வெல்லப்பட்ட தேர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.     

No comments: