Monday, February 4, 2013

380. சேய்மையும் அணிமையும்!


380. சேய்மையும் அணிமையும்!

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. இவர் புறநானூற்றில் 168-ஆம் பாடலை இயற்றிய கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் என்பவரின் தந்தை என் று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 137 – இல் காண்க.
பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்ற புலவர் கருவூர்க் கதப்பிள்ளை, இப்பாடலில் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்ந்து பாடுகிறார். இப்பாடல் சிதைந்துள்ளதால், தெளிவாகப் பொருள் கொள்வது அரிதாக உள்ளது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வட குன் றத்துச் சாந்தம் உரீ இ
. . . . . . . ங்கடல் தானை
இன்னிசையை விறல்வென்றித்
தென்னவர் வயமறவன்                                                             5

மிசைப்பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய
தேறுபெ. . . . . . . . த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்                                    10

நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் சாத்தன் நல்லிசை
. . . சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்                                                                 15

புலம்பல் போயின்று பூத்தஎன் கடும்பே.

அருஞ்சொற்பொருள்: 1. பவ்வம் = கடல்; பூண்டு = சூடி. 2. சாந்தம் = சந்தனம்; உரீஇ = உருவி (பூசி). 4. விறல் = வலி; வென்றி = வெற்றி. 5. வயம் = வலி. 6. மிசை = மேல். 7. குளவி = காட்டு மல்லிகை; கூதளம் = கூதாளிச் செடி; குழைய = தழைக்க. 10. துப்பு = வலிமை; சேய்மையன் = தொலைவில் உள்ளவன். 11. அங்கை = உள்ளங்கை; நண்மை = அண்மை. 13. சிலை = வில்; தார் = மாலை. அன்னன் ஆகன்மாறு = அத்தன்மையனாதலால். 15. இலம்படு = இலம்பாடு = வறுமை. 16. புலம்பு = தனிமை; புலம்பல் = இரங்கல் (தனிமையில் இரங்கல்); கடும்பு = சுற்றம்.

உரை: தென் கடலிலிருந்து எடுத்த முத்துக்களாலான மாலையைச் சூடிய, வடமலையிலிலிருந்து பெற்ற சந்தனத்தைப் பூசிய ……. கடல் போன்ற படையும், இனிய புகழும், போரில் வெற்றியும் பெற்ற பாண்டியருடைய வலிமை மிக்க தானைத் தலைவனுடைய நாட்டில், ஆகாயத்திலிருந்து பெய்த மழைநீர் கடலை அடைந்து முத்தாக மாறும்; நறுமணம் கமழும் காட்டுமல்லிகையோடு கூதாளி செழித்து விளங்கும்…. அவன் இனிய சுளைகளையுடைய பலாமரங்கள் நிறைந்த நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன். அவன் வலிமையோடு போரிட வந்தவர்க்கு நினைவுக்கும் எட்டாத தொலைவில் உள்ளவன்; நட்புடன் வந்தவர்க்கு உள்ளங்கை போல அண்மையில் உள்ளவன்; வலிய வேலையுடைய சாத்தனுடைய நல்ல புகழ்….. வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த இளம் பருவத்தில் உள்ள சிறுவர்களின் தன்மையனாதலால், இந்த நாட்டு மக்கள் வறுமையில் வருந்தும் காலம் வந்தாலும், பொன்னாலான பூவைப் பெற்ற என் சுற்றத்தார், ஆதரவின்றி வறுமையில் தனிமையுற்று வருந்தும் வருத்தம் இல்லாதவர் ஆயினர்.   

No comments: