Sunday, February 17, 2013

384. நெல் என்னாம்! பொன் என்னாம்!


384. நெல் என்னாம்! பொன் என்னாம்!


பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் காண்க.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 381-இல் காண்க.
பாடலின் பின்னணி: கரும்பனூர் கிழானுடைய நாட்டின் வளத்தையும் அவனுடைய வள்ளல் தன்மயையும் ஒரு கிணையன் புகழ்வதுபோல் இப்பாடலைப் புறத்திணை நன்னாகனார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

மென்பாலான் உடன்அணைஇ
வஞ்சிக்கோட்டு உறங்கும் நாரை
அறைக்கரும்பின் பூஅருந்தும்
வன்பாலால் கருங்கால்வரகின்
அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்           5

அங்கண் குறுமுயல் வெருவ அயல
கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;
விழவின் றாயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து;
கரும்பன் ஊரன்  கிணையேம் பெரும           10

நெல்என்னாம் பொன்என்னாம்
கனற்றக் கொண்ட நறவென்னாம்
மனைமன்னா அவைபலவும்
யான்தண்டவும் தான்தண்டான்
நிணம்பெருத்த கொழுஞ்சோற்றிடை            15

மண்நாணப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்
புரந்தோன் எந்தை; யாமமெவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனிவறட்கு
யாண்டும் நிற்க வெள்ளி; மாண்தக                        20

உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.
தின்ற நண்பல் ஊஉன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லைச் செலவு அறியேனே.

அருஞ்சொற்பொருள்: பால் = இடம்; மென்பால் = மருதநிலம்; அணைஇ = மேய்ந்து. 2. கோடு = கிளை. 3. அறைக்கரும்பு = முற்றிய கரும்பு; அருந்துதல் = உண்ணுதல். 4. வன்பால் = முல்லை. 5. கருப்பை = எலி; பூழ் = காடை, கானங்கோழி. 6. வெருவல் = அஞ்சுதல்; அயல = அயலிடத்தே. 7. கோடு = கிளை; இருப்பை = இருப்பை மரம்; உறைதல் = ஒழுகுதல் (உதிர்தல்). 8. மண்டை = பாத்திரம். 9. இரு = பெரிய; கெடிறு = கெளிற்று மீன். 12. கனற்றல் = சுடச்செய்தல். 14. தண்டல் = குறைதல்; 18 தொலைதல் = கெடுதல், சாதல். 19. வறட்கு = வறுமைக்கு. 20. வெள்ளி = வெள்ளி என்றழைக்கப்படும் கோள் (சுக்கிரன்). 21. நுடக்க = வீசி எறிய. 22. நண்பல் = இரு பற்களின் இடை. 23. வைகல் = நாள். 24. எல்லை = பொழுது.

கொண்டு கூட்டு: பெரும, யாம் கிணையேம்; தண்டவும், தண்டான்; வழங்கி,வேட்டு, புரந்தோன்; எந்தை; தொலைவதை எவன்; அன்னோனை உடையேம்; நிற்க, நுடக்கவும் தோண்டவும் வந்த வைகல் அல்லது எல்லை செலவறியேன் எனக் கூட்டுக.

உரை: மருதநிலத்து வயல்களில் கூட்டத்துடன் மேய்ந்து, வஞ்சி மரத்தின் கிளையில் உறங்கும் நாரை, முற்றிய கரும்பின் பூக்களைத் தின்னும்; வன்புலமாகிய முல்லை நிலத்தில் விளையும் கரிய தாளினையுடைய வரகின் அரிகாலில் உள்ள எலியைப் பிடிப்பதற்கு முயலும் சிறிய பறைவைகளின் ஆரவாரத்தால் அங்கே வாழும் சிறுமுயல் அஞ்சி ஓடும்.  அருகே, கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்திலிருந்து பூக்கள் உதிரும். விழா ஒன்றும் நிகழாவிட்டாலும், உழவர்கள் உண்ணும் பாத்திரங்களில் பெரிய கெளிற்று மீன் கலந்த உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் இருக்கும்.  நாங்கள் இத்தகைய கரும்பனூர் கிழானின் கிணையர்கள். பெரும, நெல்லாலும் பொன்னாலும் என்ன பயன்? உடலில் சூடு உண்டாகுமாறு உண்ணும் கள்ளினால் என்ன பயன்? என் இல்லத்தில் இல்லாத பலவற்றையும் நான் கேட்கவும், அவன் குறைவில்லாதவனாய், ஊன் கலந்த கொழுமையான சோற்றில், நீரைவிட அதிகமாக நெய்யை விட்டு, உலகில் உள்ளவர்கள் நாணுமாறு புகழுக்குரிய செயல்களைச் செய்து, எம்மை ஆதரிக்கும் எங்கள் தந்தை போன்ற கரும்பனூர் கிழான் இருக்க நாங்கள் வறுமையைக் குறித்து வருந்த மாட்டோம். வெள்ளி என்னும் கோள் தெற்கே சென்றால் நாட்டில் வறுமை அதிகமாகும் என்று வானநூல் வல்லுநர் கூறுவர். வெள்ளி எங்கே வேண்டுமானலும் இருக்கட்டும்; எங்களுக்குக் கவலை இல்லை. சிறப்பான உணவு அதிகமாக இருந்ததால், உண்ண முடியாமல் எஞ்சி இருந்ததை வீசி எறிந்த நாட்களையும், நல்ல ஊனைத் தின்றதனால், அது பல்லின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட நாட்களையும் அல்லாமல் வேறு வகையில் கழிந்த நாட்களை நான் அறியேன்.

No comments: