Monday, February 4, 2013

381. கரும்பனூரன் காதல் மகன்!


381. கரும்பனூரன் காதல் மகன்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் கண்க.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான் (381, 384). இவன் வேங்கடமலை நாட்டைச் சார்ந்தவன்.  இவனைப் பாடியவர் புறத்திணை நன்னாகனார். இவன், ஓய்மான் நல்லியக் கோடனின் காலத்தவன் என்று கருதப்படுகிறது. இவன் இரவலரை, ’நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப் புரந்ததோன்’ என்று பாடல் 384-இல் புறத்திணை நன்னாகனார் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால், கிணைப்பொருநன்  ஒருவன் தன் சுற்றத்தாருடன் கரும்பனூர் கிழானைக் காணச் சென்றான். கரும்பனூர் கிழான் அவர்களை வரவேற்று விருந்தளித்துச் சிறப்பித்தான். அவன் அவர்களைப் பிரிய விரும்பாததனால், தன்னுடனே அவர்களைச் சில நாட்கள் இருக்க வைத்தான். அப்பொழுது நாட்டில் வறட்சி அதிகமாகியாது; கோடைக்காலமும் வந்தது. சிலநாட்கள் கழிந்த பிறகு, பாணனும் அவன் சுற்றத்தாரும் அவனிடமிருந்து விடைபெற்று, தங்கள் ஊருக்குச் செல்ல விரும்பினர். அதை அறிந்த கரும்பனூர் கிழான், அவர்களுக்கு மிகுந்த செல்வத்தை அளித்து, ’நீங்கள் கோடைக்காலம் முடிந்த பிறகு, வள்ளல் தன்மை இல்லாதவரிடத்துச் செல்ல வேண்டாம், என்னிடம் வருக; நான் உமக்கு வேண்டுவன அளிப்பேன்; நீங்கள் தொலைவில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும் கவலையுறாது என்னிடம் வருக.’ என்றான். இந்த நிகழ்ச்சியை இப்பாடலில் புலவர் புறத்திணை நன்னாகனார் எடுத்துரைத்துள்ளார். 

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆகச்
சென்மோ பெருமஎம் விழவுடை நாட்டுஎன                     5

யாம்தன் அறியுநம் ஆகத் தான்பெரிது
அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
பயம்பகர்வு அறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்                                    10

ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது; புலம்பொடு                                 15

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இருநிலம் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக்கு ஓடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ!                            20

சிறுநனி, ஒருவழிப் படர்கஎன் றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்                                           25

கரும்பன் ஊரன் காதல் மகனே!

அருஞ்சொற்பொருள்: 1. ஊண் = சோறு; முனைதல் = வெறுத்தல். 4. உறுதல் = இருத்தல். 8. துணர் = கொத்து; ஊழ்த்தல் = உதிர்த்தல். 9. பயம் = பயன்; பகர்தல் = கொடுத்தல், விலைகூறல். 9. அரில் = முட்கொடி நிறைந்த புதர். 12. சிதாஅர் = கந்தை; வள்பு = வார். 13. சுகிர்தல் = கிழித்தல், வகிர்தல். 14. விசை = முறை; தவிர்தல் = தங்குதல்; அரலை = குற்றம்; பாணி = தாளம். 15. இலம்பாடு = வறுமை; புலம்புதல் = ஆதரவின்றி வறுமையில் தனியே வாடுதல். 16. தெருமரல் = சுழற்சி; உயக்கம் = வருத்தம். 17. இரு = பெரிய; கூலம் = நெல் முதலிய பலவகை தானியங்கள். 18. பாறுதல் = அழிதல். 21. சிறுநனி = சிறிது நேரம்; படர்தல் = நினைத்தல். 23. உறுவர் = முனிவர் (பெரியோர்); ஊழ் = முறை. 24. அம்பி = மரக்கலம் (தெப்பம்). 24. மானல் = ஒத்தல். 25. இரு = பெரிய; கோள் = கோட்பாடு (குறிக்கோள்); ஈர்த்தல் = அறுத்தல், பிளத்தல்; பூட்கை = கொள்கை.    

கொண்டு கூட்டு: கலந்து, பருகி, விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, அறியுநமாக, நாடன், மகன், அஞ்சி, தோன்றி, ஒற்றி, அகற்றல் யாவது; தீர்க்குவெம், அதனால், கிணைவ, சேயையாயினும், இவணையாயினும், அறிநை படர்க என்றான் எனக் கூட்டுக.

உரை: ஊனும் சோறும் தெவிட்டி வெறுப்பு ஏற்பட்டதால், இனிப்பு உள்ள உணவுப் பொருள்களை விரும்பிப் பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கலந்து செய்தனவும் ஆகியவற்றைத் தக்க அளவுடன் கலந்து கரைத்துக் குடித்து விருந்தினராகப் பசியைப் போக்கிப் பலநாட்கள் இங்கு இருந்தோம். ’பெரும! விழாக்கள் நடைபெரும் எம்முடைய நாட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்; விடை தருக!’ என்று அவனுக்கு அறிவித்தோம்.  ஆனால், அவன் எங்கள் மீது பெரிதும் அன்புடையவனாதலால் எங்களைப் பிரிவதற்கு அஞ்சினான்.

’கொத்துக் கொத்தாகப் பூத்து, எவராலும் கொள்ளப்படாததால், பழுத்துக் கனிந்து, எவர்க்கும் பயன்படாததைப் போல – முட்கள் உள்ள கொடிகள் பின்னிக் கிடக்கும் புதரிடத்தே மழை பெய்தாற் போல – செல்வமிருந்தும் இரவலர்க்கு ஈயாத மன்னர்களின் முற்றத்தில் நின்று, துண்டித்த வார்களால் கட்டப்பட்டுச் சிதைந்த பக்கங்களையுடைய தடாரிப்பறையைக் காய்ந்த ஊன் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் தோல் பொருந்திய கண்ணிடத்தே அறைந்து, முறையாக விரலால் குற்றமில்லாமல் தாளமிட்டுப் பாடும் பாட்டால் எப்படி வறுமையைப் போக்க முடியும்? ஆதரவின்றி வறுமையால் தனிமையில் வருந்தி, வள்ளல்களைத் தேடித் திரிந்து வருந்துவதையும் யாம் போக்குவோம்.  அதனால், இப்பெரிய உலகம் நெல் போன்ற தானிய வகைகளின் விளைச்சல் இல்லாமல் இருக்கும் வறண்ட கோடைக்குப் பிறகு, பெரு முழக்கத்தோடு வரும் மழை பெய்து நீங்கிய பிறகு, நீ தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும் இதை அறிந்து கொள்வாயாக. கிணைவ! நீ வாழ்க!  சிறிது நேரம் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒழுகுவாயாக!’ என்று எங்கள் தந்தை போன்ற கரும்பனூர் கிழான் கூறினான். அவன்  ஒலியுடன் கூடிய வெண்னிறமான அருவியையுடைய வேங்கட நாட்டுக்கு உரியவன். அவன் பெரியோர் ஆயினும் சிறியோர் ஆயினும் வருவோரை ஒருகரையிலிருந்து மற்றொரு கரைக்கு முறைப்படி கொண்டு செல்லும் அறவழியில் இயங்கும் தெப்பம் போல், மறவாமல் பெரிய குறிக்கோளையும், எவராலும் மாற்றமுடியாத கொள்கையையுமுடைய கரும்பனூர் கிழானின் அன்புக்குரிய மகன்.  

No comments: