Sunday, February 17, 2013

385. காவிரி அணையும் படப்பை!


385. காவிரி அணையும் படப்பை!

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை (385). அம்பர் என்னும் ஊர் சோழ நாட்டில், தஞ்சை மாவட்டத்தில், காவிரிக் கரையில் இருந்த ஓரூர். அருவந்தை என்பவன் அவ்வூர்க்குத் தலைவனாக விளங்கினான். இவன் கல்வி கேள்விகளிலும் ஈகையிலும் சிறந்தவனாக இருந்தது மட்டுமல்லாமல் செங்கோல் செலுத்தி நல்லாட்சி நடத்தியதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஒருகால், கல்லாடனார் அம்பர் கிழான் அருவந்தையைக் காணச் சென்றார். அவன் அவரை அன்போடு வரவேற்று உணவும், புத்தாடைகளும் அளித்தான். கல்லாடனார் அவனை நெடுங்காலம் வாழ்க என வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியை இப்பாடலில் கல்லாடனார் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றிற்று இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்அரை                   5

நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அரு வந்தை வாழியர் புல்லிய                           10

வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.


அருஞ்சொற்பொருள்: 1. புள் = பறவை; இயம்பல் = ஒலித்தல். 2. புலரி விடியல் = பொழுது புலரும் விடியற்காலை; பகடு = எருது. 3. கடை = இடம், வாயில். 4. பாடு = ஒலி. 5. வறன் = வறுமை; அரை = இடுப்பு. சிதார் = கந்தை. 7. உடீஇ = உடுப்பித்து. 8. படப்பை = தோட்டம். 11. விறல் = வலிமை; ஓங்கல் = உயர்ந்த; உறை = மழித்துளி.

கொண்டு கூட்டு: தோன்ற, இயம்ப, வாழ்த்தித் தோன்றிற்றுமிலன்; கேட்டு, அருளி, வேண்டி, களைந்து, உடீஇ, என்பசி களைந்தோன், கிழவோன்; அருவந்தை உறையினும் பல வாழியர் எனக் கூட்டுக.

உரை: வானத்தில் வெள்ளி முளைத்தது; பறவைகள் ஒலித்தன; பொழுது புலர ஆரம்பித்தது. அந்த நேரத்தில், நான் அம்பர் கிழான் அருவந்தையின் எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி, அவன் மனைக்குச் செல்லாமல், அவன் மனைக்கு அருகில் உள்ள மனையின் முற்றத்தில் நின்று, தடாரிப் பறையை அறைந்தேன்.  என் பறையின் ஒலியைக் கேட்ட அருவந்தை, என் வறுமையை நீக்க விரும்பி, என் இடையில் இருந்த மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, வெண்ணிற ஆடையை உடுப்பித்து, எனக்கு உணவளித்து என் பசியைப் போக்கினான். காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியவனாகிய நல்ல அருவந்தை என்பவன் புல்லி என்பவனுடைய வலிய வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து பெய்யும் மழைத்துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக.

No comments: