Sunday, February 17, 2013

383. வெள்ளி நிலை பரிகோ!


383. வெள்ளி நிலை பரிகோ!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது. ’கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு அவியன் என்பவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்.
பாடலின் பின்னணி: அவியன் என்பவனின் கொடைத்தன்மையைப் பொருநன் ஒருவன் புகழ்வதை இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.


ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன்புகழ் ஏத்தினெ னாக என்வலத்து            5

இடுக்கண் இரியல் போக ஊன்புலந்து
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
தேம்பாய் உள்ள தம்கமழ் மடருணப்
பாம்புஉரி அன்ன வடிவின காம்பின்            10

கழைபடு சொலியின் இழைஅணி வாரா                                            
ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
மெல்லணைக் கிடந்தோன் .. .. ..                            15

எற்பெயர்ந்த.. .. .. .. ..  நோக்கி . . . . .                                               
. . . . அதற்கொண்டு                                                                          
அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்புஅறி யேனே
குறுமுலைக்கு அலமரும் பால்ஆர் வெண்மறி          20

நரைமுக வூகமொடு உகளும் வரையமல். . .
. . . . . . குன்றுபல கெழீ இய                                                    
கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்என
ஒருவனை உடையேன் மன்னே
அறான்எவன் பரிகோ வெள்ளியது நிலையே.        25


அருஞ்சொற்பொருள்: 1. ஒண் = ஒளிபொருந்திய; எடுப்புதல் = எழுப்புதல்; ஏற்று = மரத்தினால் செய்த மேடை. 2. புலர்தல் = விடிதல்; ஞாங்கர் = பொழுது. 3. சிலம்புதல் = ஒலித்தல்; ஒற்றி = அறைந்து. 4. கடை = வாயில்; பகடு = எருது. 6. இரியல் = விட்டுப் போதல்; புலத்தல் = துன்புறுதல். 7. கடி = காவல். 8. கூம்பல் = குவிதல்; பிணி = அரும்பு. 9. மடர் = மடார் = குழியுள்ள பாத்திரம். 10. காம்பு = மூங்கில்; கழை = கோல்; சொலி = மூங்கிலின் உட்புறத்தே உள்ள தோல். 12. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து. 13. வசிந்து = தலைவனை வயமாக்கி; வாங்கு = வளைவு; நுசுப்பு = இடுப்பு; உந்தி = கொப்பூழ். 14. புல்லுதல் = தழுவல்; 16. எற்பெயர்த்த = என்னைவிட்டு நீங்கிய. 19. படர்பு = செல்லுதல். 20. மறி = ஆட்டுக்குட்டி. 21. ஊகம் = குரங்கு; வரை = மூங்கில்; அமல் = நிறைவு. 22. கெழீஇய = பொருந்திய. 25. அறான் = நீங்கான்; பரிதல் = வருந்துதல்.

கொண்டு கூட்டு: எழுந்து, ஒற்றி, நின்று, வாழ்த்தி ஏத்தினேனாக, இரியல்போக, உண, வேண்டி, உடீஇ, மடந்தை, புல்லக்கிடந்தோன் …. நோக்கி … ஆகி, படர்பு அறியேன்; அவியனென ஒருவனை உடையன், அறான், நிலைக்கு எவன் பரிகோ எனக் கூட்டுக.

உரை: ஒளி பொருந்திய புள்ளிகளை உடைய சேவல் கூவி எழுப்ப, அக்குரல் கேட்டு எழுந்து, குளிர்ந்த பனி பெய்யும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோலால் சிறிய கிணைப்பறையை ஒலியுடன் அறைந்து, பெரிய வாயிலில் நின்று, பல எருதுகளைப் பலவாக வாழ்த்தி, நான் அவினனைப் புகழ்ந்து பாராட்டிப் பாடினேன். அரிய காவலுடைய பெரிய மாளிகைக்குள் என்னை வரவழைத்து, என்னை வலிமையாக வாட்டிக் கொண்டிருந்த வறுமைத் துன்பம் நீங்குமாறு, அரும்பாகக் குவிந்திருந்து விரிந்த  மெல்லிய ஆம்பல் மலர் போன்ற கள்ளின் இனிய தெளிவை, குழியுள்ள குவளையில் பெய்து அவன் என்னை உண்ணச் செய்தான்; பாம்பின் தோல் போன்ற அழகுடையதும், மூங்கிற்கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற மென்மையானதும், ஒளிபொருந்திய பூப்போன்றதுமான உடையை உடுக்கச் செய்தான். நெய்யப்பட்ட இழைகளின் வரிசையை அந்த உடையில் காண முடியவில்லை.

நுண்ணிய அணிகலன்களை அணிந்து, வசியப்படுத்தும் வளைந்த இடையையும், அழகிய சுழி பொருந்திய கொப்பூழையுமுடைய கற்பிற் சிறந்த மனைவி அவன் முதுவைத் தழுவிக் கிடக்க, மெல்லிய அணைமேல் அவன் படுத்திருந்தான்.  என்னைவிட்டு நீங்கிய ….. பார்த்து…., அதுகொண்டு, நான் புதுப்பிறவி எடுத்ததைப் போல், பிறர் புகழைப் பாடிச் செல்வதை அறியாதவன் ஆனேன். தாயின் சிறிய முலையில் பாலுண்ணுவதற்காகத் தாயைச் சுற்றித் திரியும் ஆட்டுக்குட்டி, வெளுத்த முகத்தையுடைய குரங்குக் குட்டியுடன் தாவும் மூங்கில் நிறைந்த குன்றுகள் பல பொருந்திய காடுகளுடைய நாட்டுக்குரியவனாகிய, விரைந்து செல்லும் தேர்களையுடைய அவியன் என்னும் ஒருவனை நான் எனக்குத் தலைவனாக உடையேன். அவன் எனக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த மட்டான். வெள்ளியின் ( வெள்ளி என்னும் கோளின்) நிலையைக் குறித்து நான் வருந்த மாட்டேன்.         
சிறப்புக் குறிப்பு: வெள்ளி (சுக்கிரன்) என்னும் கோள் தெற்கு நோக்கிச் சென்றால், நாட்டில் மழை பெய்யாமல், வறட்சி அதிகமாகி, வறுமை மிகுந்து மக்கள் துன்பத்துக்குள்ளாவார்கள் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்தது.  நாட்டில் வறட்சி மிகுந்து வறுமையால் மக்கள் வாடினாலும் தான் அவியனிடமிருந்து பெருமளவில் பரிசு பெற்றதால், தனக்கு ஒரு துன்பமும் வராது என்று பொருநன் கூறுவதாக மாறோக்கத்து நப்பசலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

1 comment:

sivaraman said...

congrats. your puram400 project will complete shortly. this project is very use full to all tamil people.
by
A.sivaraman
Erichalur(erichy)
Pudukkottai
Tamilnadu.
india.