Monday, February 4, 2013

379. இலங்கை கிழவோன்!


379. இலங்கை கிழவோன்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176 -இல் காண்க.
பாடப்பட்டோன்: ஓய்மான் வில்லியாதன் (379). இவன் ஓய்மான் நல்லியக் கோடனுக்குப் பிறகு, ஓய்மா நாட்டை ஆண்டவன். இவன் மாவிலங்கையின் தலைவனாக விளங்கினான். இவனைப் பாடியவர் புறத்திணை நன்னாகனார். 
பாடலின் பின்னணி: கிணைப்பொருநன் ஒருவன் ஓய்மான் வில்லியாதனைப் புகழ்ந்து கூறியதைக் கேட்டுத், தாயிடம் பால் குடிக்க ஆர்வத்தோடு வரும் கன்று போல மற்றொரு பொருநன் ஒருவன் அவனை நாடி வந்ததாகப் புலவர் புறத்திணை நன்னாகனார் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: பரிசில் துறை. பரிசிலர் புரவலனிடம் சென்று தாம் பெறக் கருதியது இதுவெனக் கூறுதல்.

யானே பெறுகஅவன் தாள்நிழல் வாழ்க்கை
அவனே பெறுகஎன் நாஇசை நுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்                                    5

நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம் பெரும!
குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர்
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
வல்லன் எந்தை பசிதீர்த் தல்எனக்                                            10

கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
விண்தோய் தலைய குன்றம் பின்பட
நசைதர வந்தனென் யானே வசையில்
தாயில்  தூஉங் குழவி போலத்                                        15

திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.

அருஞ்சொற்பொருள்: 2. நுவறல் = கூறல். 3. தொழுவர் = மருதநிலத்து மக்கள், தொழில் செய்வோர். 4. பின்னை = மேலும்; மறம் = வலிமை; செத்து = கருதி, உவமை உருபு. 5. அள்ளல் = சேறு; உரிஞ்சுதல் = தேய்த்தல். 6. அமலல் = அதிகரித்தல், மிகுதல்; புரவு = ஆற்றுநீர் பாயும் வயல்; இலங்கை = மாவிலங்கை என்னும் ஊர்; கிழவோன் = உரிமையுடைவன் (தலைவன்). 8. ஏற்றை = ஆண் விலங்கு (பன்றி); விளர்தல் = வெளுத்தல். 11. கொன் = காலம் ( விடியற்காலை). 12. வேட்கை = விருப்பம்; தண்டாது = அமையாமல் (அடங்காமல்). 13. தலை = உச்சி. 14.  நசை = விருப்பம். 15. தாயில் = தாயிடத்தில்; தூஉம் = பருகும். 16. ஐது = அழகு, நுண்ணியது, மெல்லியது. 17. மங்குல் = மேகம்; மறுகு = தெரு. 18. குறும்பு = அரண்; குண்டு = ஆழம்.

கொண்டு கூட்டு: நின் கிணைவன், என, கிணைவன் கூறக் கேட்டதிற்கொண்டும், தண்டாது பிற்பட, நசைதர, ஊர், குழவிபோல, வந்தனென் எனக் கூட்டுக.

உரை:  ’அவனுடைய கால்நிழலில் வாழும் வாழ்க்கையை நான் பெறுவேனாக; என் நாவால் புகழ்ந்து பாடும் பாடலை அவன் ஒருவனே பெறுவானாக. நெல்லை அறுவடை செய்பவர்கள், தம்முடைய அரிவாள் கூர்மை மழுங்கினால், வலிமையோடு தொடர்ந்து அரிவதற்காக, சேற்றில் உள்ள ஆமையின் வளைந்த முதுகில் தீட்டும், மிகுதியாக நெல் விளையும் வயல்கள் உள்ள மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான வில்லியாதனுக்கு நாங்கள் கிணைப் பொருநர்.  எங்கள் தலைவனான அவன் குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுத்த வெண்ணிறமான ஊன்துண்டுகளை நல்ல நறுமணமுள்ள நெய்யுருக்குப் பெய்து, பொரித்து, சோற்றோடு கொடுத்து எம் பசியைப் போக்க வல்லவன்.’ என்று, பெரும, விடியற்காலை உன்னைப் பாடும் உன் கிணைப்பொருநன் என்னிடம் கூறினான். அதைக் கேட்டதும் எனக்கு உன்னைக் காணவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்தது. ஆகவே, வானளாவிய குன்றுகளைக் கடந்து, உன் செல்வமுள்ள மனையிலிருந்து மெதுவாகத் தோன்றும் நறுமணம் கமழும் புகை, மழைபொழிய வரும் மேகம் போலத் தெருவை மறைக்கும் அரணை அடுத்துள்ள ஆழமான அகழியையும், நீண்ட மதிலையுமுடைய உன் ஊர்க்கு, குற்றமற்ற தாயிடம் பால் குடிப்பதற்கு வரும் கன்று போலப் பரிசு பெறும் ஆர்வத்தால் நான் உன்னிடம் வந்தேன்.

No comments: