Sunday, February 17, 2013

386. வேண்டியது உணர்ந்தோன்!


386. வேண்டியது உணர்ந்தோன்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளி வளவன் தமக்குச் செய்த உதவிகளை இப்பாடலில் கோவூர் கிழார் எடுத்துரைத்து, இனி வெள்ளி என்னும் கோள் எங்குச் சென்றாலும் தமக்குக் கவலை இல்லை என்று கூறி அவனை வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறைமுகக்கவும்
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
ஊன்கொண்ட வெண்மண்டை            5

ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
வெய்துஉண்ட வியர்ப்புஅல்லது
செய்தொழிலான் வியர்ப்புஅறியாமை
ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்               10

பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின்று
புறவே,  புல்லருந்து பல்லாயத்தான்
வில்இருந்த வெங்குறும்பின்று
கடலே, கால்தந்த கலன்எண்ணுவோர்
கானற் புன்னைச் சினை யலைக்குந்து           15

கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே;
பொராஅப் பொருநரேம்
குணதிசை நின்று குடமுதற் செலினும்          20

குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளியாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே.        25

அருஞ்சொற்பொருள்: 1. கயம் = குளம். 2. மாரி = மழை. 3. வறை = வறுவல்; முகத்தல் = மூக்கால் நுகருதல். 4. சூடு = சுடப்பட்ட இறைச்சி; மிசைதல் = உண்ணுதல். 5. மண்டை = இரப்போர் கலம். 8. வியர்ப்பு = வியர்வை. 11. ததும்புதல் = நிறைதல். 12. புறவு = முல்லைக்காடு. 13. குறும்பு = அரண். 15. கானல் = கடற்கரைச் சோலை. 6. கழி = கடல் சார்ந்த பகுதி (உப்பங் கழி); கொள்ளை = விலை; சாற்றுதல் = சொல்லுதல், விற்றல். 17. கல் = மலை; உமணர் = உப்பு விற்பவர்கள். 20. குணதிசை = கிழக்குத் திசை. 21. குடதிசை = மேற்குத் திசை. 24. வெள்ளி = வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்).

கொண்டு கூட்டு: முகக்கவும், மிசையவும், முற்றழிப்பவும், ஈத்தோன். எந்தை; வயல் பூத் ததும்பின்று; சினையலைக்குந்து; வெங்குறும்பின்று; உமணொலிக்குந்து; அன்ன நாட்டுப் பொருநம் யாம்; பொராஅப் பொருநரேம்; செலினும், நீடினும், யாண்டும் நிற்க; உணர்ந்தோன் தாள் வாழிய எனக் கூட்டுக.

உரை: மிக்க நீர் நிறைந்த குளத்தில் மழைத்துளி விழும்பொழுது எழும் ஒலியைப் போல் நெய்யில் வறுக்கப்பட்ட பொழுது ஒலி உண்டாக்கிய வறுவலை மூக்கால் நுகர்ந்து உண்டோம்; சூட்டுக்கோலால் குத்திச் சூடுபடுத்தப்பட்ட இறைச்சியைத் தின்றோம்; ஊன் வைத்திருந்த வெண்ணிறமான பாத்திரம் பாலால் நிரம்பி வழிந்தது; இவ்வாறு உண்பவற்றைச் சுடச்சுட உண்பதால் வியர்த்தலை அல்லாமல் வேறு தொழில் செய்வதால் வியர்வை உண்டாகாத வகையில் எங்களுக்கு எந்தை போன்ற கிள்ளிவளவன் உணவளித்துப் புகழுக்கு உரியவனானான். வயல்களுக்கு வேலியாக நடப்பட்டிருக்கும் நீண்ட கரும்புகள் உள்ள பாத்தியில், பலவகையான பூக்கள் பூத்து நிரம்பின; காடு, புல்மேயும் ஆனிரைகள் நிறைந்தாகவும், வில்லேந்திய வீரர்களின் காவலிலிருந்த இடமாகவும் இருந்தது. கடலில் காற்றால் கொண்டுவரப்பட்ட கப்பல்களை எண்ணும் மகளிர் தங்கியிருக்கும் சோலையில் உள்ள புன்னை மரங்களின் கிளைகள் கடலலையால் அலைக்கப்படுகின்றன. கடல் சார்ந்த கழிகளில் உள்ள வெண்ணிறமான உப்பைப் பெரிய மலைகள் பொருந்திய நல்ல நாடுகளுக்குக் கொண்டு சென்று விலை கூறி விற்கும் உமணர்களின் குடிகள் சிறந்து விளங்கும். நாங்கள் அத்தகைய நல்ல நாட்டுப் பொருநர். நாங்கள் போரிடும் பொருநர் அல்லர். வெள்ளி, கிழக்கே இருந்து மேற்கே சென்றாலும், மேற்கே இருந்து கிழக்கே சென்றாலும், வடக்கே இருந்து தெற்கே சென்றாலும் செல்லட்டும். அல்லது, எங்கும் செல்லாமல் தெற்கேயே வெள்ளி நெடுநாள் நின்றாலும்  நிற்கட்டும். எங்கள் குறிப்பை உணர்ந்து எங்களுக்கு வேண்டியதை அளிப்பவன் கிள்ளிவளவன். அவனுடைய திருவடிகள் வாழ்க.

385. காவிரி அணையும் படப்பை!


385. காவிரி அணையும் படப்பை!

பாடியவர்: கல்லாடனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை (385). அம்பர் என்னும் ஊர் சோழ நாட்டில், தஞ்சை மாவட்டத்தில், காவிரிக் கரையில் இருந்த ஓரூர். அருவந்தை என்பவன் அவ்வூர்க்குத் தலைவனாக விளங்கினான். இவன் கல்வி கேள்விகளிலும் ஈகையிலும் சிறந்தவனாக இருந்தது மட்டுமல்லாமல் செங்கோல் செலுத்தி நல்லாட்சி நடத்தியதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஒருகால், கல்லாடனார் அம்பர் கிழான் அருவந்தையைக் காணச் சென்றார். அவன் அவரை அன்போடு வரவேற்று உணவும், புத்தாடைகளும் அளித்தான். கல்லாடனார் அவனை நெடுங்காலம் வாழ்க என வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியை இப்பாடலில் கல்லாடனார் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
தன்கடைத் தோன்றிற்று இலனே பிறன்கடை
அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
வறன்யான் நீங்கல் வேண்டி என்அரை                   5

நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல்அரு வந்தை வாழியர் புல்லிய                           10

வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.


அருஞ்சொற்பொருள்: 1. புள் = பறவை; இயம்பல் = ஒலித்தல். 2. புலரி விடியல் = பொழுது புலரும் விடியற்காலை; பகடு = எருது. 3. கடை = இடம், வாயில். 4. பாடு = ஒலி. 5. வறன் = வறுமை; அரை = இடுப்பு. சிதார் = கந்தை. 7. உடீஇ = உடுப்பித்து. 8. படப்பை = தோட்டம். 11. விறல் = வலிமை; ஓங்கல் = உயர்ந்த; உறை = மழித்துளி.

கொண்டு கூட்டு: தோன்ற, இயம்ப, வாழ்த்தித் தோன்றிற்றுமிலன்; கேட்டு, அருளி, வேண்டி, களைந்து, உடீஇ, என்பசி களைந்தோன், கிழவோன்; அருவந்தை உறையினும் பல வாழியர் எனக் கூட்டுக.

உரை: வானத்தில் வெள்ளி முளைத்தது; பறவைகள் ஒலித்தன; பொழுது புலர ஆரம்பித்தது. அந்த நேரத்தில், நான் அம்பர் கிழான் அருவந்தையின் எருதுகளாகிய செல்வத்தை வாழ்த்தி, அவன் மனைக்குச் செல்லாமல், அவன் மனைக்கு அருகில் உள்ள மனையின் முற்றத்தில் நின்று, தடாரிப் பறையை அறைந்தேன்.  என் பறையின் ஒலியைக் கேட்ட அருவந்தை, என் வறுமையை நீக்க விரும்பி, என் இடையில் இருந்த மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, வெண்ணிற ஆடையை உடுப்பித்து, எனக்கு உணவளித்து என் பசியைப் போக்கினான். காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல்விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்னும் ஊர்க்கு உரியவனாகிய நல்ல அருவந்தை என்பவன் புல்லி என்பவனுடைய வலிய வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து பெய்யும் மழைத்துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக.

384. நெல் என்னாம்! பொன் என்னாம்!


384. நெல் என்னாம்! பொன் என்னாம்!


பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் காண்க.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 381-இல் காண்க.
பாடலின் பின்னணி: கரும்பனூர் கிழானுடைய நாட்டின் வளத்தையும் அவனுடைய வள்ளல் தன்மயையும் ஒரு கிணையன் புகழ்வதுபோல் இப்பாடலைப் புறத்திணை நன்னாகனார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

மென்பாலான் உடன்அணைஇ
வஞ்சிக்கோட்டு உறங்கும் நாரை
அறைக்கரும்பின் பூஅருந்தும்
வன்பாலால் கருங்கால்வரகின்
அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்           5

அங்கண் குறுமுயல் வெருவ அயல
கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து;
விழவின் றாயினும் உழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து;
கரும்பன் ஊரன்  கிணையேம் பெரும           10

நெல்என்னாம் பொன்என்னாம்
கனற்றக் கொண்ட நறவென்னாம்
மனைமன்னா அவைபலவும்
யான்தண்டவும் தான்தண்டான்
நிணம்பெருத்த கொழுஞ்சோற்றிடை            15

மண்நாணப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்
புரந்தோன் எந்தை; யாமமெவன் தொலைவதை
அன்னோனை உடையேம் என்ப இனிவறட்கு
யாண்டும் நிற்க வெள்ளி; மாண்தக                        20

உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்.
தின்ற நண்பல் ஊஉன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லைச் செலவு அறியேனே.

அருஞ்சொற்பொருள்: பால் = இடம்; மென்பால் = மருதநிலம்; அணைஇ = மேய்ந்து. 2. கோடு = கிளை. 3. அறைக்கரும்பு = முற்றிய கரும்பு; அருந்துதல் = உண்ணுதல். 4. வன்பால் = முல்லை. 5. கருப்பை = எலி; பூழ் = காடை, கானங்கோழி. 6. வெருவல் = அஞ்சுதல்; அயல = அயலிடத்தே. 7. கோடு = கிளை; இருப்பை = இருப்பை மரம்; உறைதல் = ஒழுகுதல் (உதிர்தல்). 8. மண்டை = பாத்திரம். 9. இரு = பெரிய; கெடிறு = கெளிற்று மீன். 12. கனற்றல் = சுடச்செய்தல். 14. தண்டல் = குறைதல்; 18 தொலைதல் = கெடுதல், சாதல். 19. வறட்கு = வறுமைக்கு. 20. வெள்ளி = வெள்ளி என்றழைக்கப்படும் கோள் (சுக்கிரன்). 21. நுடக்க = வீசி எறிய. 22. நண்பல் = இரு பற்களின் இடை. 23. வைகல் = நாள். 24. எல்லை = பொழுது.

கொண்டு கூட்டு: பெரும, யாம் கிணையேம்; தண்டவும், தண்டான்; வழங்கி,வேட்டு, புரந்தோன்; எந்தை; தொலைவதை எவன்; அன்னோனை உடையேம்; நிற்க, நுடக்கவும் தோண்டவும் வந்த வைகல் அல்லது எல்லை செலவறியேன் எனக் கூட்டுக.

உரை: மருதநிலத்து வயல்களில் கூட்டத்துடன் மேய்ந்து, வஞ்சி மரத்தின் கிளையில் உறங்கும் நாரை, முற்றிய கரும்பின் பூக்களைத் தின்னும்; வன்புலமாகிய முல்லை நிலத்தில் விளையும் கரிய தாளினையுடைய வரகின் அரிகாலில் உள்ள எலியைப் பிடிப்பதற்கு முயலும் சிறிய பறைவைகளின் ஆரவாரத்தால் அங்கே வாழும் சிறுமுயல் அஞ்சி ஓடும்.  அருகே, கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்திலிருந்து பூக்கள் உதிரும். விழா ஒன்றும் நிகழாவிட்டாலும், உழவர்கள் உண்ணும் பாத்திரங்களில் பெரிய கெளிற்று மீன் கலந்த உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் இருக்கும்.  நாங்கள் இத்தகைய கரும்பனூர் கிழானின் கிணையர்கள். பெரும, நெல்லாலும் பொன்னாலும் என்ன பயன்? உடலில் சூடு உண்டாகுமாறு உண்ணும் கள்ளினால் என்ன பயன்? என் இல்லத்தில் இல்லாத பலவற்றையும் நான் கேட்கவும், அவன் குறைவில்லாதவனாய், ஊன் கலந்த கொழுமையான சோற்றில், நீரைவிட அதிகமாக நெய்யை விட்டு, உலகில் உள்ளவர்கள் நாணுமாறு புகழுக்குரிய செயல்களைச் செய்து, எம்மை ஆதரிக்கும் எங்கள் தந்தை போன்ற கரும்பனூர் கிழான் இருக்க நாங்கள் வறுமையைக் குறித்து வருந்த மாட்டோம். வெள்ளி என்னும் கோள் தெற்கே சென்றால் நாட்டில் வறுமை அதிகமாகும் என்று வானநூல் வல்லுநர் கூறுவர். வெள்ளி எங்கே வேண்டுமானலும் இருக்கட்டும்; எங்களுக்குக் கவலை இல்லை. சிறப்பான உணவு அதிகமாக இருந்ததால், உண்ண முடியாமல் எஞ்சி இருந்ததை வீசி எறிந்த நாட்களையும், நல்ல ஊனைத் தின்றதனால், அது பல்லின் இடுக்குகளில் சிக்கிக் கொண்ட நாட்களையும் அல்லாமல் வேறு வகையில் கழிந்த நாட்களை நான் அறியேன்.

383. வெள்ளி நிலை பரிகோ!


383. வெள்ளி நிலை பரிகோ!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 37-இல் காண்க.
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது. ’கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு அவியன் என்பவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்.
பாடலின் பின்னணி: அவியன் என்பவனின் கொடைத்தன்மையைப் பொருநன் ஒருவன் புகழ்வதை இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.


ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
தன்புகழ் ஏத்தினெ னாக என்வலத்து            5

இடுக்கண் இரியல் போக ஊன்புலந்து
அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
தேம்பாய் உள்ள தம்கமழ் மடருணப்
பாம்புஉரி அன்ன வடிவின காம்பின்            10

கழைபடு சொலியின் இழைஅணி வாரா                                            
ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
மெல்லணைக் கிடந்தோன் .. .. ..                            15

எற்பெயர்ந்த.. .. .. .. ..  நோக்கி . . . . .                                               
. . . . அதற்கொண்டு                                                                          
அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
பிறர், பாடுபுகழ் பாடிப் படர்புஅறி யேனே
குறுமுலைக்கு அலமரும் பால்ஆர் வெண்மறி          20

நரைமுக வூகமொடு உகளும் வரையமல். . .
. . . . . . குன்றுபல கெழீ இய                                                    
கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்என
ஒருவனை உடையேன் மன்னே
அறான்எவன் பரிகோ வெள்ளியது நிலையே.        25


அருஞ்சொற்பொருள்: 1. ஒண் = ஒளிபொருந்திய; எடுப்புதல் = எழுப்புதல்; ஏற்று = மரத்தினால் செய்த மேடை. 2. புலர்தல் = விடிதல்; ஞாங்கர் = பொழுது. 3. சிலம்புதல் = ஒலித்தல்; ஒற்றி = அறைந்து. 4. கடை = வாயில்; பகடு = எருது. 6. இரியல் = விட்டுப் போதல்; புலத்தல் = துன்புறுதல். 7. கடி = காவல். 8. கூம்பல் = குவிதல்; பிணி = அரும்பு. 9. மடர் = மடார் = குழியுள்ள பாத்திரம். 10. காம்பு = மூங்கில்; கழை = கோல்; சொலி = மூங்கிலின் உட்புறத்தே உள்ள தோல். 12. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து. 13. வசிந்து = தலைவனை வயமாக்கி; வாங்கு = வளைவு; நுசுப்பு = இடுப்பு; உந்தி = கொப்பூழ். 14. புல்லுதல் = தழுவல்; 16. எற்பெயர்த்த = என்னைவிட்டு நீங்கிய. 19. படர்பு = செல்லுதல். 20. மறி = ஆட்டுக்குட்டி. 21. ஊகம் = குரங்கு; வரை = மூங்கில்; அமல் = நிறைவு. 22. கெழீஇய = பொருந்திய. 25. அறான் = நீங்கான்; பரிதல் = வருந்துதல்.

கொண்டு கூட்டு: எழுந்து, ஒற்றி, நின்று, வாழ்த்தி ஏத்தினேனாக, இரியல்போக, உண, வேண்டி, உடீஇ, மடந்தை, புல்லக்கிடந்தோன் …. நோக்கி … ஆகி, படர்பு அறியேன்; அவியனென ஒருவனை உடையன், அறான், நிலைக்கு எவன் பரிகோ எனக் கூட்டுக.

உரை: ஒளி பொருந்திய புள்ளிகளை உடைய சேவல் கூவி எழுப்ப, அக்குரல் கேட்டு எழுந்து, குளிர்ந்த பனி பெய்யும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோலால் சிறிய கிணைப்பறையை ஒலியுடன் அறைந்து, பெரிய வாயிலில் நின்று, பல எருதுகளைப் பலவாக வாழ்த்தி, நான் அவினனைப் புகழ்ந்து பாராட்டிப் பாடினேன். அரிய காவலுடைய பெரிய மாளிகைக்குள் என்னை வரவழைத்து, என்னை வலிமையாக வாட்டிக் கொண்டிருந்த வறுமைத் துன்பம் நீங்குமாறு, அரும்பாகக் குவிந்திருந்து விரிந்த  மெல்லிய ஆம்பல் மலர் போன்ற கள்ளின் இனிய தெளிவை, குழியுள்ள குவளையில் பெய்து அவன் என்னை உண்ணச் செய்தான்; பாம்பின் தோல் போன்ற அழகுடையதும், மூங்கிற்கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற மென்மையானதும், ஒளிபொருந்திய பூப்போன்றதுமான உடையை உடுக்கச் செய்தான். நெய்யப்பட்ட இழைகளின் வரிசையை அந்த உடையில் காண முடியவில்லை.

நுண்ணிய அணிகலன்களை அணிந்து, வசியப்படுத்தும் வளைந்த இடையையும், அழகிய சுழி பொருந்திய கொப்பூழையுமுடைய கற்பிற் சிறந்த மனைவி அவன் முதுவைத் தழுவிக் கிடக்க, மெல்லிய அணைமேல் அவன் படுத்திருந்தான்.  என்னைவிட்டு நீங்கிய ….. பார்த்து…., அதுகொண்டு, நான் புதுப்பிறவி எடுத்ததைப் போல், பிறர் புகழைப் பாடிச் செல்வதை அறியாதவன் ஆனேன். தாயின் சிறிய முலையில் பாலுண்ணுவதற்காகத் தாயைச் சுற்றித் திரியும் ஆட்டுக்குட்டி, வெளுத்த முகத்தையுடைய குரங்குக் குட்டியுடன் தாவும் மூங்கில் நிறைந்த குன்றுகள் பல பொருந்திய காடுகளுடைய நாட்டுக்குரியவனாகிய, விரைந்து செல்லும் தேர்களையுடைய அவியன் என்னும் ஒருவனை நான் எனக்குத் தலைவனாக உடையேன். அவன் எனக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த மட்டான். வெள்ளியின் ( வெள்ளி என்னும் கோளின்) நிலையைக் குறித்து நான் வருந்த மாட்டேன்.         
சிறப்புக் குறிப்பு: வெள்ளி (சுக்கிரன்) என்னும் கோள் தெற்கு நோக்கிச் சென்றால், நாட்டில் மழை பெய்யாமல், வறட்சி அதிகமாகி, வறுமை மிகுந்து மக்கள் துன்பத்துக்குள்ளாவார்கள் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்தது.  நாட்டில் வறட்சி மிகுந்து வறுமையால் மக்கள் வாடினாலும் தான் அவியனிடமிருந்து பெருமளவில் பரிசு பெற்றதால், தனக்கு ஒரு துன்பமும் வராது என்று பொருநன் கூறுவதாக மாறோக்கத்து நப்பசலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!


382. கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ’அரசே, உன்னிடம் பரிசு பெற்ற பொருநர்கள் உன்னைப் புகழ்ந்து கூறியதைக் கேட்டு நான் இங்கு வந்தேன். பாம்பு தன் தோலை நீக்குவது போல் என் வறுமை நீங்கி மற்றவர்களுக்கு நான் உதவி செய்யும் அளவுக்கு எனக்குப் பரிசில் கொடுப்பாயாக. நான் உன் புகழைப் பிறவேந்தர்களின் அவைகளிலெல்லாம் சென்று பாடுவேன்.’ என்று பொருநன் ஒருவன் நலங்கிள்ளியிடம் கூறுவது போல் இப்பாடலை கோவூர் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.


கடற்படை அடல்கொண்டி
மண்டுற்ற மறநோன்றாள்
தண்சோழ நாட்டுப் பொருநன்
அலங்குஉளை அணிஇவுளி
நலங்கிள்ளி நசைப்பொருநரேம்                                                5

பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்
அவற்பாடுதும் அவன்தாள் வாழியஎன
நெய்குய்ய ஊன்நவின்ற
பல்சோற்றான் இன்சுவைய
நல்குவன்நின் பசித்துன்பற                                                                 10

முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
யானும், ஏழ்மணிஅம் கேழணி உத்திக்
கட்கேள்விக் கவைநாவின்
நிறன்உற்ற அராஅப் போலும்
வறன்ஒரீஇ வழங்குவாய்ப்ப                                                     15

விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
நினதே, முந்நீர் உடுத்தஇவ் வியன்உலகு அறிய
எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர்                                20

கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.


அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், வெற்றி; கொண்டி = கொள்ளை பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்). 2. மண்டுதல் = நெருங்குதல், செறிதல்; நோன்மை = வலி. 4. அலங்குதல் = அசைதல்; உளை = குதிரையின் பிடரி மயிர்; இவுளி = குதிரை. 8. குய் = தாளிப்பு; நவிலல் = செய்தல். 12. மூது = பழமை; ஈகை. 13. ஏழ் = எழுச்சி; கேழ் = நிறம்; உத்தி = பாம்பின் படத்தில் உள்ள புள்ளி. 14. கட்கேள்வி = கண்ணால் கேட்கும் (பாம்பு); கவை = பிளவு. 15. நிறன் = நிறம்; அரா = பாம்பு. 16. வறன் = வறுமை; 17. அத்தை – அசைநிலை; கடு = விரைவு; மான் = குதிரை. 18. முந்நீர் = கடல். 19. கிடை = நெட்டி; காழ் = காம்பு. 20. யாத்த = கட்டிய. 21. நுடங்கி = அசைந்து. 22. ஏத்துதல் = புகழ்தல். 23. வேத்தவை = வேந்தவை = அரசவை.    

கொண்டு கூட்டு: சோழநாட்டுப் பொருநன்; பொருநரேம்; வேண்டேம்; வாழிய எனப் பாடுதும்; நின் துன்பற நல்குவன் என்ப; பெரும, அதற்கொண்டு, சிறாரும் யானும், வறன் ஒரீஇ, வாய்ப்ப விடுமதி; உலகம் நினதே; வேத்தவையான் ஏத்துவென் எனக் கூட்டுக.

உரை: ‘கடற்படையைக் கொண்டு சென்று, பகைவரை அழித்து அவர்களிடமிருந்து பெற்ற பொருளும், மிகுந்த வீரமும் வலிமையும் முயற்சியும், அசைகின்ற தலயாட்டம் அணிந்த குதிரைகளையுமுடைய நலங்கிள்ளி குளிர்ச்சி பொருந்திய சோழநாட்டு வேந்தன். நாங்கள் அவனுடைய விருப்பத்துக்குரிய பொருநர். அவனைத் தவிர வேறு எவரையும் பாடிப் பரிசில் பெறுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அவன் திருவடிகள் வாழ்க என்று அவனையே வாழ்த்துவோம். நெய்யிட்டுத் தாளித்த, ஊன் கலந்த பல வகையான சோற்றுடன் இனிய சுவையுள்ள பொருள்களையும் என்னுடைய பசியின் கொடுமையை நீக்குவதற்காக அவன் தருவான்.’ என்று உன் பொருநர் கூறினர். பெரும!, அதனால், முன்பு நீ பரிசு கொடுத்து அனுப்பியதால் உன் ஈகையை அறிந்த சிறுவரும் நானும், எழுச்சி பொருந்திய மணியும், நல்ல நிறமும் புள்ளிகளும் கண்ணில் செவியையும் பிளவுற்ற நாவையும் உடைய பாம்பு, தன் தோலை உரிப்பது போல், எங்கள் வறுமையிலிருந்து நீங்கிப் பிறர்க்கு வழங்கும் வாய்ப்பு உள்ளவர்களாகுமாறு, எங்களுக்கு நீ பரிசில் கொடுத்து அனுப்புவாயாக.  விரைந்து செல்லும் குதிரைகளையுடைய அரசே! கடல் சூழ்ந்த இப்பரந்த உலகம் உன்னுடையது என்பதை அனைவரும் அறிவர். நெட்டியின் காம்பு போல் சுமையில்லாத, தெளிந்த கண்ணையுடைய கிணைப் பறை என்னுடையது. அந்தப் பறையின் கண்ணில் சிறிய கோலால் நான் அடிக்கும் பொழுது அது அதிர்வது போல் உன் பகைவர் நடுங்குமாறு பிற வேந்தர்களின் அவைகளில் உன்னால் வெல்லப்பட்ட தேர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடுவேன்.     

Monday, February 4, 2013

381. கரும்பனூரன் காதல் மகன்!


381. கரும்பனூரன் காதல் மகன்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176-இல் கண்க.
பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான் (381, 384). இவன் வேங்கடமலை நாட்டைச் சார்ந்தவன்.  இவனைப் பாடியவர் புறத்திணை நன்னாகனார். இவன், ஓய்மான் நல்லியக் கோடனின் காலத்தவன் என்று கருதப்படுகிறது. இவன் இரவலரை, ’நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப் புரந்ததோன்’ என்று பாடல் 384-இல் புறத்திணை நன்னாகனார் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால், கிணைப்பொருநன்  ஒருவன் தன் சுற்றத்தாருடன் கரும்பனூர் கிழானைக் காணச் சென்றான். கரும்பனூர் கிழான் அவர்களை வரவேற்று விருந்தளித்துச் சிறப்பித்தான். அவன் அவர்களைப் பிரிய விரும்பாததனால், தன்னுடனே அவர்களைச் சில நாட்கள் இருக்க வைத்தான். அப்பொழுது நாட்டில் வறட்சி அதிகமாகியாது; கோடைக்காலமும் வந்தது. சிலநாட்கள் கழிந்த பிறகு, பாணனும் அவன் சுற்றத்தாரும் அவனிடமிருந்து விடைபெற்று, தங்கள் ஊருக்குச் செல்ல விரும்பினர். அதை அறிந்த கரும்பனூர் கிழான், அவர்களுக்கு மிகுந்த செல்வத்தை அளித்து, ’நீங்கள் கோடைக்காலம் முடிந்த பிறகு, வள்ளல் தன்மை இல்லாதவரிடத்துச் செல்ல வேண்டாம், என்னிடம் வருக; நான் உமக்கு வேண்டுவன அளிப்பேன்; நீங்கள் தொலைவில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும் கவலையுறாது என்னிடம் வருக.’ என்றான். இந்த நிகழ்ச்சியை இப்பாடலில் புலவர் புறத்திணை நன்னாகனார் எடுத்துரைத்துள்ளார். 

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆகச்
சென்மோ பெருமஎம் விழவுடை நாட்டுஎன                     5

யாம்தன் அறியுநம் ஆகத் தான்பெரிது
அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
பயம்பகர்வு அறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்                                    10

ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது; புலம்பொடு                                 15

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இருநிலம் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கிசைக்கு ஓடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ!                            20

சிறுநனி, ஒருவழிப் படர்கஎன் றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்                                           25

கரும்பன் ஊரன் காதல் மகனே!

அருஞ்சொற்பொருள்: 1. ஊண் = சோறு; முனைதல் = வெறுத்தல். 4. உறுதல் = இருத்தல். 8. துணர் = கொத்து; ஊழ்த்தல் = உதிர்த்தல். 9. பயம் = பயன்; பகர்தல் = கொடுத்தல், விலைகூறல். 9. அரில் = முட்கொடி நிறைந்த புதர். 12. சிதாஅர் = கந்தை; வள்பு = வார். 13. சுகிர்தல் = கிழித்தல், வகிர்தல். 14. விசை = முறை; தவிர்தல் = தங்குதல்; அரலை = குற்றம்; பாணி = தாளம். 15. இலம்பாடு = வறுமை; புலம்புதல் = ஆதரவின்றி வறுமையில் தனியே வாடுதல். 16. தெருமரல் = சுழற்சி; உயக்கம் = வருத்தம். 17. இரு = பெரிய; கூலம் = நெல் முதலிய பலவகை தானியங்கள். 18. பாறுதல் = அழிதல். 21. சிறுநனி = சிறிது நேரம்; படர்தல் = நினைத்தல். 23. உறுவர் = முனிவர் (பெரியோர்); ஊழ் = முறை. 24. அம்பி = மரக்கலம் (தெப்பம்). 24. மானல் = ஒத்தல். 25. இரு = பெரிய; கோள் = கோட்பாடு (குறிக்கோள்); ஈர்த்தல் = அறுத்தல், பிளத்தல்; பூட்கை = கொள்கை.    

கொண்டு கூட்டு: கலந்து, பருகி, விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, அறியுநமாக, நாடன், மகன், அஞ்சி, தோன்றி, ஒற்றி, அகற்றல் யாவது; தீர்க்குவெம், அதனால், கிணைவ, சேயையாயினும், இவணையாயினும், அறிநை படர்க என்றான் எனக் கூட்டுக.

உரை: ஊனும் சோறும் தெவிட்டி வெறுப்பு ஏற்பட்டதால், இனிப்பு உள்ள உணவுப் பொருள்களை விரும்பிப் பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கலந்து செய்தனவும் ஆகியவற்றைத் தக்க அளவுடன் கலந்து கரைத்துக் குடித்து விருந்தினராகப் பசியைப் போக்கிப் பலநாட்கள் இங்கு இருந்தோம். ’பெரும! விழாக்கள் நடைபெரும் எம்முடைய நாட்டிற்குச் செல்ல விரும்புகிறோம்; விடை தருக!’ என்று அவனுக்கு அறிவித்தோம்.  ஆனால், அவன் எங்கள் மீது பெரிதும் அன்புடையவனாதலால் எங்களைப் பிரிவதற்கு அஞ்சினான்.

’கொத்துக் கொத்தாகப் பூத்து, எவராலும் கொள்ளப்படாததால், பழுத்துக் கனிந்து, எவர்க்கும் பயன்படாததைப் போல – முட்கள் உள்ள கொடிகள் பின்னிக் கிடக்கும் புதரிடத்தே மழை பெய்தாற் போல – செல்வமிருந்தும் இரவலர்க்கு ஈயாத மன்னர்களின் முற்றத்தில் நின்று, துண்டித்த வார்களால் கட்டப்பட்டுச் சிதைந்த பக்கங்களையுடைய தடாரிப்பறையைக் காய்ந்த ஊன் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் தோல் பொருந்திய கண்ணிடத்தே அறைந்து, முறையாக விரலால் குற்றமில்லாமல் தாளமிட்டுப் பாடும் பாட்டால் எப்படி வறுமையைப் போக்க முடியும்? ஆதரவின்றி வறுமையால் தனிமையில் வருந்தி, வள்ளல்களைத் தேடித் திரிந்து வருந்துவதையும் யாம் போக்குவோம்.  அதனால், இப்பெரிய உலகம் நெல் போன்ற தானிய வகைகளின் விளைச்சல் இல்லாமல் இருக்கும் வறண்ட கோடைக்குப் பிறகு, பெரு முழக்கத்தோடு வரும் மழை பெய்து நீங்கிய பிறகு, நீ தொலைவில் உள்ள நாட்டில் இருந்தாலும், இந்த நாட்டிலேயே இருந்தாலும் இதை அறிந்து கொள்வாயாக. கிணைவ! நீ வாழ்க!  சிறிது நேரம் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒழுகுவாயாக!’ என்று எங்கள் தந்தை போன்ற கரும்பனூர் கிழான் கூறினான். அவன்  ஒலியுடன் கூடிய வெண்னிறமான அருவியையுடைய வேங்கட நாட்டுக்கு உரியவன். அவன் பெரியோர் ஆயினும் சிறியோர் ஆயினும் வருவோரை ஒருகரையிலிருந்து மற்றொரு கரைக்கு முறைப்படி கொண்டு செல்லும் அறவழியில் இயங்கும் தெப்பம் போல், மறவாமல் பெரிய குறிக்கோளையும், எவராலும் மாற்றமுடியாத கொள்கையையுமுடைய கரும்பனூர் கிழானின் அன்புக்குரிய மகன்.  

380. சேய்மையும் அணிமையும்!


380. சேய்மையும் அணிமையும்!

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. இவர் புறநானூற்றில் 168-ஆம் பாடலை இயற்றிய கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் என்பவரின் தந்தை என் று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 137 – இல் காண்க.
பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்ற புலவர் கருவூர்க் கதப்பிள்ளை, இப்பாடலில் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்ந்து பாடுகிறார். இப்பாடல் சிதைந்துள்ளதால், தெளிவாகப் பொருள் கொள்வது அரிதாக உள்ளது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வட குன் றத்துச் சாந்தம் உரீ இ
. . . . . . . ங்கடல் தானை
இன்னிசையை விறல்வென்றித்
தென்னவர் வயமறவன்                                                             5

மிசைப்பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய
தேறுபெ. . . . . . . . த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்                                    10

நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் சாத்தன் நல்லிசை
. . . சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்                                                                 15

புலம்பல் போயின்று பூத்தஎன் கடும்பே.

அருஞ்சொற்பொருள்: 1. பவ்வம் = கடல்; பூண்டு = சூடி. 2. சாந்தம் = சந்தனம்; உரீஇ = உருவி (பூசி). 4. விறல் = வலி; வென்றி = வெற்றி. 5. வயம் = வலி. 6. மிசை = மேல். 7. குளவி = காட்டு மல்லிகை; கூதளம் = கூதாளிச் செடி; குழைய = தழைக்க. 10. துப்பு = வலிமை; சேய்மையன் = தொலைவில் உள்ளவன். 11. அங்கை = உள்ளங்கை; நண்மை = அண்மை. 13. சிலை = வில்; தார் = மாலை. அன்னன் ஆகன்மாறு = அத்தன்மையனாதலால். 15. இலம்படு = இலம்பாடு = வறுமை. 16. புலம்பு = தனிமை; புலம்பல் = இரங்கல் (தனிமையில் இரங்கல்); கடும்பு = சுற்றம்.

உரை: தென் கடலிலிருந்து எடுத்த முத்துக்களாலான மாலையைச் சூடிய, வடமலையிலிலிருந்து பெற்ற சந்தனத்தைப் பூசிய ……. கடல் போன்ற படையும், இனிய புகழும், போரில் வெற்றியும் பெற்ற பாண்டியருடைய வலிமை மிக்க தானைத் தலைவனுடைய நாட்டில், ஆகாயத்திலிருந்து பெய்த மழைநீர் கடலை அடைந்து முத்தாக மாறும்; நறுமணம் கமழும் காட்டுமல்லிகையோடு கூதாளி செழித்து விளங்கும்…. அவன் இனிய சுளைகளையுடைய பலாமரங்கள் நிறைந்த நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன். அவன் வலிமையோடு போரிட வந்தவர்க்கு நினைவுக்கும் எட்டாத தொலைவில் உள்ளவன்; நட்புடன் வந்தவர்க்கு உள்ளங்கை போல அண்மையில் உள்ளவன்; வலிய வேலையுடைய சாத்தனுடைய நல்ல புகழ்….. வில்லைப்போல் வளைந்த மாலையணிந்த இளம் பருவத்தில் உள்ள சிறுவர்களின் தன்மையனாதலால், இந்த நாட்டு மக்கள் வறுமையில் வருந்தும் காலம் வந்தாலும், பொன்னாலான பூவைப் பெற்ற என் சுற்றத்தார், ஆதரவின்றி வறுமையில் தனிமையுற்று வருந்தும் வருத்தம் இல்லாதவர் ஆயினர்.   

379. இலங்கை கிழவோன்!


379. இலங்கை கிழவோன்!

பாடியவர்: புறத்திணை நன்னாகனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 176 -இல் காண்க.
பாடப்பட்டோன்: ஓய்மான் வில்லியாதன் (379). இவன் ஓய்மான் நல்லியக் கோடனுக்குப் பிறகு, ஓய்மா நாட்டை ஆண்டவன். இவன் மாவிலங்கையின் தலைவனாக விளங்கினான். இவனைப் பாடியவர் புறத்திணை நன்னாகனார். 
பாடலின் பின்னணி: கிணைப்பொருநன் ஒருவன் ஓய்மான் வில்லியாதனைப் புகழ்ந்து கூறியதைக் கேட்டுத், தாயிடம் பால் குடிக்க ஆர்வத்தோடு வரும் கன்று போல மற்றொரு பொருநன் ஒருவன் அவனை நாடி வந்ததாகப் புலவர் புறத்திணை நன்னாகனார் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: பரிசில் துறை. பரிசிலர் புரவலனிடம் சென்று தாம் பெறக் கருதியது இதுவெனக் கூறுதல்.

யானே பெறுகஅவன் தாள்நிழல் வாழ்க்கை
அவனே பெறுகஎன் நாஇசை நுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்                                    5

நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம் பெரும!
குறுந்தாள் ஏற்றைக் கொழுங்கண் நல்விளர்
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
வல்லன் எந்தை பசிதீர்த் தல்எனக்                                            10

கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
விண்தோய் தலைய குன்றம் பின்பட
நசைதர வந்தனென் யானே வசையில்
தாயில்  தூஉங் குழவி போலத்                                        15

திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே.

அருஞ்சொற்பொருள்: 2. நுவறல் = கூறல். 3. தொழுவர் = மருதநிலத்து மக்கள், தொழில் செய்வோர். 4. பின்னை = மேலும்; மறம் = வலிமை; செத்து = கருதி, உவமை உருபு. 5. அள்ளல் = சேறு; உரிஞ்சுதல் = தேய்த்தல். 6. அமலல் = அதிகரித்தல், மிகுதல்; புரவு = ஆற்றுநீர் பாயும் வயல்; இலங்கை = மாவிலங்கை என்னும் ஊர்; கிழவோன் = உரிமையுடைவன் (தலைவன்). 8. ஏற்றை = ஆண் விலங்கு (பன்றி); விளர்தல் = வெளுத்தல். 11. கொன் = காலம் ( விடியற்காலை). 12. வேட்கை = விருப்பம்; தண்டாது = அமையாமல் (அடங்காமல்). 13. தலை = உச்சி. 14.  நசை = விருப்பம். 15. தாயில் = தாயிடத்தில்; தூஉம் = பருகும். 16. ஐது = அழகு, நுண்ணியது, மெல்லியது. 17. மங்குல் = மேகம்; மறுகு = தெரு. 18. குறும்பு = அரண்; குண்டு = ஆழம்.

கொண்டு கூட்டு: நின் கிணைவன், என, கிணைவன் கூறக் கேட்டதிற்கொண்டும், தண்டாது பிற்பட, நசைதர, ஊர், குழவிபோல, வந்தனென் எனக் கூட்டுக.

உரை:  ’அவனுடைய கால்நிழலில் வாழும் வாழ்க்கையை நான் பெறுவேனாக; என் நாவால் புகழ்ந்து பாடும் பாடலை அவன் ஒருவனே பெறுவானாக. நெல்லை அறுவடை செய்பவர்கள், தம்முடைய அரிவாள் கூர்மை மழுங்கினால், வலிமையோடு தொடர்ந்து அரிவதற்காக, சேற்றில் உள்ள ஆமையின் வளைந்த முதுகில் தீட்டும், மிகுதியாக நெல் விளையும் வயல்கள் உள்ள மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான வில்லியாதனுக்கு நாங்கள் கிணைப் பொருநர்.  எங்கள் தலைவனான அவன் குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுத்த வெண்ணிறமான ஊன்துண்டுகளை நல்ல நறுமணமுள்ள நெய்யுருக்குப் பெய்து, பொரித்து, சோற்றோடு கொடுத்து எம் பசியைப் போக்க வல்லவன்.’ என்று, பெரும, விடியற்காலை உன்னைப் பாடும் உன் கிணைப்பொருநன் என்னிடம் கூறினான். அதைக் கேட்டதும் எனக்கு உன்னைக் காணவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்தது. ஆகவே, வானளாவிய குன்றுகளைக் கடந்து, உன் செல்வமுள்ள மனையிலிருந்து மெதுவாகத் தோன்றும் நறுமணம் கமழும் புகை, மழைபொழிய வரும் மேகம் போலத் தெருவை மறைக்கும் அரணை அடுத்துள்ள ஆழமான அகழியையும், நீண்ட மதிலையுமுடைய உன் ஊர்க்கு, குற்றமற்ற தாயிடம் பால் குடிப்பதற்கு வரும் கன்று போலப் பரிசு பெறும் ஆர்வத்தால் நான் உன்னிடம் வந்தேன்.

378. எஞ்சா மரபின் வஞ்சி!


378. எஞ்சா மரபின் வஞ்சி!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 370-இல் காண்க.
பாடலின் பின்னணி: பெரிய சுற்றத்துடன் கூடிய பாணன் ஒருவன் வறுமையில் இருந்தான். அவன் இளஞ்சேட்சென்னியின் அரண்மனையை அடைந்து, அதன் முன்னே நின்று, கிணைப்பறையைக் கொட்டி வஞ்சித்துறைப் பாடல்களைப் பாடினான். அவனைக் கண்டவுடன், இளஞ்சேட்சென்னி, அப்பாணனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பல அரிய அணிகலன்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் பரிசாக அளித்தான். அதுபோன்ற அணிகலன்களை முன்னர்க் கண்டிராத பாணனின் சுற்றத்தார், விரலில் அணிபவற்றைக் காதிலும், காதில் அணிபவற்றை விரல்களிலும், இடையில் அணிபவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிபவற்றை இடையிலும் மாற்றி அணிந்து கொண்டனர். அந்தக் காட்சி, இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தில் விழுந்தவுடன், அவறைக் குரங்குகள் தாறுமாறாக அணிந்து கொண்டதைக் கண்டவர்கள் நகைத்து மகிழ்ந்ததைப் பாணனுக்கு நினைவூட்டியது. அதுபோல், பாணனும் தன் சுற்றத்தாரின் செயல்களைக் கண்டு நகைத்து மகிழ்ந்தான்.   அந்தக் காட்சியைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடாலாக இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

தென்பரதவர் மிடல்சாய
வடவடுகர் வாள்ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்             5

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல மிகப்பல                         10

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் 15

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
.நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்                  20

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு         
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

அருஞ்சொற்பொருள்: 1. பரதவர் = தெற்குத்திசையிலிருந்து வந்து குறும்பு செய்தவர்; மிடல் = வலிமை. 2. வடுகர் = வட நாட்டிலிருந்து வந்து குறும்பு செய்தவர். 4. கடு = விரைவு; கடைஇய = செலுத்திய; பரிவடிம்பு = குதிரையச் செலுத்துவோர் அணியும் காலணி. 5. கோயில் = அரண்மனை. 6. சுதை = சுண்ணாம்பு. 7. கயம் = நீர்நிலை; நகர் = மனை ( வீடு). 8. அரி = மென்மை; இரிதல் = கெடுதல் (கிழிதல்); ஒற்றி = கொட்டி. 9. எஞ்சா = குன்றாத ( குறையாத); வஞ்சி பாட= வஞ்சித்துறைப் பாடல்களைப் பாட 10. வெறுக்கை = பொன், செல்வம் (அணிகலன்கள்). 13. இலம்பாடு = வறுமை; உழந்த = வருந்திய; இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 14. தொடக்கு = கட்டு. 16. அரை = இடை; மிடறு = கழுத்து. 18. தெறல் = அழித்தல். 19. வெளவுதல் = பற்றிக் கொள்ளுதல், கவர்தல்; ஞான்று = காலம், நாள். 20 . மதர் = அழகிய. 22. அறாஅ = நீங்காத. 23. இரு = பெரிய; கிளை = சுற்றம். 24. படர்தல் = நினைத்தல்; எவ்வம் = துன்பம்.

கொண்டு கூட்டு: சோழன் கோயில் நீணகர் நின்று, ஒற்றி, பாட, பொழிதந்தோன்; ஒக்கல் அதுகண்டு தொடக்குநரும், செறிக்குநரும், யாக்குநரும், யாக்குநருமாய், கிளை பொலிந்தாங்கு, தலைமையெய்தி உழந்ததன்தலை அருநகை இனிது பெற்றிகும் எனக் கூட்டுக.

உரை: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி, தெற்கிலிருந்து வந்து குறும்பு செய்த பரதவரின் வலிமையை ஒழித்தது மட்டுமல்லாமல் வடக்கிலிருந்து வந்து குறும்பு செய்த வடுகரின் வாட்படையையும் அழித்தவன். தொடுக்கப்பட்ட கண்ணியையும், நன்கு செய்யப்பட்ட வேலை ஏந்திய பெரிய கையையும், விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்துவதற்காக பரிவடிம்பு என்னும் காலணியையும், நல்ல மாலையையும், கள்ளையும் உடைய இளஞ்சேட்சென்னியின் அரண்மனையில் புதிதாக எழுந்த பிறைபோன்ற, வெண்ணிறச் சுண்ணாம்பு பூசப்பட்ட மாடம் இருந்தது. அவனுடைய அரண்மனை பெரிய, குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி பொருந்தியதாக இருந்தது. அந்த நெடுமனையின் முன்னே நின்று, நுண்ணிய ஓசையையுடைய பெரிய கிணைப் பறை கிழியுமாறு கொட்டி, பகைமேற் செல்லும்போது பாடும் வஞ்சித்துறைப் பாடல்களை மரபு தவறாமல் பாடினேன். எம்மைப் போன்ற பரிசிலர்க்குக் கொடுப்பதற்காகச் செய்யப்படாத, மிகப்பல, மேன்மையான, அரிய அணிகலன்களையும் பிற செல்வங்களையும் பெருமளவில் இளஞ்சேட்சென்னி எனக்கும் என் சுற்றத்தாருக்கும் தாங்க முடியாத அளவுக்கு வழங்கினான். வறுமையால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார், அவன் வழங்கிய பொருள்களை எல்லாம் கண்டவுடன் அவற்றை ஆர்வத்தோடு எடுத்து, விரல்களில் அணிவனவற்றைக் காதிலும், காதில் அணிவனவற்றைக் விரல்களிலும், இடையில் அணியவேண்டியவற்றைக் கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியவற்றைக் இடையிலும் அணிந்து கொண்டனர்.  மிகுந்த வலிமையுடைய இராமனுடன் கூடியிருந்த சீதையை, வலிய அரக்கன் கவர்ந்துகொண்டு செல்லும்பொழுது, சீதை கழற்றி எறிந்த நகைகள் நிலத்தே விழுந்தவுடன் அந்த நகைகளைக் கண்டெடுத்த, சிவந்த முகமுடைய குரங்குகளின் கூட்டம் அவற்றைத் தாறுமாறாக அணிந்ததைக் கண்டோர் நகைத்து மகிழ்ந்தனர். அதுபோல், பெரிய சுற்றத்திற்குத் தலைமை தாங்கி, அவர்களின் வறுமையைக் களையும் நேரத்தில், பல அரிய எண்ணங்களினால் உண்டாகிய துன்பம் நீங்குமாறு, நாங்களும் அரிய மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்.        

377. நாடு அவன் நாடே!


377. நாடு அவன் நாடே!

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 258-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருநாள் இரவு, வறுமையில் வாடிய பொருநன் ஒருவன் தன் கிணைப்பறையை ஒலித்து, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் அரண்மனை வாயிலில் நின்றான். வேந்தர்களில் பெருநற்கிள்ளிக்கு ஒப்பானவன் யாருமில்லை என்று பலரும் பாராட்டுவதைக் கேட்டான். அதைக் கேட்ட பொருநன் மதி மயங்கினான். அப்பொருநனைக் கண்ட பெருநற்கிள்ளி, அவனை வரவேற்று, மணியும், பொன்னும், முத்தும், நல்ல உடைகளும், கள்ளும் அளித்தான். பொருநனுக்குக் கனவில் கண்டது நனவாகியது போல் இருந்தது.  நாடுகளில் சிறந்தது பெருநற்கிள்ளியின் சோழநாடு என்றும், வேந்தர்களில் சிறந்தவன் பெருநற்கிள்ளிதான் என்றும் பலரும் கூறுவதை எண்ணிப் பார்த்தான். பெருநற்கிள்ளியின் யனைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எல்லாம் திரண்டிருப்பது கடலின் முழக்கம் போல் இருப்பாதாகப் பொருநனுக்குத் தோன்றியது. பொருநன், பெருநற்கிள்ளியை ‘நீடு வாழ்க!’ என வாழ்த்தினான்.  பொருநன் பரிசு பெற்றதையும் அவன் மனநிலையையும் புலவர் உலோச்சனார் இப்பாடலில் சித்திரிக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

பனிபழுனிய பல்யாமத்துப்
பாறுதலை மயிர்நனைய
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
இனையல் அகற்றஎன் கிணைதொடாக் குறுகி
அவிஉணவினோர் புறங்காப்ப                                                 5

அறநெஞ்சத்தோன் வாழ்நாள்என்று
அதற்கொண்டு வரல்ஏத்திக்
கரவுஇல்லாக் கவிவண்கையான்
வாழ்கஎனப் பெயர்பெற்றோர்
பிறர்க்குஉவமம் தான்அல்லது                                                  10
தனக்குவமம் பிறரில்லென

அதுநினைத்து மதிமழுகி
அங்குநின்ற எற்காணூஉச்
சேய்நாட்டுச் செல்கிணைஞனை
நீபுரவலை எமக்குஎன்ன                                                           15

மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்                                   
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
நனவின் நல்கியோன் நசைசால் தோன்றல்                                20

நாடுஎன மொழிவோர் அவன்நாடென மொழிவோர்                          
வேந்தென மொழிவோரவன் வேந்தென மொழிவோர்
புகர்நுதலவிர் பொற்கோட்டு யானையர்
கவர்பரிக் கச்சைநன்மாவினர்
வடிமணி வாங்குஉருள                                                             25
கொடிமிசைநற் றேர்க்குழுவினர்                                                                 

கதழிசை வன்கணினர்
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
கடல்ஒலி கொண்ட தானை
அடல்வெங் குருசில்! மன்னிய நெடிதே!                                     30

அருஞ்சொற்பொருள்: 1. பழுனுதல் = முதிர்தல்; யாமம் = இரவு. 2. பாறுதல் = சிதறுதல். 3. துஞ்சும் = தூங்கும்; திருநகர் = செல்வமுள்ள மாளிகை; வரைப்பு = சுவர் சூழ்ந்த இடம். 4. இனையல் = வருந்தல். 5. அவி = தேவர் உணவு, வேள்விப் பொருள்; புறங்காத்தல் = பாதுகாத்தல். 8. கரவு = மறைவு, களவு. 12. மழுகுதல் = மயங்குதல், மழுங்குதல். 16. பயத்தல் = கொடுத்தல், உண்டாதல், விளைதல்; கடறு = காடு (மலைச்சாரல்). 18. சேறு = கள்; தசும்பு = கள் வைக்குங் குடம். 20. நசை = அன்பு, விருப்பம். 23. புகர் = புள்ளி; நுதல் = நெற்றி; அவிர்தல் = விளங்கல்; பொன் = இரும்பு; கோடு = கொம்பு (தந்தம்); பொற்கோட்டு யானை = இரும்பாலான கிம்புரி என்னும் அணிகலனைத் தந்தத்தின் நுனியில் அணிந்திருக்கும் யானை. 24. கவர்தல் = விரும்புதல்; பரி = விரைவு. 25. வடி = ஆராய்ச்சி; வாங்கு = வளைவு. 26. மிசை = மேல். 27. கதழ்தல் = விரைதல்; வன்கண் = வீரத்தன்மை. 28. ஈண்டுதல் = கூடுதல். 30. குரிசில் = குருசில் = தலைவன்; மன்னுதல் = நிலைபெறுதல்.

கொண்டு கூட்டு: அகற்ற, குறுகி, பிறர்இல்லென, நினைந்து, மழுகி, நின்ற எற்காணூஉ, என்ன, நிற்ப, தோன்றல், நல்கியோன்; மொழிவோர்; மொழிவோர்;  யானையர், மாவினர், குழுவினர், வன்கணினர், வாழ்நர், ஈண்டுக்கொண்ட தானையையுடைய குரிசில் நெடிது மன்னிய எனக் கூட்டுக.

உரை: பனி மிகுந்த பல இரவுகளில், தலையில் பனிபடும்படி உறங்கியதால், பரந்து கலைந்து தோன்றும் என் தலைமயிர் பனியால் நனைந்து படிந்து கிடந்தது. செல்வம் மிகுந்த மாளிகையில் உள்ளவர்கள் இனிது உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த மாளிகையின் பக்கத்தில் நின்று, என் வறுமையைப் போக்கக் கருதி என் தடாரிப்பறையை இசைத்தேன். வேள்வியில் அளிக்கப்படும் உணவை உண்ணும் தேவர்கள் அந்த மாளிகையில் இருந்த வேந்தனைப் பாதுகாத்தனர். ’அறத்தை நெஞ்சில் உடைய வேந்தன் நெடுநாள் வாழ்வானாக!’ என்று பலரும் வாழ்த்தினர். வாழ்த்தியவர்களை வேந்தன் வரவேற்றான். ’இரவலர்க்கு ஓளிவு மறைவின்றிக் கொடுக்கும் கையையுடையவராதலால் நெடிது வாழ்க’ என்று புலவர்களால் வாழ்த்தப்பட்ட பிற வேந்தர்க்கு, இவ்வேந்தன் உவமம் அல்லது இவனுக்குப் பிற வேந்தர்கள் உவமம் இல்லை என்று சான்றோர் பலர் பாராட்டினர். அவர்கள் பாராட்டியதை நினைத்து நான் மதி கலங்கி நின்றேன். அங்கே, என்னைக் கண்டு, ‘தொலைவில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் கிணைப் பொருநனே, நான் உனக்கு ஆதரவு அளிக்கிறேன்.’ என்று கூறி, மலையிலிருந்து கிடைத்த மணிகளையும், காட்டிலிருந்து பெற்ற பொன்னையும், கடலிலிருந்து பெற்ற ஒளியையுடைய முத்துக்களையும், வேறுவேறு வகையான உடைகளையும், கள் நிறைந்த குடங்களையும், நான் இனிமேல் வறுமையில் வருந்தாமல் இருப்பதற்காக அன்பு நிறைந்த வேந்தன் அளித்தான். அவனுடைய கொடை, நான் கனவில் கண்டது நனவில் நிறைவேறியது போல் இருந்தது.  நாடுகளில் சிறந்த நாட்டைப் பற்றிப் பேசுபவர்கள் பெருநற்கிள்ளியின் நாடுதான் சிறந்தது என்று கூறுவர். வேந்தர்களில் சிறந்த வேந்தன் யார் என்று பேசுபவர்கள் பெருநற்கிள்ளிதான் சிறந்த வேந்தன் என்று கூறுவர்.

புள்ளிகள் பொருந்திய நெற்றியையும் விளங்குகின்ற கிம்புரி அணிந்த கொம்பினையுமுடைய யானைப்படை, காண்போர் உள்ளத்தைக் கவரும் ஓட்டமும் கச்சும் அணிந்த குதிரைப்படை, ஆய்ந்தெடுத்த மணியின் ஓசையையும் வளைந்த சக்கரங்களையும் மேலே கொடியையும் உடைய  நல்ல தேர்ப்படை, விரைவும் புகழும் வீரமுமுடைய வாட்படை ஆகிய படைகளைச் சார்ந்த வீரர்கள் ஆர்வத்தோடு கூடி உள்ளனர். பெருநற்கிள்ளியின் படைமுழக்கம் கடலின் முழக்கம் போல் உள்ளது. போரில் வெற்றி பெறுவதை விரும்பும் வேந்தனாகிய பெருநற்கிள்ளி நெடுங்காலம் வாழ்வானாக!
                 
சிறப்புக் குறிப்பு: இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி கொடையில் சிறந்து விளங்கியதும், புகழ் மிகுந்தவனாக இருந்ததும், அவனுடைய படையின் சிறப்பும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.