Tuesday, October 23, 2012

356. காதலர் அழுத கண்ணீர்


356. காதலர் அழுத கண்ணீர்

பாடியவர்: கதையங் கண்ணனார் (356). இவர் இயற்பெயர் கண்ணன். இவர் கதையன் என்பவரின் மகனாகையால் கதையன் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார்.  சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் புறநானூற்றில் உள்ள 356-ஆம் பாடல் ஒன்றுதான். சிலர் புறநானூற்றில் உள்ள 356-ஆம் பாடலை இயற்றியவர் தாயங்கண்ணனார் என்று கூறுவர்.
பாடலின் பின்னணி: உலகத்து மக்களெல்லாம் முடிவில் அடையும் இடம் சுடுகாடுதான்.  அச்சுடுகாடு மக்களுக்கு எல்லாம் முடிவிடமாகி அவர்களை வெற்றி காண்கிறது. ஆனால், சுடுகாட்டை வென்றவர்கள் யாருமில்லை என்று கூறி வாழ்க்கையின் நிலையாமையைப் புலவர் கதையங் கண்ணனார் இப்பாடலில் நினைவு கூர்கிறார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்                                            5

என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே
.


அருஞ்சொற்பொருள்: 1. களரி = கலர் நிலம்’ காடு. 2. கூகை = கோட்டான் (ஆந்தை); பேழ் = பெருமை; பேழ்வாய் = பெரியவாய். 3. ஈமம் = பிணம் சுடுவதற்கு அடுக்கும் விறகடுக்கு; விளக்கு = ஒளி. 4. மஞ்சு = வெண்மேகம் (இங்கு வெண்மேகம் போன்ற புகையைக் குறிக்கிறது); முதுகாடு = சுடுகாடு. 6.  சுடலை = சுடுகாடு; நீறு = சாம்பல். 7. புறன் = புறம் = முதுகு.

கொண்டு கூட்டு: முதுகாடு பரந்து, போகி, அஞ்சுவதன்று; கண்ணீர் அவிப்ப, உலகத்துத் தானாய்க் காண்போர்க் காண்பறியாது எனக் கூட்டுக.

உரை: களர் நிலம் பெருகிக் கள்ளி முளைத்தது. பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தாலும் சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை வரவழைக்கிறது. இறந்தவர்களை மனத்தால் விரும்புபவர்கள் அழுவதால் சொரிந்த கண்ணீர், எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டிலுள்ள சாம்பலை அவிப்ப, எல்லாரையும் வெற்றிகண்டு உலகத்து மக்கட்கெல்லாம் தானே முடிவிடமாகிய சுடுகாடு,  தன்னை வெற்றி காண வல்லவர்களைக் கண்டதில்லை.
சிறப்புக் குறிப்பு: இப்பாடல்  ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தது என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும் வேறு சிலரும் கூறுகின்றனர். இப்பாடலில், மகள் கேட்டு வருவதோ, அவளைத் தர மறுப்பதோ கூறப்படாததால் இப்பாடல் ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தது அன்று என்பது இந்நூலாசிரியரின் கருத்து. இப்பாடலும் இதை அடுத்துவரும் எட்டுப் பாடல்களும் நிலையாமையைக் கூறும் ‘பெருங்காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

355. ஊரது நிலைமையும் இதுவே?


355. ஊரது நிலைமையும் இதுவே?

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடல் மிகவும் சிதைந்துள்ளதால் பொருள் விளங்கவில்லை.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே; மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி                              5
. . . . . . . . . . . . .

அருஞ்சொற்பொருள்: 1. ஞாயில் = பகைவரை நோக்கி அம்பு எய்துவதற்காக மதில்களில் அமைக்கப்பட்ட துளைகள்; கிடங்கு = அகழி. 2. உகளுதல் = ஓடித் திரிதல் . 4. மையல் = மயக்கம்; தன்னையர் = தமையன்மார். 5. ஆர் = ஆத்தி; கடு= விரைவு.

உரை: இவ்வூர் மதிலில் ஞாயில்கள் இல்லை; அகழியில் நீரில்லை. ஆகவே, அகழிகளில் நீர் இல்லாததால் கன்றுகள் மேய்ந்து திரிகின்றன.  இந்த ஊரின் நிலையும் இதுதான். இவள் தந்தை தன்  பெண்ணின் திருமணத்தைப் பற்றி எண்ணிப் பாராமல் அறியாமை என்னும் மயக்கத்தில் உள்ளான்.  இவள் தமையன்மார் கண்ணுக்கினிய ஆத்திமாலையையும் விரைந்து ஓடும் குதிரைகளையும்டைய கிள்ளி ….

354. நாரை உகைத்த வாளை


354. நாரை உகைத்த வாளை

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓரூரில் இருந்த அழகிய இளம்பெண் ஒருத்தியை மணம் செய்துகொள்ள விரும்பி மற்றொரு ஊரிலிருந்து ஒருதலைவன் வந்தான்.  அப்பெண்ணின் தந்தை அவளை அவனுக்குத் தர மறுத்துப் போருக்கு ஆயத்தமானான். போருக்குப் போகுமுன் வேலை நீராட்டுவது மரபு.  அம்மரபிற்கேற்ப, வேலை நீராட்டுவதற்கு வீரர்கள் பலரும் வந்தனர்,  போர் தொடங்கப் போவது உறுதியாயிற்று.  இந்த அழகிய பெண்ணின் இளமையும், மகிழ்ச்சி நிறைந்த பார்வையும் இவ்வூர் அழிவதற்குக் காரணமாகிவிடுமோ என்று புலவர் பரணர் வருந்தி இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
கயலார் நாரை உகைத்த வாளை                                                        5

புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே.                                             10


அருஞ்சொற்பொருள்: 1. அரைசு = அரசு (அரசன்); தலைவருதல் = தோன்றுதல்; ஆனா = அமையாத. 2. நிரைத்தல் = ஒழுங்காக நிறுத்தல்; காழ் = காம்பு; எஃகம் = வாள், வேல் போன்ற படைக் கருவிகள். 3. புரையோர் = பெரியோர் (போரில் சிறந்த பெரியோர்). 4. அமர்தல் = பொருந்துதல். 5. ஆர்தல் = உண்ணுதல்; உகைத்தல் = செலுத்துதல். 6. ஒய்தல் = விட்டு நீங்குதல். 7. கவின் = அழகு. 8. சுணங்கு = தேமல்; அணந்து = அண்ணாந்து, நிமிர்ந்து; ஏந்தல் = உயர்ச்சி. 9. இறை = சந்து  (உடல் உறுப்புகள் சேரும் இடம், மூட்டு); பணை = பருத்த. 10. பிணை = பெண்மான்.

கொண்டு கூட்டு: எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்; மடந்தை மடநோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல் எனக் கூட்டுக.

உரை: அரசர்கள் போரிடுவதற்கு வந்தாலும் அடங்காதவன் இப்பெண்ணின் தந்தை. நன்றாகக் காம்போடு பொருந்திய வேலை போருக்குமுன் நீராட்டுவதற்கு, போரில் சிறந்த பெரியோர்கள் வந்து கூடியவுடன் இப்பெண்ணின் தந்தையும் அவர்களுடன் சென்றான்.  வயல்கள் சூழ்ந்த கழனிகட்கு வாயிலாக அமைந்த நீர்நிலையில்,  கயல் மீனை உண்ணும் நாரையால் துரத்தப்பட்ட வாளைமீன்களை நீரில் விளையாடும் பெண்கள் பிடித்துத் தம் வளமுடைய வீடுகளுக்கு எடுத்துச் செல்வர்.  தேமல் பரந்து உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் இளமுலைகளும் பெரும் சந்துகள் பொருந்திய மூங்கில் போன்ற தோள்களுமுடைய இப்பெண்ணின் மான் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையால் இவ்வூர் தன் அழகை இழக்கும் நிலை வருமோ? 
சிறப்புக் குறிப்பு: நாரையால் துரத்தப்பட்ட வாளைமீன் நீராடும் பெண்களின் கையில் சிக்கிக் கொண்டதுபோல், இவ்வூர் அழகை இழந்தால் இப்பெண் அரசர்களுக்கு அல்லாமல் வேறு யாராவது ஒருவனை மணந்துகொள்ளும் நிலை வரலாம் என்ற பொருளும் இப்பாடலில் மறைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

‘நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்’ என்பதிலிருந்து போர் நடைபெறப்போவது உறுதி என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கிறது.

353. ’யார் மகள்?’ என்போய், கூறக் கேள்!


353. ’யார் மகள்?’ என்போய், கூறக் கேள்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 57-இல் காண்க.
பாடலின் பின்னணி:  அழகிய அணிகலன்களை அணிந்து அழகுடன் நடந்து செல்லும் இளம்பெண் ஒருத்தியைக் கண்ட இளைஞன் ’இவள் யார்?’ என்று புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரைக் கேட்பது போலும் அதற்கு அவர் பதிலளிப்பது போலும் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.

ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த                        
பொலம்செய் பல்காசு அணிந்த அல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
தருமணல் இயல்வோள் சாயல் நோக்கித்
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை                                5

வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
யார்மகள் என்போய் கூறக் கேள்இனிக்
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்                    10

தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
. . . . . . . . . . . . . .
செருவாய் உழக்குக் குருதி ஓட்டிக்
கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு                           15

பஞ்சியும் களையாப் புண்ணர்
அஞ்சுதகவு உடையர்இவள் தன்னை மாரே.

அருஞ்சொற்பொருள்: 1. ஆசு = குற்றம்; கம்மியன் = பொற்கொல்லன்; மாசு = குற்றம்; புனைதல் = செய்தல். 2. பொலம் = பொன். 3. ஈகை = பொன்; கண்ணி = மாலை; இலங்குதல் = விளங்குதல்; தைஇ = அணிந்து, சூடி. 4. தருமணல் = புதிதாகக் கொண்டுவந்து பரப்பப்பட்ட மணல்; இயலல் = அசைதல் (நடத்தல்); சாயல் = அழகு. 5. விளர்த்தல் = வெளுத்த. 6. ஆனா = அமையாத. 8. போர்பு = நெற்போர். 9. நாள் = விடியற்காலை; கடா = எருது; நனந்தலை = அகன்ற இடம்; குப்பை = குவியல். 10. அல்குதல் = தங்குதல்; பதம் = உணவு; அல்கு பதம்= (சில நாட்களுக்கு ) வைத்திருந்துண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவு. 14. செரு = போர்; உழக்குதல் = வெல்லல். 15. கதுவாய் = வடுப்படுதல்; எஃகம் = வாள், வேல் போன்ற படைக் கருவிகள். 16. பஞ்சி = பஞ்சு (புண்ணில் கட்டிய கட்டு). 17. தகவு = தகுதி. 18. தன்னைமார் = தமையன்மார்.

உரை: குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பல பொற்காசுகளைக் கொண்ட மேகலையை அணிந்து, ஓளியுடன் விளங்கும் பொன்மாலையைத் தலையில் அணிந்து, புதுமணல் பரப்பப்பட்ட தரையில் நடந்து செல்பவளின் அழகைக் கண்டு, தேரை நிறுத்திவிட்டு, வெறித்த பார்வையுடையவனாய் ‘இவள் யார் மகள்?’ என்று கேட்கும் போரில் வெல்லும் தலைவ! இப்பொழுது நான் கூறுவதைக் கேள்! 

இவள், பழங்குடிகள் நிறைந்த ஊருக்குத் தலைவனின் மகள். அத்தலைவன், குன்று போன்ற பல நெற்போர்களை எருதுகளைக்கொண்டு விடியற்காலை போரடித்து, அகன்ற இடத்தில் குவித்த நெல்லை, சிலநாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாக வலிய வில் வீரர்களுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவன்.  முன்னாள், இவளை மணந்துகொள்ள விரும்பி வந்த வேந்தர்களை, இவள் தமையன்மார்  போரில் வென்று, குருதிப் பெருகி ஓடச் செய்து,  நுனி முரிந்த வேலோடு, தங்கள் புண்களில் கட்டிய கட்டுக்களை நீக்காமல், காண்பவர் அஞ்சும் தகுதியுடையவர்கள்.

சிறப்புக் குறிப்பு: இச்சிறிய பாடலில், பெண்ணின்  அழகையும், அவள் செல்வத்தையும், அவளை விரும்பிவந்தவனின் வீரத்தையும், தொல்குடியின் தலைவனாகிய தந்தையின் வளத்தையும் வண்மையையும், தமையன்மாரின் போர்த்திறமையையும் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் நயம்படக் கூறியிருப்பது பாராட்டத் தக்கது.

352. உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளான் !


352. உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளான் !  

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓருரில் அழகிய இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவளை மணந்துகொள்ள விரும்பிய வேந்தன் மிகுந்த செல்வத்தை அப்பெண்ணின் தந்தைக்குத் தருவதாகக் கூறினான். ஆனால், அவள் தந்தை அதை ஏற்க மறுத்துவிட்டான். அவள் தமையன்மார் போர்வெறி கொண்டவர்கள். இதைக் கண்ட பரணர் இப்பாடலைப் பாடியுள்ளார்.  இப்பாடல் மிகவும் சிதைந்துள்ளதால் தெளிவாகப் பொருள் காண்பது அரிதாக உள்ளது.

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


தேஎங்கொண்ட வெண்மண்டையான்
வீங்குமுலை . . . . . கறக்குந்து
அவல்வகுத்த பசுங்குடையால்
புதல்முல்லைப் பூப்பறிக்குந்து
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்                               5

குன்றுஏறிப் புனல்பாயின்
புறவாயால் புனல்வரையுந்து . . . .  .
. . . . . . . . . . . . . . . நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம்                               10

கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை இவளே
விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையின்
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறுகோல் உளையும் புரவியொடு . . .  . . .                      15

. . . . . . . . . . . . . .யாரே.


அருஞ்சொற்பொருள்: 1. தேம் = கள்; மண்டை = கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரம். 2. கறக்குந்து = கறக்கும். 3. அவல் = பள்ளம். 4. புதல் = புதர்; பறிக்குந்து = பறிக்கும். 5. வள்ளி = தண்டு. 7. புறவாய் = மதகு; வரைதல் = நீக்கல். 8. நொடை = விலை; நறவு = கள். 9. மா = பெரிய; வண் = வண்மை (வளம்). 10. உரை = புகழ். 12. சினை = கிளை; விரிசினை = விரிந்த கிளை; துணர் = பூங்கொத்து; நாகு = இளமை. 13. சுணங்கு = தேமல்; மா = கரிய. 15. உளைதல் = மிக வருந்துதல்.

உரை: இவ்வூரில் உள்ள பெண்கள், கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெண்ணிறமான பாத்திரத்தில், மாட்டின் பருத்த முலைகளிலிருந்து பாலைக் கறக்கிறார்கள்; புதரில் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்து குழியுள்ள ஓலைக்குடையில் நிரப்புகிறார்கள்; அல்லித்தண்டை வளையலாக அணிகிறார்கள். அவர்கள் நீர்நிலையை அடுத்த மணற்குன்றுகளில் ஏறி, நீரில் பாய்வதால், மதகுகள் வழியே நீர் வெளியேறுகிறது.  கள்ளை விலைப் பொருளாகக்கொண்ட, மிகுந்த வளமுள்ள தித்தனின் வெண்ணெல் விளையும் வயல்களை வேலியாகக்கொண்ட உறந்தையைப் போன்ற புகழ் மிகுந்த அணிகலன்களைக் கொடுத்தாலும், இப்பெண்ணின் தந்தை ஏற்றுக்கொள்ள மாட்டான்.  இவள், விரிந்த கிளைகளையுடைய இளம் வேங்கை மரத்தில் கொத்துக் கொத்தாகப் பூத்து ஒளியுடன் திகழும் பூக்களைப் போன்ற நுண்ணிய பல தேமல்களையும் கரிய முலைக்காம்புகளையுமுடையவள்.  இவள் தமையன்மார், சிறிய கோலுக்கு மிகவும் வருந்தும் குதிரைகளையுடயவர்கள்… இவளை மணம் செய்துகொள்பவர் யாரோ?

சிறப்புக் குறிப்பு: தித்தனின் நாடு மிகுந்த வளமுடையதாக இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது. சோழர் ஆட்சிக்குள் வருமுன்,  உறையூர் தித்தன் முதலியோரின் பாதுகாப்பிலிருந்தது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.