Monday, April 18, 2011

246. பொய்கையும் தீயும் ஒன்றே!

பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு. பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்த ஒல்லையூர் நாட்டைச் சோழமன்னன் ஒருவன் வென்று தன் ஆட்சிக்குள்ளாக்கிக்கொண்டான். பிறகு, பூதப்பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் ஒல்லையூர் நாட்டைச் சோழனிடம் இருந்து வென்று, மீண்டும் பாண்டிய நாட்டோடு சேர்த்துக்கொண்டான். அந்த வெற்றியால், பூதப்பாண்டியன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றுப் பாடல் - 71 பூதப்பாண்டியனால் இயற்றப்பட்டது. பெருங்கோப்பெண்டு பூதப்பாண்டியனின் மனைவி.

பாடலின் பின்னணி: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
5 காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
10 உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
15 நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

அருஞ்சொற்பொருள்:
3. சூழ்ச்சி = ஆராய்ச்சி; 4. கொடுங்காய் = வளைந்த காய்; போழ்ந்து = வெட்டி. 5. காழ் = விதை; விலர் = வெண்ணிறம். 6. அடையிடை = பானையின் அடிப் பக்கத்தில்; பிண்டம் = சோற்ற உருண்டை. 7. சாந்து = துவையல்; அட்ட = சமைத்த. 8.வேளை = வேளைக் கீரை; வெந்தை = நீராவியில் வேகவைக்கட்டது; வல்சி = சோறு. 9. பரல் = சிறிய கல்; வதிதல் = தூங்குதல். 10. உயவல் = வருத்தம்; மாதோ – அசைச் சொல். 11. பெருங்காடு = சுடுகாடு; கோடு = மரக் கொம்பு (விறகு). 12. தில்ல – விழைவின் கண் கூறப்பட்டது. 15. நள் = செறிந்த.

கொண்டு கூட்டு: பல்சான்றீரே, உயவற் பெண்டிரேம் அல்லேம்; பொய்கையும் தீயும் ஓர் அற்றே.

உரை: பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத, பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

No comments: