பாடியவர்: குட்டுவன் கீரனார் (240). கீரன் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குட்ட நாட்டைச் சார்ந்த குட்டுவர் குடியில் பிறந்தவராகையால் குட்டுவன் கீரனார் என்று அழைக்கப்பட்டார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் இறந்ததால் வருந்திய குட்டுவன் கீரனார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
5 காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன்; எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
10 ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே.
அருஞ்சொற்பொருள்:
1. ஆடு = வெற்றி; புரவி = குதிரை. 2. வாடா = அழியாத; யாணர் = புது வருவாய். 3. அருகா = குறையாத. 4. கோடு = பக்கம்; அல்குல் = இடை; தொடி = வளையல். 5. உய்ப்ப = கொண்டு போக. 7. பொத்த = பொந்துள்ள; போழ் = பிளவு; கூகை = ஆந்தை. 8. பயிர்தல் = அழைத்தல். 9. பறந்தலை = பாழிடம்.; அல்கி = தங்கி. 10. நைத்தல் = வருத்தல். 12. கல்லென் சுற்றம் = ஆரவாரமான சுற்றம்; கையழிந்து = செயலிழந்து. 14. படு = புகு.
உரை: வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும், குறையாத வருவாய் உள்ள நாடும் ஊரும், பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன். பக்கங்கள் அகன்று, குறுகிய இடையையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு ஆய் அண்டிரன் காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாத கூற்றுவனின் கொடிய செயலால் விண்ணுலகம் அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, “சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும் கள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து அவனுடைய உடல் தீயால் எரிக்கப்பட்டது. பொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது, ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள் இப்பொழுது தம் உடலை வாட்டும் பசியுடன் வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
Tuesday, April 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment