Tuesday, May 10, 2011

247. பேரஞர்க் கண்ணள்!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர் (247, 262). ஆலம் என்ற சொல்லுக்கு நஞ்சு என்று பொருள். ஆலவாய் என்பது சிவனுடைய வாயைக்குறிக்கும். மற்றும், மதுரையில் உள்ள சொக்கநாதப் பெருமானின் கோயிலுக்கும் பெயர் ஆலவாய். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு ஆலவாயர் என்று பெயர். இப்புலவர், மதுரையைச் சார்ந்தவராகையால், இவர் பெற்றோர் இவருக்கு ஆலவாயர் என்று பெயரிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றியுள்ள இரண்டு பாடல்கள் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (87, 296), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (51, 361) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: பெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைக் கண்ட பேராலவாயர், தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல்.

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
5 நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
10 இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1. முளித்தல் = காய்தல்; முளிமரம் = காய்ந்த மரம். 2. கானவர் = வேடர்; பொத்துதல் = தீ மூட்டுதல்; ஞெலிதல் = கடைதல்; ஞெலி தீ = கடைந்த தீ; விளக்கம் = ஒளி. 3. வைகல் = தங்கல்; எடுப்பி = எழுப்பி. 4. முன்றில் = முற்றம்; சீக்கல் = கீறிக் கிளறுதல். 6. அஞர் = வருத்தம்; பேரஞர் = பெரும் வருத்தம். 7. தெருமரல் = மனச் சுழற்சி; அம்ம – அசைச் சொல். 8. கடி = காவல்; வியன் = அகலம். 9. சிறுநனி = சிறிது நேரம்; தமியள் = தனித்திருப்பவள்; 10. புறங்கொடுத்தல் = போகவிடுதல்.

கொண்டு கூட்டு: அணங்குடை முன்றிலின் இளமை புறங் கொடுத்துப் பெருங்காடு நொக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக.

உரை: பெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ, தனியளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.

சிறப்புக் குறிப்பு: “முழவுகண் துயிலா” என்பது “ஓயாது ஒலிக்கும் முரசு” என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

No comments: