Tuesday, April 5, 2011

238. தகுதியும் அதுவே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 162-இல் காண்க.
பாடலின் பின்னணி: வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் வந்த நேரத்தில் வெளிமான் இறந்தான். அவருடைய ஏமாற்றத்தையும் இரங்கத்தக்க நிலையையும், கண்ணில்லாத ஊமை ஒருவன் மழைபெய்து கொண்டிருக்கும் பொழுது அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு இப்பாடலில் ஒப்பிடுகிறார்

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
5 காடுமுன் னினனே கட்கா முறுநன்;
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே;
ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே;
10 வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென் மன்ற;
என்னா குவர்கொல் என்துன்னி யோரே?
மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
15 ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே.

அருஞ்சொற்பொருள்:
2. சேவல் = ஆண் கழுகு; பொகுவல் = பெண்கழுகு; வெரு = அச்சம். 3. கூகை = கோட்டான். 4. பெட்டாங்கு = விரும்பியவாறு; ஆயம் = கூட்டம். 5. முன்னுதல் = அடைதல். 6. தொடி = வளையல்; கவின் = அழகு. 7. கடும்பு = சுற்றம்; பையெனல் - மந்தக் குறிப்பு. 8. தோடு = தொகுதி. 9. மருப்பு = கொம்பு. 10. பேது = வருத்தம்; உறுப்ப = செய்ய. 11. படல் = இரத்தல். 12. மன்ற – அசைச் சொல். 13. துன்னியோர் = நெருங்கியவர்கள் (சுற்ரத்தார்). 14. மாரி = மழை; மரம் = மரக்கலம். 15. ஆர் = நிறைவு; அஞர் = துன்பம்; ஆரஞர் = பெருந்துன்பம். 16. ஊமன் = ஊமை. 17. நீத்தம் = கடல். 18. அவலம் = துன்பம்; மறு = தீமை; மறுகல் = சுழலல். 19. தவல் = இறப்பு.

உரை: பிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட தாழியின் குவிந்த மேற்புறத்தில், சிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாத, வலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடி இருக்கின்றன. பேய்கள் விருப்பத்தோடு திரிகின்றன. கள்ளை விரும்பும் வெளிமான் அத்தகைய இடுகாட்டை அடைந்தான். அவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து, பாணர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர். தொகுதியாக இருந்த முரசுகள் கிழிந்தன. பாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன. சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன். என் சுற்றத்தார் என்ன ஆவர்? மழைபொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையன் பெருந்துயரம் அடைந்தது போல் ஆனேன். எல்லையைக் காணமுடியாததும் பெரிய அலைகளுடையதும் ஆகிய அக்கடலினும் கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட இறப்பதே நமக்குத் தகுந்த செயலாகும்.

சிறப்புக் குறிப்பு: கண்ணில்லாத ஊமன் கடலில் விழுந்ததோடு தன் நிலையை ஒப்பிடும் உவமை மிகவும் நயமுடையதாக உள்ளது.

“பாகர்கள் இல்லாததால் யானைகள் தந்தங்களை இழந்தன” என்பது யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றைப் பயிற்றுவிக்கும் பாகர்கள் இல்லாததால், யானைகள் பயனில்லாமல் போயின என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

No comments: