Monday, April 18, 2011

243. யாண்டு உண்டுகொல்?

பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார் (243). இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இப்பாடலில், இவர் “தொடித்தலை விழுத்தண்டு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருப்பதால், இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: இப்பாடலில், தொடித்தலை விழுத்தண்டினார் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியதாக அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். ஆனால், டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இப்பாடலுக்கு பாடப்பட்டோன் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஆகவே, இப்பாடலில் பாடப்பட்டவன் யார் என்பது ஆய்வுக்குரியது.
பாடலின் பின்னணி: தம் இளமையில் தாம் விளையாடிய விளையாட்டுகளையும், இன்பமான நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் கழிந்தனவே என்று தாம் வருந்துவதை, புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
5 மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
10 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

அருஞ்சொற்பொருள்:
1. இனி = இப்பொழுது; திணிதல் = செறிதல். 2. பாவை = பொம்மை; தைஇ = சூடி. 3. கயம் = குளம்; பிணைந்து= கோத்து. 4. தழீஇ = தழுவி; தூங்கல் = ஆடல். 5. ஆயம் = கூட்டம். 6. சினை = கிளை. 8. பிதிர் = திவலை (சிதறும் நீர்த்துளி). 9. குட்டம் = ஆழம். 12. விழு = சிறந்த; தண்டு = தடி, ஊன்றுகோல். 13. இரும் = இருமல்; மிடைதல் = கலத்தல்.

உரை: இப்பொழுது நினைத்தால் வருந்தத்தக்கதாக உள்ளது. மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினோம். உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிகுந்த, கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழவும், நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்” எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை இப்பொழுது எங்குள்ளதோ? பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் பெரிய முதியவர்களாகிய எம்முடைய இந்த நிலை இரங்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு: தன் இளமை கழிந்துபோனதை நினைத்துப் புலவர் தம் வருத்தத்தை வெளிப்படுத்துவதால், இப்பாடல் கையறுநிலையைச் சார்ந்ததாயிற்று.

No comments: