Monday, April 18, 2011
241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 13-இல் காண்க.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 127-இல் காண்க.
பாடலின் பின்னணி: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். இவர், புறநானூற்றில் 12 பாடல்களில் ஆய் அண்டிரனைப் பாடியுள்ளார். ஆய் அண்டிரன் இறந்ததையும் அவனுடன் அவன் மனைவியரும் இறந்ததையும் கண்ட இவர், ஆய் அண்டிரன் மறு உலகம் அடைந்ததாகவும் அங்கு இந்திரன் அவனை வரவேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
5 ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே.
அருஞ்சொற்பொருள்:
1. திண் = செறிந்த, வலிய; தண் =குளிர்ந்த; தார் = மாலை. 2. ஒண் = ஒளி பொருந்திய; தொடி = வளையல். 3. வச்சிரம் = இந்திரனின் படைக்கருவி; தடக்கை = பெரிய கை; நெடியோன் = இந்திரன். 4. போர்ப்பு = போர்த்தல்; கறங்கல் = ஒலித்தல். 5. ஆர்த்தல் = ஒலித்தல்; விசும்பு = ஆகாயம்.
உரை: வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment