பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: இளவெளிமான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 162-இல் காண்க.
பாடலின் பின்னணி: பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளலிடம் பரிசுபெறச் சென்றார். அச்சமயம், வெளிமான் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நிலையிலும், அவன் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசு அளிக்குமாறு தன் தம்பியாகிய இளவெளிமானிடம் கூறி இறந்தான். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரின் தகுதிக்கேற்ப பரிசளிக்கவில்லை. வெளிமானை நம்பித் தான் வந்ததையும், அவன் இறந்ததால் அவர் அடைந்த ஏமாற்றத்தையும், இளவெளிமான் தகுந்த பரிசளிக்காததால் அவர் கொண்ட சினத்தையும் இப்பாடலில் புலவர் பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்துகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
நீடுவாழ்க என்றுயான் நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாள் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5 வித்திய பனுவல் விளைந்தன்று நன்றுஎன
நச்சி இருந்த நசைபழுது ஆக
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
10 ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
15 ஆங்குஅது நோயின் றாக ஓங்குவரைப்
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
எலிபார்த்து ஒற்றா தாகும் மலிதிரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
நனியுடைப் பரிசில் தருகம்
20 எழுமதி நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே.
அருஞ்சொற்பொருள்:
1. நெடுங்கடை = நெடிய வாயில் (தலைவாயில்). 4. உரவு = அறிவு. 5. பனுவல் = நூல். 6. நச்சி = விரும்பி; நசை = விருப்பம். 7. குழிசி = பானை; பயத்தல் = உண்டாதல், கிடைத்தல். 8. அளியர் = இரங்கத் தக்கவர்; ஆர்தல் = உண்ணுதல். 9. திறன் = காரணம், கூறுபாடு, வழி. 10. உருப்ப = வெப்பமுண்டாக; எருக்குதல் = வருத்துதல். 12. முதுவாய் = முதிய வாக்கினையுடைய; ஒக்கல் = சுற்றம். 13. களரி = களர் நிலம்; பறந்தலை = பாழிடம். 13. அம் – சார்ந்து வரும் இடைச் சொல். 14. விடலை = வீரன். 16. ஒற்றுதல் = வீழ்த்துதல். 18. மண்டுதல் = விரைந்து செல்லுதல்; இழும் - ஒலிக்குறிப்பு. 19. நனி = மிக; தருகம் = கொண்டு வருவோம். 20. மதி – முன்னிலை அசைச் சொல்; துணிபு = தெளிவு; முந்துறுத்துதல் = முதலாதல்; முன்னிட்டுக் கொள்ளுதல்.
கொண்டு கூட்டு: நசை பழுதாக அழற் பயந்தாங்குக் கூற்றம் துணிய விடலை மாய்ந்தனனெனவும், மகளிர் வளைமுறி வாழைப் பூவின் சிதறவெனவும் துணிபு முந்துறுத்து நெஞ்சமே எழு எனக் கூட்டுக.
உரை: நீ நெடுங்காலம் வாழ்க என்று வெளிமானின் நெடிய வாயிலை அணுகிப் பசியுடன் பாடிய காலத்தில், வெளிமான் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்நிழல் போன்றவனாக இருந்தான். அவன் யாரிடத்தும் பொய் கூறாத அறிவுடையவன். அவன் செவிகளில் நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப், பரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போயிற்று. அது, சோற்றுப் பானையில் சோற்றை எதிர்பார்த்துக் கைவிட்ட பொழுது, அங்கு சோற்றுக்குப் பதிலாக நெருப்பு இருந்தது போல் ஆகியது. இரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத அறமற்ற கூற்றுவன், கொள்ளத்தகாத வெளிமானின் உயிரைக் காரணமின்றிக் கொல்லத் துணிந்தான். அதனால் வருந்திய அவன் மகளிர், முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்டனர். அவர்கள் கையில் அணிந்திருந்த வளையல்கள் வாழைப் பூப்போல் சிதறின. முதிய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்தினர். கள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில், ஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்தான். கூற்றுவன் நோயின்றி இருப்பானாக! உயர்ந்த மலையில், புலி தாக்கிய யானை தப்பிப் போனால், தனக்கு இரையாக புலி எலியைப் பிடிக்க விரும்பாது. அலைகள் மிகுந்த கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம். நெஞ்சே! துணிவை முன்வைத்து சோர்வடையாமல் எழுவாயாக.
சிறப்புக் குறிப்பு: ”பனுவல்” என்ற சொல் நல்லோர் கூறிய நல்லுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விடலை என்ற சொல்லுக்கு “வீரன்” என்று பொருள் கொள்ளலாம். ; அல்லது, ”பதினாறு வயதிலிருந்து முப்பது வயதிற்கு உட்பட்டவன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, வெளிமான், முதுமை அடைவதற்கு முன்பே இறந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகப் புலவர் பெருஞ்சித்திரனார் “வெள்வேல் விடலை” என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.
Tuesday, April 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment