பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (245). கோட்டம்பலம் என்பது கேரள மாநிலத்தில் உள்ள ஓரூர். இப்பொழுது இவ்வூர் அம்பலப்புழை என்று அழைக்கப்படுகிறது. சேரமான் மாக்கோதை கோட்டம்பலத்தில் இறந்ததால், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்று அழைக்கப்பட்டான். புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத்தீயில் வைத்து எரிக்கப்பட்டது. அவள் உடல் தீக்கிரையாகியதைத் தன் கண்ணால் கண்ட மாக்கோதை, தாங்க முடியாத துயரம் அடைந்தான். அந்நிலையில், “காதலியின் பிரிவால் அடையும் துன்பம் எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் அது அத்துணை வலியது அன்று. என் மனைவியின் உடல் தீயில் எரிந்ததை நான் கண்ணால் கண்ட பிறகும் இன்னும் உயிரோடு உள்ளேனே.” என்று மாக்கோதை புலம்புவதை இப்பாடலில் காண்கிறோம்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
5 ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே.
அருஞ்சொற்பொருள்:
1. யாங்கு = எவ்வளவு, எவ்வாறு; எனைத்து = எவ்வளவு. 2. செகுத்தல் = அழித்தல்; மதுகை = வலிமை. 3. களரி = களர் நிலம்; பறந்தலை = பாழிடம். 4. பொத்துதல் = தீ மூட்டுதல், மூடுதல்; ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு விறகு அடுக்கப்பட்ட படுக்கை. 5. அழல் = தீக்கொழுந்து; பாயல் = உறங்குதல். 6. ஞாங்கர் = இடம் (மேலுலகம்).
கொண்டு கூட்டு: பாயல் சேர்த்தி, இன்னும் வாழ்வல்; என்இதன் பண்பே.
உரை: காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?
Monday, April 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment