Tuesday, April 5, 2011

236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 8-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாரி இறந்த பிறகு, பாரி மகளிர் இருவரையும் தகுந்தவர்களுக்கு மணம் முடிப்பாதற்காகக் கபிலர் அரும்பாடு பட்டார். கபிலர், பாரியின் மகளிரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விச்சிக்கோ, இருங்கோவேள் என்னும் இரு குறுநிலமன்னர்களை வேண்டினார். அவர்கள் இருவரும் பாரியின் மகளிரை மணந்துகொள்ள சம்மதிக்கவில்லை. அந்நிலையில், கபிலர், பாரி மகளிரை தனக்கு நன்கு தெரிந்த அந்தணர் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வடக்கிருந்து உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது. கபிலர், பாரி மகளிரை அந்தணர் குடும்பத்தில் ஒப்படைக்காமல், அவ்வையாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பாரி இறந்த பொழுது தானும் இறக்கவில்லையே என்று கபிலர் வருந்துகிறார். பாரி இறந்த பொழுது அவனுடன் தன்னையும் அழைத்து செல்லாததால் தான் அடைந்த வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார். மற்றும், இப்பிறவியில், பாரியும் தானும் உடலும் உயிரும் போல் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுபோல், அடுத்த பிறவியிலும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விதியை வேண்டுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசை ஆகும்
மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; நீஎற்
5 புலந்தனை யாகுவை புரந்த யாண்டே;
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
10 இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!

அருஞ்சொற்பொருள்:
1. கலை = ஆண் குரங்கு; முழவு = முரசு; மருள் – உவமை உருபு; பெரும்பழம் = பலாப்பழம். 2. சிலை = வில்; கெழு = பொருந்திய; அல்குதல் = தங்குதல்; மிசை = உணவு. 5. புலந்தனை = வெறுத்தாய்; புரத்தல் = பாதுகாத்தல். 6. ஒல்லாது = பொருந்தாமல். 8. இனையை = வருந்தச் செய்தாய்; மற்று – அசைச் சொல். 9. மேயினேன் = கூடினேன், பொருந்தினேன். 10. உம்மை = மறுபிறவி. 12. பால் = வினை, விதி.

உரை: குரங்கு கிழித்து உண்ட, முரசுபோல காட்சி அளிக்கும் பெரிய பலாப்பழம் வில்லுடன் கூடிய குறவர்கள் சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும். மலைகள் பொருந்திய நாட்டையுடைய, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி! நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில், “இங்கே இருந்து வருக” எனக் கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

No comments: